மனித புதைகுழிகளில் அகழ்வுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

மனிதபுதைகுழிகளில் காணப்படும் மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் மற்றும் வளங்களை இலங்கை அரசு வழங்கவேண்டும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம்சட்டத்தினை  ஏற்றுக்கொள்வது குறித்து இலங்கை ஆராயவேண்டும் என்றும் அந்த ஆணைக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் தொடர்பான குழுவின் 29வது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த அமர்வில் ஐ.நாவின் குழு பலவந்தமாக காணாமல் போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் 25 பக்க அறிக்கை முன்வைக்கின்றது.

நபர் ஒருவர் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் மனித உரிமையை மிக மோசமாக மீறும் செயல் என்பதை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் நினைவூட்டியுள்ளது.பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து சமூகங்களையும் பாதித்துள்ளது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.