மண்சரிவு அபாயத்தில் சிக்கியுள்ள 21 குடும்பங்கள்!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  இடைவிடாது பெய்து வரும் பலத்தமழை காரணமாக, லிந்துலை கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள 24 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பு பகுதி தற்போது கடும் மண் சரிவு அபாயத்தில் சிக்கியுள்ளது.

இப்பகுதியில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 66 பேர் அச்ச நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.  கடந்த 2012 ஆம் ஆண்டில் இதே பகுதியில் பாரிய அளவில் மண்மேடு சரிந்து விழுந்திருந்த போதிலும், அந்த மண் இதுவரை வரை அகற்றப்படாது இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது குடியிருப்பின் பின்புறத்தில் ஊற்று நீர் வடிந்து வருவதால் எப்போது வேண்டுமானாலும்  மண்சரிவு ஏற்படக்கூடிய நிலை காணப்பட்டு வருகிறது.  நேற்று முன்தினம் கூட  தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால்  குடியிருப்பு பின்புறத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் இரவு நேரங்களில் பாரிய உயிர்சேதங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகமும், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உடனடியாக கவனம் செலுத்தி,பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய பாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.