மட்டக்களப்பு – கிண்ணியடியில் மீன் வளர்ப்புத் திட்டம் என்ற போர்வையில் மண் அகழ்வு : மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிண்ணியடி பகுதியில், மீன் வளர்ப்பு திட்டம் என்ற பெயரில் மண் அகழ்வை மேற்கொள்வதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் இன்று வியாழக்கிழமை (8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் காணியில் 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ், பாரிய அளவில் குழிகள் தோண்டப்பட்டு, அகழப்பட்ட மண் வெளியே கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து அப்பகுதி இளைஞர்கள் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதையடுத்து திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (1) மீண்டும் மண் அகழ்வை ஆரம்பித்ததை எதிர்த்து கிராம மட்ட அமைப்புக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்று,  அப்பகுதி மக்கள் ஒன்று கூடி, அகழப்பட்ட மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை வீதியில் வழிமறித்து, “எங்கள் மண் வளத்தை அழிக்காதே”, “சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது” எனும் சுலோகங்களுடன், திட்டத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான், தமிழரசு கட்சியின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளரும், மற்றொரு இளைஞரும் பொலிஸாருடன் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதனால் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து மக்கள், கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்யக் கோரி போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்னர், பொலிஸார் இருவருக்கும் எதிராக வழக்கு பதிந்து பிணையில் விடுவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில், மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில், பிரதேச செயலாளர், நில அளவை திணைக்களம், சுரங்கப் பணியகம் , மாவட்ட நன்னீர் மீன் வளர்ப்பு அலுவலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன் முடிவாக, அடுத்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் வரை மண் அகழ்வை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரதேச மக்கள் அங்கு கொட்டகை அமைத்து அமர்ந்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “பொலிஸாரின் அடாவடிக்கு எதிராகவும், சுற்றுச்சூழல் அழிவை தடுக்கவும் இந்த போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும்” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.