மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியை புனர்நிர்மானம் செய்து, அதில் இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்கள் என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை (09) பதித்தனர்.
இதன்போது இந்த கல்வெட்டை காவல்துறையினர் பலவந்தமாக அகற்றி, அங்கு புனரமைப்பு செய்யவிடாமல் தடுத்ததையடுத்து பொதுமக்களுக்கும் காவல்துறையிருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
அத்துடன், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உட்பட 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1990 செட்டெம்பர் 9ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் முதலான பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்குட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 பொதுமக்கள் இராணுவத்தினராலும் ஊர்காவல் படையினராலும் ஒட்டுக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டனர். இதன் 34வது நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நினைவேந்தலை முன்னிட்டு சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டவர்களின் தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான முன்னாயத்த வேலைகளை செய்துகொண்டிருந்தனர்.
இதன்போது “1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொதுமக்கள்” என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நினைவுத்தூபியில் பதித்துக்கொண்டிருந்தனர்.
அவ்வேளை அங்கு சென்ற கொக்குவில் காவல்துறையினர் “இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஒட்டுக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட” என குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டை பதிக்க முடியாது என கூறி கல்வெட்டை பதிக்கவிடாமல் தடுத்துள்ளனர்.
இதன்போது அங்கிருந்த பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.