“மக்கள் மேலான போரை” 1983 யூலையில் ஈழத்தமிழர்கள் மேல் பிரகடனப்படுத்திய சிறிலங்காவே பிரிவினைவாதி பயங்கரவாதி -சூ.யோ. பற்றிமாகரன்

எதிர் வரும் யூலை 23ம் திகதியுடன் 1978ம் ஆண்டு அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம்நிறைவேற்று அதிகாரமுள்ள சிறிலங்காவின் அரசுத்தலைவராக தன்னை வெளிப்படுத்திய ஜே. ஆர்.ஜயவர்த்தனா, ஈழத்தமிழர்கள் மேல் போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என பகைநாடொன்றுடன் போர் பிரகடனம் செய்வது போல் போர்ப்பிரகடனம் செய்து “மக்கள் மேலான போரை” 1983 யூலையில் பிரகடனப்படுத்தி 42 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
சிறிலங்காவின்  நிறைவேற்று  அதி காரமுள்ள அரசுத் தலைவராக 1978 முதல் பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரானஜேஆர். ஜயவர்த்தனா, அன்று முதலே தனது அமைச்சர்களுடன் இணைந்து மக்கள் மேலான இந்தப் போருக்கு ஆயத்தம் செய்தார் என்பது வரலாறு.
1979 இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் சிறிலங்காப் படையினர் தாம் சந்தேகிக்கும் ஈழத்தமிழரைக் கண்ட இடத்தில் சுடவும், சுட்ட இடத்தில் எரிக்கவும் சட்டத்தகுதியை உருவாக்கினார். 11.07.1979 இல் தன்னுடைய மருமகனும் சிறிலங்காவின் பிரிகேடியருமான வீரதுங்காவை யாழ்ப்பாணத்துக்கான இராணுவத் தளபதியாக நியமித்து, அவசரகால நிலையையும் பிறப்பித்தார்.
இதன்  விளைவாக, இன்பம் செல்வரத்தினம் என்னும் இரண்டு தமிழ்ச் செயற்பாட்டாளர்களைப் படையினர் கைது செய்து மண்டைதீவு சந்தியில் இனப்படுகொலை செய்து போட்டதோடு, ஆறு தமிழ் இளைஞர்களைக் கைது செய்த பின்னர் உயிரோடு உள்ளனரா இல்லையா என்ற விபரம் இல்லாமல் செய்தனர்.
ஜயவர்த்தனா தனது உறவினரான பிரிகேடியர் கொப்பே கடுவவை 1979 டிசம்பருக்குள் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் விழிப்புணர்வுள்ள இளையவர்களையும் கொன்றழிக்கும் கட்டளையுடன் யாழ்ப்பாணத்து க்கு  அனுப்பினார். ஆயினும், அந்த கொன்றழிப்புக் கால எல்லையுள்ள கடிதத்தின் ஒளிப்பிரதியை தமிழீழ விடுதலைப்புலிகள் கவர்ந்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பி வைத்த உத்தியினால், அந்த இனப்படுகொலைத் திட்டத்தை ஜே. ஆர். மாற்றிக் கொண்டார்.
அதே வேளை, அவரின் அமைச்சரான சிறில் மத்தியூ, 1970கள் முதலே ஈழத்தமிழின அழிப்புக்கான பல செயற்திட்டங்களை உருவாக்கி வந்தார். அதில் ஒன்றாக திட்டமிடப்பட்டதுதான் 1983 யூலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து தயாரித்த இனஅழிப்புக்கான பாதைவரைபுடன், கொழும்பில் வாழ்ந்த ஈழத்தமிழர்களின் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், அனைத்தையும் கொள்ளையடித்து எரிக்கும் ஈழத்தமிழர் பொரு ளாதார உட்கட்டுமானங்களை அழிக்கும் திட்டம்.
இதனுடன் சேர்த்து, ஈழத்தமிழரை ஈவிரக்கமின்றி நடுத்தெருவில் பட்டப்பகலில் சிங்களக் கூட்டத்தினர் கூடி உயிருடன் எரித்த கொடூரங்கள். ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் வதிவிடத்துக்கு அண்மையிலேயே சைக்கிளில் சென்ற தமிழரை நிர்வாணமாக்கி பெற்றோல் ஊற்றி எரித்து, அவர் நெருப்பில் துடிக்கையில் கத்திகளால் வெட்டி வெட்டி மகிழ்ந்த கொடு மையைச் செய்தனர். வானில் பயணித்துக் கொண்டிருந்தவர்களை உயிரோடு கொளுத்தி எரித்தமை போன்ற எத்தனையோ கொடூரங்களால் கொழும்பு எரிகாடாக காட்சியளித்தது.
சிறிலங்கா அரசாங்கம் சிறைப்பிடித்து வைத்திருந்த ஈழத்தமிழர்களின் செயற்பாட்டாளர் கள் 53 பேரைச் சிறையினுள்ளேயே இனப் படுகொலை செய்த வரலாறும் பதிவாகியது. இந்தச் சிங்கள பயங்கரவாதிகள் பயணிப்பதற்கான வாகனங்கள், எரிப்பதற்கான எரிபொருட்கள் அனைத்தும் அரசாங்க வாகனங்களாகவும், அரசாங்க எண்ணெய்க்கு தங்களில் இருந்து வழங்கப்பட்டதாகவும் அமைந்தது, எவ்வளவு தூரத்துக்கு யூலை ஈழத்தமிழர் இனஅழிப்பை ஜே. ஆரும் அவருடைய அமைச்சர்களும் திட்டமிட்டு நிறைவேற்றினர் என்பதற்கான சான்றுகளாயின.
இந்த மக்கள் மேலான போரின் ஒரு அங்கமாகவே, 6வது அரசியல் சட்டத்தை ஜே. ஆர். உருவாக்கி, ஒரு கட்சி ஆட்சி முறையுள்ள நாடாக இலங்கையை மாற்றினார் என்பது அனைத்துலக ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில், ஜே. ஆர். தலைமையிலான சிறிலங்காவே இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வந்த ஈழத்தமிழர்களிடம் இருந்து சிங்கள நாடாகச் சிறிலங்காவை பிரிவினை செய்தார் என்பது வரலாறு. ஆனால், அன்றிலிருந்து இன்று வரை, சிறிலங்காவும் அதன் ஆதரவு வல்லாண்மைகளும் மேலாண்மைகளும், ஈழத்தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்க முயன்ற தமிழீழ விடுதலைப் புலிகளையே பிரிவினைகோரினார்கள் என வர லாற்றுத் திரிபு செய்து வருகின்றனர்.
அவ்வாறே பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்து, ஒரு இலட் சத்திற்கும் அதிகமான ஈழத்தமிழர்களை 27 அகதி முகாம்களில் புகலிடம் பெற வைத்து, இலங்கை முழுவதும் தமிழர்களை இனஅழிப்பு செய்த இந்த சிறிலங்காவின் மக்கள் மேலான போரின் பயங்கரவாதத்துக்கு எதிர் விளைவாக, ஈழத்தமிழர்களின் தேசியப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக மக்கள் போராட்டம் என்னும் கொரில்லா போர்முறை வழி இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள், மரபுவழிப் படையாகச் சீருடை அணிந்த முப்படைகளையும் உருவாக்கிய வரலாற்று நிகழ்வு உள்ளது.
இதனையும் சிறிலங்காவும் அதன் ஆதரவு நாடுகளும் தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என வரலாற்றுத் திரிபு செய்து உண்மையை மறைத்து வருகின்றனர். 1983 சிறிலங்காவின் ஆடி இனஅழிப்பின் பொருளாதார இழப்பு பெறுமதி 29 மில்லியன் அமெரிக்க டொலர்கள். ஆனால், 1983 ஜனவரி முதல் யூலை வரை, சிறிலங்கா படைகள் ஈழத்தமிழர்களின் தாயகமாகிய இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்திய பொருளாதார இழப்பு 706 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
அதே நேரத்தில், யூலை 1983க்குப் பின்னர் 1988 டிசம்பர் வரை, வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் சிறிலங்காப் படைகள் ஏற்படுத்திய பொருளாதார இழப்பு 385 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இந்தப் புள்ளி விபரங்களை ஜோன் எம். ரிச்சர்ட்சன் மற்றும் எஸ். டபிள்யூ. ஆர். தி. ஏ. சமரசிங்க இணைந்து வெளியிட்ட “சிறிலங்காவின் இனமுரண்பாட்டின் பொருளாதார பரிணாமத்தை அளவிடல்” என்ற ஆய்வுக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.
இவை சிறிலங்காவின் மைய நோக்கம், ஈழத்தமிழர்களின் அனைத்து உட்கட்டுமானங்களை யும் உயிர்வாழ்தலையும் அழிக்கும் நோக்கம் என்பதைத் தெளிவாக்குகிறது. இதனை உறுதிப் படுத்தும் ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் வாய்மொழிச் சான்றாக, இலண்டனின் டெய்லி டெலிகிராப்புக்கு 11.07.1983இல் ஜே. ஆர். அளித்த பேட்டியில் அவர் கூறிய, “நான் தமிழர்களின் அபிப்பிராயம் குறித்து கவலைப்பட மாட்டேன். எங்களுக்கு இப்பொழுது அவர்களை நினைக்க முடியாது.
அவர்களது உயிரையோ அவர்களது கருத்துக்களோ குறித்து எங்களுக்கு அக்கறை யில்லை. எவ்வளவுக்கு வடக்கில் அழுத்தங்களை ஏற்படுத்துகின்றோமோ, அவ்வளவுக்கு இங்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவர். உண்மையில், நான் தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சி அடைவர்” என்ற அவரின் வார்த்தைகள் உள்ளன.
இவ்விடத்தில், 1979இல் ஜே. ஆரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்காவும் அல் ஜசீராவில் கடந்த ஆண்டுப் பேட்டியில், “ஈழத்தமிழர்களுக்கு பலஸ்தீனியர்களுக்கு நாடுகள் ஆதரவாக இருப்பது போல இல்லை, இதனால் நாங்கள் பலஸ்தீன மக்களை ஆதரிப்பது போல ஆதரிக்க மாட்டோம்” என்று கூறியதை நினைத்துப் பார்க்கையில், சிங்களத் தலைமை என்றுமே பிரிவினையாளராகவும் பயங்கரவாதிகளாகவுமே தொடர்வர் என்பது உறுதியாகிறது.
இதனை அனைத்துலகிலும் வாழும் ஈழத் தமிழர்கள் உலக மக்களுக்குத் தெளிவுபடுத்தி, யார் உண்மையான பிரிவினைவாதிகள், யார் பயங்கரவாதிகள் என்பதை அவர்கள் தெளிவு பெறச் செய்ய வேண்டும்.