‘மக்கள் மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம்’ என்று கனேடிய தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷூடன் இன்று (21) இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ’30 வருடகால யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு மக்கள் இன்னும் முறையான கவனம் செலுத்தப்படாமல் வாழ்கின்றனர்’.
‘கடந்தகால அரசாங்கங்கள் தமிழ் மக்களைப் பெரும்பாலும் புறக்கணித்தன’. ‘தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தப் பாகுபாடுமின்றி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளது’ என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘ஊழல், மோசடி மற்றும் இனவாதம் அற்ற ஒரு நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்’ என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியதாக அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வடக்கில் உள்ள பல சமூகங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகவும், 40 சதவீதமானோர் இன்னும் தற்காலிக கொட்டில்களில் வசிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
‘நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
‘எந்த வடிவத்திலும் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்பட மாட்டாது’ ‘அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குழப்ப மீண்டும் இனவாதப் பிரிவுகளைத் தூண்டிவிட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன’ என்றும் ‘அதற்கு கனடா இடமளிக்க கூடாது’ என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.



