மக்களின் வாக்குரிமையை பாதுகாக்குமாறு பவ்ரல் அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்

பொலிஸ்மா அதிபர் குறித்து ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வர வேண்டும் என  தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் வலியுறுத்தியுள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமானதாக நடைபெறுவதை உறுதி செய்து மக்களின் வாக்குரிமையை பாதுகாக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஆறு வருடங்களாக உள்ளுராட்சி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான உரிமை பொதுமக்களிற்கு வழங்கப்படாத அதேவேளை, உள்ளுராட்சி அமைப்புகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழலில் ஐந்து வருடங்களிற்கு பின்னர் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பம் தொடர்பில் பல நிச்சயமற்ற தன்மைகள் உருவாகியுள்ளன.

அரசமைப்பின் போதாமை காரணமாக யாராவது இந்த நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் நிலை ஏற்படுவதற்கு ஜனாதிபதி என்ற வகையில் நீங்கள் இடமளிக்க கூடாது.

பொலிஸ்மா அதிபர் இல்லாதமையினால் தேர்தலை நடத்துவது பாதிக்கப்பட்டால் ,தேர்தலை நடத்தும் உங்களின் கடமையை நிறைவேற்றுவதற்காக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்ற அடிப்படையில் உங்களுக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி பொலிஸ்மா அதிபரை நியமிக்க வேண்டும்.அந்த வகையில் குறித்த கடமையை செய்வீர்கள் என நம்புகிறோம்.

அதேபோல், சுதந்திரமான – நீதியான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.