போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், இந்த மாத இறுதிக்குள் கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
உயிர்க்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (5) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் வட மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் குறிப்பிடுகையில், 15 – 18 வரையிலான வயதுடைய 36 சிறுவர்கள் உயிர்க்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகி நீதிமன்றத்தால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார். அவர்களில் சிறுமிகளும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கூறுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி செ.பிரணவன், மாணவர்களிடையே உயிர்க்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார். சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்க்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.