பொதுவேட்பாளர் என்ற இராஜதந்திரம் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன?: ஆய்வாளர் செல்வின் மரியாம்பிள்ளை செவ்வி…

தேர்தல் கள நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த தேர்தலில் அவர்கள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்த போகின்றார்கள் என்பது தொடர்பாக பிரபல அரசியல் பொருளாதாரஆய்வாளரும் சமூக செயற்பாட்டாளருமான செல்வின் அவர்கள் அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலை ‘இலக்கு’ வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

பொது வேட்பாளர் என்ற இராஜதந்திரம் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன? –  ஆய்வாளர் செல்வின் மரியாம்பிள்ளை ஜனாதிபதி தேர்தல் தமிழ் மக்களை பொறுத்த வரையில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றது?

இந்த ஜனாதிபதி தேர்தல் முக்கியத்துவம் என்பதை விட இதை நாங்கள் கையாளுவதற்காக  தெரிவு செய்த அணுகுமுறை தான்  முக்கியம். இலங்கையில் ஒன்பது ஜனாதிபதி தேர்தல்கள் நடந்திருக்கின்றன. யாரோ ஒரு ஜனாதிபதிக்கு அன்றைய அரசியல் தலைமைகள் சொல்லு கின்றபடி வாக்கு போட்டிருக்கின்றோம். பின்பு அவர்களை நம்பி ஏமாந்து போயிருக்கிறோம். இம்முறை அவை எல்லாவற்றையும் மாற்றி நாங்கள் ஒரு புதிய அணுகுமுறை ஒன்றை தேர்ந் தெடுத்திருக்கின்றோம்.

அதாவது இது ஒரு வகையில் அவர்களை பணிய வைப்பது என்பதை விட எங்களது மக் களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி ஈழத் தமிழ் மக்களினுடைய விடுதலைக்கான செல்நெறியில் எப்படி ஒரு புதிய மாற்று அணுகுமுறையை கண் டறியலாம் என்பதற்கான ஒரு விடயமாக இது மாறியுள்ளது.

நாங்கள் எங்களுக்கென ஒரு பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதன் மூலம் அவருக்கு எங்கள் வாக்குகளை செலுத்துகின்ற ஒரு விடயம் இம்முறை இங்கு தீர்மானிக்கப்பட்டுள் ளது.

இது தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சம்பந்தமான ஒரு பரந்த கலந்துரையாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது. தமிழ் மக்கள் எல்லா மட்டங்களிலும் இப்பொழுது ‘ஏன் இந்த பொது வேட்பாளர், நாங்கள் பொது வேட்பாளருக்கு வாக்கு போடத்தான் வேண்டுமா, ஏனைய வேட் பாளருக்கு போடக்கூடாதா என பேசத்து வங்கி இருக்கின்றார்கள்.  இது கடந்த ஒரு 30, 35 வருடங்களாக நாங்கள் காத்திருந்த ஒரு அரசியல் பேசுகின்ற உரைநிலையிலிருந்து வெளிவந் திருக்கின்றது.

ஒரு ஜனநாயக அரசியல் பாரம்பரியத்திற்கு இது மிக முக்கியமானது.  ஆனால் இதை புரிந்து கொள்ள மறுக்கின்ற தமிழ் தரப்புகளும் உள்ளன. இன்னும் ஒரு தலைப்பினர் ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் அவர் களுடன் பேரம் பேசி நாங்கள் எங்களுக்கு ஏதாவது விடயத்தை  அடைந்து கொள்ளலாம் என்று  இருக்கின்றார்கள். ஆனாலும் இந்த பொது வேட்பாளருக்கான பலம் தமிழ் மக்கள் மத்தியில் விரிந்திருக்கின்றது.

கிராமங்கள் மத்தியில் எங்களுக்கு சவால் இருக்கிறது. ‘தமிழ் தேசியம் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள், பொது வேட்பாளரை நியமிக் கின்றீர்கள். எங்களுடைய கிராம தேசியம் அல் லது எங்களுடைய வாழ்வாதாரம் வாழ்க்கை பிரச்ச னைகள்,சமூக ஏற்றத்தாழ்வுகள் இவைகளை எல்லாம் கையாளக்கூடியதான தேசியமாக புதிய தமிழ் தேசியம் மாற்றமடையுமா?” என்ற ஒரு கேள்வியை அவர்கள் வைத்திருக்கின்றார்கள். அவ்வாறு   ஒரு வகையான சூட்டை பிரசாரக் களம் பெற்றிருக்கின்றது. அதே வேளையில் தென்னிலங்கையில் மிகுந்த தடுமாற்றமான செய்திகள் தான் வந்து கொண்டிருக்கிறது.

ஒரு வேட்பாளருடைய தரப்பு இன்னும் ஒரு வேட்பாளரை ஆதரிக்கப் போகிறேன்  என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற அளவுக்கு தென்னிலங்கையின் நிலைமைகள்  இருக்கின்றன. தென்னிலங்கையில் குறிப்பாக மகிந்த ராஜபக்ச  தரப்பினர் அவர்கள் தங்களை பாதுகாப்பதற்காக எந்த தரப்பு வரவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றார்கள். ஏனைய இரண்டு தரப்பிலும் முதன்மையாக இருக்கின்ற  அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் அவர்களில் கூட இப்பொழுது அணி மாற்றங் கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரணிலை மூன்றா வதாக தள்ளிவிட்டு சஜித்தும் அனுரகுமாரவும் போட்டிக்கு நிற்பது, இல்லை சஜித்தை பின்னுக்கு தள்ளிவிட்டு அனுரகுமாரவும் ரணிலும் போட்டிக்கு நிற்பது போன்ற தோற்றம் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன. என்னுடைய அணுகுமுறையில் சஜித் வரக்கூடாது என்பதில் கணிசமான தரப்பினர் கடுமையாக வேலை செய்வது போன்று உணர்கின் றேன். சஜித் வரக்கூடாது என்பதில் அரசியல் பின்னணி மட்டும்தானா அல்லது சமூக பின்னணி இருக்கா என்பதும் எனக்கு புரியவில்லை. அதே வேளையில் சில வேளைகளில் பக்கத்து பிராந்திய வல்லரசு சஜித்தை ஆதரிக்கலாம் என்ற ஒரு நிலை. இல்லையென்றால் சஜித் வந்து தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்ற வாக்குறுதி அப்படியான விடயங்கள் கூட செல்வாக்கு செலுத்துகின்றதா என்ற கேள்வி இருக்கின்றது.

ஆனால் அனுரகுமார வரக்கூடாது என்பதில் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர் கள் எல்லோரும் மிக கவனமாக இருக்கின்றார்கள். இவ்வாறு தென்னிலங்கை ஒட்டுமொத்த குழப் பமாக இருக்கின்றது. எனவே இந்த குழப்பத்துக்குள் அறுவடை செய்யக்கூடிய எந்த விடயமும் தமிழ் மக்களுக்கு இல்லை. தமிழ் மக்கள் தங்களுக்கான ஒரு திரட்சியான  ஆதரவை கட்டி எழுப்புவதன் மூலமும் தங்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான அரசியல் கலந்துரையாடலை முன்னெடுப்பதன் மூலமும் எதிர்கால செல்நெறியை வகுப்பதற்கான ஒரு தந்திரோபாய பாதையில் பிரவேசிக்கின்றார்கள் என்பதுதான் நிதர்சனம்

வடக்கு கிழக்கில் தமிழ் பொது வேட் பாளருக்கான  ஆதரவு மக்கள் மத்தி யிலே எவ்வாறு உள்ளது?

மக்கள் மத்தியில் ஆதரவு என்றால் 60 ,40 வீதம் என்று தான் சொல்ல முடியும். ஏனென் றால் மக்களைத் திரட்டுவது என்பது மிகவும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக  இந்த கூட்டங்களுக்கு வருவதற்கு மத்தியதர வர்க்கம் ஆர்வம் கொள்வதில்லை.   மத்திய வர்க்கத்தின் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் அதற்கு குறைந்த மக்கள் தான் வருகின்றார்கள், அல்லது திரட்டப்படுகின்றார்கள். அதிலும் குறிப்பாக அவர்களுக்கான ஊக்குவிப்புகள் கொடுத்து போக்குவரத்து உணவு, அதைவிட மேலதிகமாக அவர்கள் திரும்பிப் போகும்போது அவர்களுக்கு ஏதாவது ஒரு நிதி கொடுத்து மக்களை அழைத்து வந்து  கூட்டத்தைச் சேர்க்கின்ற ஒரு கலாச்சாரம் இலங்கையில் மிகவும் ஆழமாக வியாபித்துள்ளது.

அத்தகைய நிலைமையில் தமிழ் பொது வேட்பாளருக்கு மக்களை அழைக்கும் போது, கொள்கை ரீதியாக அல்லது இதில் மிகத் தெளிவு கொண்ட மக்கள் தாங்களாகவே வருகின்றார்கள். அல்லது ஆர்வம் உள்ளவர்கள் போக்குவரத்து வாய்ப்பு கிடைக்கும் என்றுசொன்னால் அதை பயன்படுத்தி வருகின்றார்கள்.  செல்வாக்குள்ள பண பலம் மிக்க அரசியல் கட்சிகள் செய்வது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கான அணியினரால் மக்களுக்கு எதுவும் கையூட்டு கொடுத்துவிட முடியாது. நாங்கள் அந்த கலாச்சாரத்துக்கு போக தயாராக இல்லை. தமிழ் மக்களையும்   வாக்குகளுக்காக விலை போவதற் கான கலாச்சாரத்துக்குள் இழுக்கத் தயாரில்லை என்பதில் உறுதியாக நிற்கின்றோம்.

மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டிருந்தனர். மட்டக் களப்பில் கூட்டங்களை  நடத்துவதற்கு ஆரம்பத்தில் பொது வேட்பாளர் அணியினர் அச்சப்பட்டார்கள்.  ஒரு பக்கத்தில் பிள்ளையான் மற்ற பக்கத்தில் சாணக்கியன் அணியினர் இருந்தனர். ஆனால் அதையும் கடந்து  மட்டக்களப்பில் மக்கள் கூடியுள்ளனர். அதே நேரம் மக்களும் சுதந்திரமாக அரசியல் செய்யத் துவங்கி இருக்கின்றார்கள். வடபகுதியில் அதிக கூட்டங்கள் நடந்தன. பெரிய கூட்டங்கள் என்று கிளிநொச்சியில் நடந்தது. கிட்டு பூங்காவில் ஒரு கூட்டம் பெரிய அளவில் நடைபெற்றது. அதைவிட கிராமங்களில் சிறிய அளவில் கூட்டங்கள் நடந்த போது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

‘செப்டம்பர் 21 தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் எவ்வாறு எங்களை மீளுருவாக்கம் செய்யப் போகிறோம். தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு என்பது இன்னும் ஒரு பரிமாணத்தில் புலம்பெயர் தேசத்தவர்களையும்  நாட்டில் உள்ளவர்களையும் இணைத்து எவ்வாறு இன்னும் ஒரு தேசிய பரிமாணத்திற்கு வரும். அதன் மூலம் தமிழ் மக்களுடைய தேசத்தை கட்டி எழுப்புவதற்கான பலன் கொண்ட ஒரு சமூக இயக்கமாகவும் அரசியல் இயக்கமாகவும் மாறும் என்ற விடயங்கள் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது. சிலபேர் பல லட்சம் வாக்குகள் வரவேண்டும்  என்று  எதிர்பார்க்கின்றனர். அது வரவேண்டும் ஆனால் வராவிட்டால் அது எங்களுக்கு தோல்வி அல்ல. தமிழரசு கட்சியின் முடிவு சம்பந்தமாக கடுமையான சங்கடங்கள் வந்துள்ளன என்று நினைக்கின்றேன். தமிழரசு கட்சியினுடைய எதிர் காலம் சம்பந்தமாக தேர்தலுக்கு பின்பு தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள்  முடிவெடுப்பார்கள்.

சர்வதேச சமூகத்தினுடைய கவனத்தை ஈழத் தமிழர் பிரச்சினையின்பால் ஈர்ப்பதற்கு இந்த பொது வேட்பாளர் எந்த வகையில் உதவப் போகின்றார்?

சர்வதேச சமூகம், சிங்கள சமூகம், தமிழ் சமூகம் கூட சிறுபிள்ளை விளையாட்டு என்பது போன்று தான் ஆரம்பத்தில் யோசித்தார்கள். அல்லது தாங்கள் நினைக்கின்றவரை ஜனாதிபதி ஆக்குவதற்கு தமிழ் மக்களுடைய வாக்குகள் அவர்களுடைய எண்ணிக்கையை கூட்டக்கூடிய ஒரு முக்கிய விடயமாக இருக்கும். எனவே இந்த விடயத்தில் தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து தாங்கள் நினைக்கின்றவர்களை மேலே கொண்டுவர வேண்டும் என்ற பல வாதங்கள் வைக்கப்பட்டன. ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது முன்னாள் நீதியரசரும் பிரதம முதலமைச்சருமான விக்னேஸ்வரன் ஐயா வீட்டை போய் கதைக்கும் போது ‘உங்களால் தமிழ்  வேட்பாளர் ஒருவரை போட முடியுமா உங்களுக்கு அப்படியெல்லாம் ஒருவரை கண்டுபிடிக்க முடியுமா?’ என்று மிகவும்

ஒரு ஏளனமாக  கேட்டதாக தகவல் இருக்கின்றது. அதே போல்தான் எங்களுடைய தமிழ் தேசிய கட்சிகளுக்கும்  தமிழ் பொது வேட்பாளருக்கு எதிரான மனநிலை  இருந்தன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, ராஜதந்திரிகளுக்கு கூட ஒரு  நம்பிக்கை வந்துள்ளது. புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்கள் தமிழ்ப்பொது வேட்பாளருக்கு பெரும் ஆதரவை வழங்கிக்கொண்டு இருக்கி றார்கள். அவர்கள் பொது வேட்பாளர் குறித்து தாங்கள் வாழும் தேசத்தில் ராஜதந்திர ரீதியாக கூறுவார்கள், கையாளுவார்கள். அது இன்னுமொரு பரிணாமத்தில் விரிவடையும்.