பொதுத் தேர்தலை ஒத்திவையுங்கள்: ஜனாதிபதியிடம் ரணில் கோட்டாவிடம் கோரிக்கை

நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர், கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளமையுடன் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாரென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடு பெரும் அச்ச சூழ்நிலைக்குள் சிக்கியுள்ள இந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் அவலப்படும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைத்துவிட்டு நாட்டை ஆபத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் அரசு இறங்கவேண்டும் என்றும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தாம் தயாராக உள்ளார் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.