பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சிக்குள் குழப்பம் – அரசியலில் இருந்து சம்பந்தன் ஓய்வு

சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என தமிழிழரசுக் கட்சியின் தேர்தல் வேட்பாளர் ஆர் சம்பந்தன் (86) தெரிவித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான சம்பந்தன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார் எனினும் 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தார். ஆனால் தற்போது அவர் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் பங்குபற்றியிருந்தன. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென்னிலங்கையில் போட்டியிடுவது எனவும், அதற்காக கம்பக மற்றும் கொழும்பு மாவட்டங்களை தெரிவுசெய்வதெனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னனியின் தலைவர் மனோ கணேசனுடன் கூட்டணி அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனிடையே, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா ஒரு வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் த. சிர்த்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கட்சி ஈபிஆர்எல்எப் உடன் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தீர்மானத்துள்ளது. இந்த கூட்டணிக்கு அனந்தி சசிதரனும் தனது ஆதரவுகளை வழங்கியுள்ளார்.

அதேசமயம், தமிழத் தேசிய மக்கள் முன்னனி தனித்து தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கணிசமாக வாக்குகளை இந்த கட்சி பெற்றதால் இந்த பொதுத்தேர்தலில் இக்கட்சி தொடர்பில் நம்பிக்கைகள் அதிகரித்துள்ளதாக வடபகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.