பொதுமக்கள் தற்போதைய ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதால் பொருத்தமான உரிய வேட்பாளர்களை நிறுத்தாவிட்டால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதான கட்சிகள் முற்றாக நிராகரிக்கப்படலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழவில் சிவில் சமூக பிரதிநிதிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
40க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து பொருத்தமான வேட்பாளரை பொதுமக்கள் தெரிவு செய்வதற்கான 10 அம்ச அளவுகோல்களை மக்களிற்கு அறிமுகப்படுத்தியுள்ளன.
சுத்தமான கரங்களை கொண்ட ஊழலில் ஈடுபடாத அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் தெரிவு செய்யவேண்டும் என்பது குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன உள்ளதால் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தங்கள் வேட்பாளர் தெரிவு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேர்மையற்ற ஊழல் அரசியல் பின்னணி கொண்டவர்களை இம்முறை பொதுமக்கள் நிச்சயமாக நிராகரிப்பார்கள் என தெரிவித்துள்ள அவர் அவ்வாறான அரசியல் கட்சிகள் வரலாற்றின் குப்பைதொட்டிக்குள் தூக்கி வீசப்படும் நிலையை ஏற்படுத்துவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வேட்பாளரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது குறித்து மாத்திரமல்லாமல் பொதுமக்கள் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த சிறந்த அறிவுள்ளவர்களை அனுப்புவது குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்ற விரும்பினால் அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளை தெரிவு செய்யக்கூடாது என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்