இலங்கையின் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக் கான ஏற்பாடுகள் மிக விரைவாக முன் னெடுக்கப் பட்டுவருகின்றன. வடக்கு கிழக்கில் வாக்கு அரசியலை மையப்படுத்திய வகையில் தமிழர்களின் மண்டைகளை கழுவும் செயற்பாடு கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திற்காக வும் சுயநிர்ணய உரிமைகளுக்காகவும் தமிழர்களின் தாயக கனவிற்காகவும் போராடுவதாக கூறுகின் றவர்கள். இன்று இலங்கையின் பாராளுமன்ற கதிரைகளை பிடித்துக்கொண்டு அதில் வரும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் இன்று தேவையாகவுள்ளது தமிழ் தேசிய உணர்வு இதனை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வருவதற்காக பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் தமிழர்கள் இன்று முக்கிய காலப்பகுதியில் நிற்கின்றனர்.தென்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஒரு பாரிய போராட்டத்தின் விளைவாக ஒரு போராட்ட பின்புலத்தில் தோற்றம்பெற்ற கட்சியொன்று ஆட்சியமைப் பதற்கான முயற்சிகளை முன்னெடுத்த நிலையில் கடந்த 35வருடமாக தமது உரிமைகளுக்காக போராடிய தமிழ் மக்கள் இன்று தமது தீர்விற்கான கோரிக்கையினை முன்னிறுத்தியுள்ளனர்.
கடந்த 35வருடத்திற்கு மேலாக போராடிய ஒரு சிங்கள கட்சி அதே கொள்கையுடனும் வீரியத்துடனும் தொடர்ச்சியான பல்வேறு ஜன நாயக ரீதியான போராட்டங்களையும் ஆயுத ரீதியான போராட்டங்களையும் கிளர்சியையும் முன்னெடுத்து இன்று இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினை பிடித்துள்ளது.சிங்கள மக்களினால் குறித்த கட்சியின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாத போதிலும் தொடர்ச்சியாக தமது குறிக்கோளில் உறுதியாகயிருந்து ஆட்சி அதிகாரத் தினை பிடித்துள்ளனர்.
ஆனால் இந்த நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தொடர்ச்சியாக ஏமாற்றப் பட்டுவரும் ஒரு இனமாக தமிழினம் காணப் படுகின்றபோதிலும் காலத்திற்கு காலம் தமிழர் கள் மத்தியில் தோற்றம்பெற்ற உறுதியற்ற தலை மைகளும் சுயநல அரசியலும் தமிழர்களை ஏனைய இனங்கள் அடக்கியாளும் நிலைக்கு இட்டுச்சென்றது.
இருந்தபோதிலும் தமிழர்கள் மத்தியில் தோற்றம்பெற்ற ஆயுதப்போராட்டம் தமிழர்களுக்கான வலுவான குரலாகவும் தமிழர்களின் நீடித்து நிலைத்த குறிக்கோளையும் கொண்டிருந்த காரணத்தினால் தமிழர்களின் உரிமைப் போராட் டத்தினை சர்வதேசமே ஏற்றுக்கொள்ளும் நிலை மைகளும் உருவாகியிருந்தது.எனினும் சர்வதேசத்தின் வல்லாதிக்க போட்டிகளும் இலங்கையின் சர்வதேச நாடுகளுக்கு தேவையான முக்கியத்துவதும் தமிழர்களின் உரிமைக்கோசத்தினை மறைத்து இலங்கைக்கு உதவும் நிலைமை ஏற்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் யுத்தம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் இராஜதந்திர ரீதியிலும் அரசியல் ரீதியாகவும் உறுதியான கொள்ளைகையுடன் தமிழர்களின் போராட்டத்தினை முன்கொண்டுசெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இன்று அனைத்தும் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலை மையிலேயே காணப்படுகின்றது.
இந்த நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிக ளின் காலத்தில் மட்டும் தமிழர்களின் உரிமைக்கான கொள்கைகளும்கோட்பாடுகளும் உறுதியாக முன்கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதன் பின்னரான காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசிய அரசியலானது வாக்கு அரசியலாகவும் சுயநல அரசியலாகவுமே காணப்படுகின்றது.ஆயுதப்போராட்டத்திற்கு முந்திய காலத்தில் இவ்வாறான நிலைமைகள் காணப்பட்டதன் காரணமாகவே தமிழ் இளைஞர்கள் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அவ்வாறான நிலை இன்று உருவாகியுள்ள போதிலும் இன்றைய நிலையில் தமிழ் இளை ஞர்களின் போக்குகளும் எதிர்பார்ப்புகளும் என்பது தமிழர்களின் இருப்பினை எதிர்காலத்தில் கேள்விக்குள்ளாக்கிவிடுமோ என்ற அச்ச நிலை மைகள் காணப்படுகின்றன.இவ்வாறான நிலைமையினை இந்த தமிழர் தேசம் எவ்வாறு எதிர் கொள்ளப்போகின்றது என்பதே இன்று உள்ள மிகப்பெரும் சவாலான விடயமாகவுள்ளது.
சிங்கள தேசத்தில் ஊழலுக்கும் அங்கு காணப்பட்ட அடாவடித்தனங்களுக்கும் எதிராக சிங்கள மக்கள் கிளந்தெழுந்து ஆட்சியை மாற்றியுள் ளார்களே தவிர இந்த ஆட்சி மாற்றத்தினால் தமிழர்களுக்கான உரிமையினையோ அல்லது தமிழர்களுக்கான நீதியையோ தேசிய மக்கள் சக்தி போன்ற கட்சிகள் ஒருபோதும் வழங்காது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டது தொடக்கம் இன்றுவரையில் தமிழர்கள் தொடர்பில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்காத நிலையே உள்ளது.எதிர்வரும் காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதனால் தமிழர்கள் சார்ந்து சில உறுதி மொழிகள் வழங்கப்படலாம்.ஆனால் தமிழர்களுக்கான உரிமைசார்ந்த எந்த விடயமும் நடைபெறாது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.ஏன் என்றால் சிங்கள தேசத்தின் டிசைன் என்பது அதுதான்.
இந்த டிசைன் தெரியாமல் ஒரு போராட்ட வடிவத்திற்குள் வாழும் மக்களாகவுள்ள தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள கட்சிகளுக்கு ஆதரவாக எழும் அலையென்பது தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்ககும்.இதனை முளையில் கிள்ளவேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய சக்தி களுக்கு காணப்படுகின்றது. இணைந்த வடகிழக்கில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் இரண்டு மாகாணங்களிலும் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படவேண்டும்.இந்த இருப்பு பாதுகாக் கப்படவேண்டுமானால் தமிழர்களின் அரசியல் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும்.வெறு மனே வாக்கு அரசியல்மட்டும் தமிழர்களின் உரிமையினை பாதுகாக்காது என்பதை அனை வரும் உணரவேண்டும்.
கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரை யில் மூவினங்களும் வாழும் பகுதியாகவுள்ள போதிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நிலையில் அரசியல் என்பது கேள்விக் குறியாகியே வருகின்றது.இலங்கையின் தேர் தல் முறைமையினால் கிழக்கில் தமிழர்கள் அரசியல் ரீதியாக பின்னடையும் நிலையே காணப்படுகின்றது.கிழக்கில் அனைத்து தமிழ் தேசிய அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்படும் காலங்களில் எல்லாம் பிரிந்துநின்று செயற்பட்ட காரணத்தினாலும் சுயநல அரசியல், வாக்கு அரசியல் காரணமாகவும் கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் கேள்விக்குள்ளாகி ஒட்டுக்குழுக்களும் அரசாங்கத்தினை ஆதரிக்கும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து தமிழர்களை விற்றுப்பிழைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக வடகிழக்கு தமிழ் தேசிய அரசியலை வடக்குடன் மட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட சிங்கள தேசத்தின் அரசியல் நிரலினை இலகுவாக அமுல்படுத்தும் நிலைமைகள் ஏற்பட்டுவருகின்றது.வடக்கில் தமிழ் தேசிய அரசியல் நிலைபெறும்போது கிழக்கில் கேள்விக்குட்படுத்தப்படுமானால் கிழக்கு மாகாண மக்கள் தமிழ் தேசிய அரசியலையும் வடகிழக்கினையும் நிராகரிக்கின்றார்கள் என்ற வகையான பிரசாரங்களை தெற்கு கட்சிகளும் பிரதேசவாத கட்சிகளும் முன்னெடுக்கும் நிலை மைகள் உருவாகியிருக்கின்றன.
இதன்காரணமாகவே இந்த தேர்தல் வடகிழக்கு மக்களுக்கு குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு மிக முக்கியத்துவம்வாய்ந்த தேர்தலாக காணப்படுகின்றன.கிழக்கு மக்கள் என்றும் தமிழ்தேசியத்தின் பாதையில் பயணிப்பவர்கள் என்பதை மீண்டும் இந்த நாட்டிற்கு காட்டவேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுகின்றது.இந்த நிலைமைகளை உணர்ந்துசெயற் படவேண்டிய நிலையில் தமிழ் தேசிய கட்சிகளும் இருக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் பல பிரிவுகளாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய சக்திகள் களமிறங்கப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன.இவற்றினை தடுத்து நிறுத்தி அனைவரை யும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது.இது தொடர்பான கோரிக்கை அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் அனைத் தையும் ஒன்றிணைந்து தேர்தலை முகங்கொடுத்து தமிழர் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டிருக்கின்றது.அவ்வாறு செயற்படாவிட்டால் நாங்கள் சிங்கள கட்சிகளை ஆதரிக்கும் நிலையுருவாகும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை-திருகோணமலை மாவட்டங்க ளில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து தேர்தலில் களமிறங்கப்படும்போதே அங்குள்ள தமிழர் பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்கமுடியும்.அதேபோன்று கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கேட்பதன்மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்கமுடியும்.வெறுமனே வாக்கு அரசியலுக்காகவும் சுயநல அரசியலுக்காகவும் பிரிந்துநின்று செயற்படுவதா னது ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களின் இருப்பினையும் தமிழர்களின் தமிழ் தேசிய கோரிக்கையினையும் வலுவிழக்கச்செய்யும் செயற்பாடாகும்.இதனை உணர்ந்து செயற்பட வேண்டிய நிலையில் தமிழர்களும் தமிழ் தேசிய அரசியல் சக்திகளும் உள்ளனர்.இதற்கான அழுத்தங்களை சர்வதேச தமிழர் அமைப்புகளும் சிவில் சமூக கட்டமைப்புகளும் வழங்கவேண்டும்.