சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு கற்று வந்த மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக தமது உயிரை மாய்த்துக் கொண்ட விடயம் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தநிலையில் குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் நான்கு மாணவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் பயின்றுவந்த 23 வயதுடைய குறித்த மாணவன் கடந்த 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்டார்.
குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று, அவரை நிர்வாணமாக்கி பகிடிவதை செய்ததாகவும் அதனால் குறித்த மாணவன் தமது உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அவரின் நண்பர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தநிலையில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த விடயத்துக்கு பிரதமர் உள்ளிட்ட பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான பகிடிவதைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.