இலங்கையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நிலையில், பெருந் தோட்ட மக்களை மையப்படுத்திய பிரசார நடவடிக்கைகளும், தேர்தல் வாக்குறுதிக ளும் கட்சிகளுக்கு ஏற்ப மாறுபட்டு காணப்
படுகின்றன. பெரும்பாலும் சகல கட்சிக ளும் பெருந்தோட்ட மக்களின் வேதனம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்தே கருத்துக்களை முன்வைக்கின்றன. இலங்கை யில் காலத்துக்கு காலம் தேர்தல்கள் இடம் பெறுகின்ற போதிலும் அநேகமான தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான தாகவே காணப்படுகின்றன.
பெருந்தோட்ட மக்களுக்கான தொழிற்சங்கங்கள் என கூறிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் கடந்த காலங்களில் மக்களின் வாக்குகளை பெற்று அவற்றின் அடிப்படையில் மத்திய அரசாங்கத்திடம் பேரம்பேசும் சக்தியாக மாற்ற மடைந்தன. அவர்கள் எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பொறுப்புக்களையும் பெற்றனர். எவ்வாறாயினும் கடந்த ஜனாதிபதி, பாராளு மன்ற தேர்தல்களில் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கை போன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கான ஆதரவு பெருந்தோட்ட மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த காலங்களில் பிரிந்து செயற்பட்ட மலையக அரசியல் கட்சிகள் தற் போது அரசாங்கத்தை (தேசிய மக்கள் சக்தியை) எதிர்ப்பதற்காக மறைமுகமாக கூட்டிணைந்து செயற்படுகின்றன. பொது வெளியில் பிரிந்து செயற்படுவதை போன்று காண்பிக்கும் அரசியல் கட்சிகள் உள்ளுக்குள் இணைந்து செயற் படுவதாக சில அரசியல் ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கடந்த பாராளு மன்ற தேர்தலில் சில கட்சிகள் ‘தங்களுக்கு வாக்களிக்காவிட்டால் மாற்று மலையக கட்சிகளின் பெயரை குறிப்பிட்டு அவற்றுக்கு வாக்களிக்குமாறு’ கோரியிருந்தன.
இது பெருந்தோட்ட மக்களிடையே முக்கிய பேசுபெருளாக வும் மாறியது. இந்தநிலையில் தற்போது உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மாறுபட்ட வாக்குறுதிகளும் முன் வைக்கப்படுகின்றன. வாக்குறுதிகளை வழங்கும் மலையக கட்சிகளின் பட்டியலில் தற்போது ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இணைந்துள்ளது. அத்துடன் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மே தின கூட்டங்கள் மற்றும் பேரணிகளிலும் இவ்வாறான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. சில இடங்களில் பெருந் தோட்ட தொழிலாளர்களுக்கான தொழிற் சங்கங் கள் மே தினக் கூட்டம் என்ற போர்வையில் அரசி யல் கூட்டங்களையே நடத்தியிருந்தன.
வாக்குறுதியின் ஆரம்பம்கடந்த பல தசாப்தங்களாக தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கான வாக்குறுதிகளின் ஆரம்ப புள்ளி அவர்களுக்கான வேதனம் தொடர்பானதாகவே இருக்கும். ஆரம்பத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதன விடயத்தில் கூட்டு ஒப்பந்தம் காணப்பட்டது. தற்போது அந்த ஒப்பந்தமும் இல்லாத நிலையில் வேதன நிர்ணய சபையின் ஊடாக வேதன பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
கடந்த காலம் முதல் தற்போது வரை பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனமே அரசியல் மேடைகளில் முக்கிய பேசுபொருளாக அமைகின்றன. அடுத்தப்படியாக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டம். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என வலுவான கோரிக்கைகள் மேலோங்கியிருந்தன. தங்களது தரப்பே அதனை பெற்றுத்தருமென பல அரசியல் கட்சிகளும் மக்கள் மத்தியில் சவால் விடுத்திருந்தன. எனினும் அந்த தொகையை எளிதில் அடைய முடியவில்லை. நீண்ட போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் அந்த தொகையை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கு வதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கிய போதிலும் அதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
உதாரணமாக 21 நாட்கள் தொழிலுக்கு சமூகமளித்திருக்க வேண்டும். நாளொன்றுக்கு குறிப்பிட்ட அளவான தேயிலையை பறிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட் டன. இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 2024ஆம் ஆண்டு நுவரெலியா – தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் பெருந்தோட்ட தொழிலா ளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1700 ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவரை ஆதாரித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தது. வேதன நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதால் குறித்த தொகையை அறிவித்து அன்றைய தினமே தொழில் ஆணையாளரால் வர்த்தமானி அறிவித்த லும் வெளியிடப்பட்டது. எவ்வாறாயினும் அந்த வர்த்தமானி அறிவித்தல் பின்னர் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் பெருந்தோட்ட தொழிற் சங்கங்களுக்கும் இடையே தொழில் ஆணையாளரின் தலைமையில் பல சுற்று பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. இறுதியாக 1350 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்துக்கு இணக் கப்பாடு எட்டப்பட்டது. மேலதிக 350 ரூபாய் ஊக்குவிப்பு கொடுப்பனவான வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பல பகுதிக ளில் அந்த தொகை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதி
கடந்த பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பெருந்தோட்ட தொழி லாளர்களுக்கு 2500 ரூபாய் வேதனம் பெற்றுக் கொடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய தேசிய மக்கள் சக்தி தற்போது அதனை மாற்றியுள்ளது. ‘மலையக தமிழர்களும் இந்நாட்டு மக்களே, நாட்டின் பொருளாதாரத்துக்காக பரம்பரை பரம்பரையாக பங்களிப்பு செய்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்துக்காக உயிரை உரமாக்கியுள்ளனர். இங்கு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறக்கும் அம்மக்களுக்கு உரிமைகள் இல்லை என்று கூறும் உரிமை எவருக்கும் இல்லை. இந்த நாட்டுக்கு உழைத்து இந்த மண்ணுக்காக உரமாகும் மலையக மக்களின் வாழ்க்கை லயன் வீடுகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கட்டி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுதந்திரமாக இயங்கும் சூழலை நாம் உருவாக்குவோம். கம்பனிகளுடன் பேசி 1700 ரூபாய் வேதனம் கிடைக்க வழி செய்வோம்’ என்று உள்ளூராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு அண்மையில் தலவாக்கலையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். கடந்த காலங்களில் 2500 ரூபாய் பற்றி பேசிய தரப்பினர் தற்போது ‘பேச்சுவார்த்தையின் மூலம்’ 1700 ரூபாய் பெற்று தருவோம் என கூறுவதாக எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. அத்துடன் கடந்த கால தேர்தல் மேடைக ளில் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை, வீடமைப்பு திட்டம் தொடர்பில் கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தி தற்போது அவை தொடர்பில் கருத்துரைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ஏனைய கட்சிகளின் வாக்குறுதிகள்கடந்த காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் கருத்து ரைத்திருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது வெளிவாரி முறைமை தொடர்பில் கருத்துரைக்கிறது.
கடந்த காலங்களில் 1000, 1700 ரூபாய் வேதனத்தை பெறுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல மேடைகளிலும் பல பேச்சுவார்த்தைகளிலும் குரல் கொடுத்திருந்தது. எனினும் தற்போது இடம்பெறவுள்ள உள்ளூ ராட்சிமன்ற தேர்தலுக்கான பிரசார மேடைகளில் கருத்துரைத்துக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், நாட்கூலி முறைமை நீக்கப்பட்டு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என வாக்குறுதி வழங்குகிறார். அதற்காக முன்னின்று செயற்படுவதாகவும் கூறுகிறார். அத்துடன் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதன் ஊடாகவே நிரந்தர தீர்வை எட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
மறுபுறம் மற்றுமொரு மலையக அரசியல் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. தேயிலை காணிகளை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளித்து அவற்றில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்தை தோட்ட நிறுவனங்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்துகிறது. எவ்வாறாயினும் இதற்கான திட்டத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியிடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. அதேநேரம், சில மலையக அரசியல் கட்சிகள் பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை மாத்திரம் இலக்காக கொண்டு சில வாக்குறுதிகளை வழங்குகின்றன என்ற குற்றச்சாட்டு எழுகின்றன. பல இடங்களில் ‘அபிவிருத்தி’ தொடர்ச்சியான வாக்குறுதியாக உள்ளது.
சில இடங்களில் சுகாதாரம், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட விடயங் கள் தொடர்பிலும் வாக்குறுதிகள் முன்வைக்கப் படுகின்றன. எவ்வாறாயினும் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சிமன்றங்கள் தோட்ட நிர்வாகங்களை கடந்து பெருந்தோட்ட மக்களுக்கு இவ்வாறான அபிவிருத்திகள் மற்றும் வாக்குறுதிகளை அமுல்படுத்துமா? என்ற ஐயம் நிலவுகிறது. கடந்த காலங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு தோட்ட நிறுவனங்கள் இடமளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை உள்ளூராட்சிமன்றங்களின் பிரதானிகள் வைத்தனர். எவ்வாறாயினும் பெருந் தோட்ட நிறுவனங்கள் இதற்கு மாறுபட்ட கருத்துக் களையே முன்வைத்தன.



