பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை குறித்து பி.பி. சிவப்பிரகாசம் கருத்து

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை உட்பட  அடிப்படை உரிமைகளை பாதுகாக்க  தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்பாட்டு குழு உறுப்பினரும்,  பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும், ஆலோசகருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

கண்டி, ஹந்தான தோட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (14) விஜயம் செய்த அவர், அங்கு கூடியிருந்த இளைஞர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரவித்தார்.

அப்பகுதியில் உள்ள  விளையாட்டு மைதானம், மற்றும் மயானம் போன்றவற்றுக்கு பிரச்சினைகள் ஏட்பட்டு வருவதாக,  ஹந்தான தோட்டம் மூன்றாம் கட்டை தொழிற்சாலை பிரிவில் உள்ள இளைஞர்கள்  சிவப்பிரகாசம் அவர்களிடம் குறிப்பிட்ட  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி இளைஞர்கள் அங்கு மேலும் தெரவிக்கையில்,

மலையக தோட்டப் பிரதேசங்களில் பல்வேறு தோட்டங்களிலும் குறிப்பாக அரச நிர்வகங்களால்  நிறுவகிக்கப்படுகின்ற பல தோட்டங்களில் இன்று காணி அபகரிப்பு   என்பது ஒரு மாபெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.

குறிப்பாக மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை அரச பெருந்தோட்ட யாக்கம் போன்ற தோட்டங்களிலே இந்த காணிய அபகரிப்பு அல்லது கையகப்படுத்தல் அரசியல் பின்புலத்தோடு கடந்த காலங்களில் நடைபெற்று வந்திருக்கின்றமை தெரிய வருகின்றது. இந்த நிலைமையே கண்டி மாவட்டத்தில் உள்ள பல தோட்டங்களில் காணப்படுகின்றது என்றனர்.

இதனை அடுத்து கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான கானிகள் வாங்குதல், அல்லது கையகப்படுத்தல் விடயத்தை கவனிக்கும்போது, தோட்டங்களில் வாழும் மக்கள் சிறுசிறு காணிகளை விவசாயம்,  வீடுகளை விரிவாக்க அல்லது வாழ்வாதார வசதிக்காக பயன்படுத்துவதில்  இடர் படுகின்றனர்.

ஆனால் அதே நேரம்  தோட்ட அபிவிருத்தி சபை தோட்டங்கள் மற்றும் அரசு பெருந்தோட்ட யாக்கத்திற்கு சொந்தமான தோட்டங்களில் காணிகள் வெளியார்களுக்கு பல ஏக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது எவ்வாறு எப்படி நடைபெற்றது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட போதும், தேயிலை காணிகள் அழிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் மக்களுடைய பொதுத் தேவைகள், மயான வசதி, பாதைகள்,  விளையாட்டு மைதானம் என்பவற்றுக்கான உரிமைகள்  மறுக்கப்பட்டு வருகின்ற நிலைமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு வழங்கப்பட்ட அல்லது கையகப்படுத்தப்பட்ட காணிகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், சுற்றுலா அபிவிருத்தி, விவசாயம் என்பவை நடைபெற்றாலும் கூட பல பெருந்தோட்டங்களில் வழங்கப்பட்ட, அல்லது கையகப்படுத்தப்பட்ட காணிகளில் எந்தவித அபிவிருத்தி செயல்பாடுகளும் செய்யப்படாமல் காணப்படுகின்றமை அவதானிக்க தக்கதாகும்.

இதேவேளை கடந்த அரசாங்க காலங்களில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, மக்களை பயமுறுத்தி காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலைமையையும் மக்கள் விஷனத்தோடு தெரிவிக்கின்றனர்.

இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக அரசுக்கு சொந்தமான பெருந்தோட்டங்களில் காணி சம்பந்தமான பல்வேறு குளறுபடிகளும் காணப்படுகின்றன.

இது பற்றி முறை பாடுகள் கிடைக்கின்றன. இவற்றை சீர்திருத்தி நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும், பெருந்தோட்டத்துறை உற்பத்தியை விருத்தி செய்யவும், பெருந்தோட்டத்திலே வாழுகின்ற மக்களுடைய உரிமைகளை நிலைநாட்டவும், அதேவேளை அரசியல் ரீதியாக காணிகள் சட்டத்துக்கு முரணாக வழங்கப்பட்டிருந்தால் அவை குறித்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தான் பெரிதும்  நம்புவதாக கலாநிதி சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.