பெருந்தோட்டத் தொழிற்றுறை- வெளியார் உற்பத்தி முறை: துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிற்றுறை எதிர் கொள்ளும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இத்தொழிற்றுறையை அழிவிலிருந்தும் மீட்டெடுப்பதோடு, தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கும் வித்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்தகால பல்வேறு அரசாங்கத்தின் கொள்கைத் தடைகள் பெருந்தோட்டத் துறையின் முன்னேற்றத்தைத் தடுத்து வளர்ச்சிக்கான சாத்தி யத்தை குறைந்துள்ளதாகவும் எனவே இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் முதலாளிமார் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிற்றுறை இந்நாட் டின் முதுகெலும்பைப் போன்றதாகும். ஒரு காலத்தில் நாட்டின் தேசிய வருவாயில் கணிச மான வகிபாகத்தினை இத்தொழிற்றுறை கொண்டிருந்தது. 1960 ம் ஆண்டிற்கும் 1970 ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பெருந்தோட்டத் துறையின் மூலமே நாட்டின் 85 வீதமான வெளிநாட்டு செலாவணியை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. எனினும் 1980மற்றும் 89 காலப்பகுதியில் இத்துறையின் முக்கியத்துவம் குறைந்து செல்லும் ஒரு போக்கினைக் கொண்டிருந்ததாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 1982 இல் நாட்டில் பயிர் செய்யப்பட்ட மொத்த நிலப்பரப்பில் 28 வீதமான  நிலமே பெருந்தோட்டப் பயிர்செய்கைக்கு உட்பட்டிருந்தது. நாட்டின் ஏற்றுமதியில் 45 வீதம் பெருந்தோட்ட உற்பத்திகளின் வகிபங்காக இருந்தது. இதேவேளை 1981 இல் இலங்கையில் தொழில் புரிந்த தொழிலாளர்களில் 16 வீதமானோர் பெருந்தோட்டங்களின் பயிர்ச் செய்கை, பதனிடல் ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இவைதவிர மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானோர் தேயிலைத் தொழிற்று றையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

1980 தொடக்கம் 2002 வரையான காலப்பகுதியில் நாட்டின் சில மாவட்டங்களில் தேயிலை பயிரிடப்பட்ட பரப்பளவு பின்வரு மாறு அமைந்திருந்தது. இதனடிப்படையில் 1980 இல் கண்டி மாவட்டத்தில் 71,105, நுவ ரெலியா மாவட்டத்தில் 39,930, பதுளை மாவட்டத்தில் 34,368, மாத்தளை மாவட்டத்தில் 7,142 ஹெக்டேயரில் தேயிலை உற்பத்தி இடம் பெற்றது. இதேவேளை 2002 இல் கண்டி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி 18,667, நுவரெலியா மாவட்டத்தில் 50,266, பதுளை மாவட்டத்தில் 17,714, மாத்தளை மாவட்டத்தில் 5,130 ஹெக்டேயரில் இடம்பெற்றது. பொது வாக நோக்குகையில் 1980 ம் ஆண்டு 211,256 ஹெக்டேயரில் தேயிலை உற்பத்தி இடம்பெற்ற நிலையில் 2002 ம் ஆண்டில் 193.925 ஹெக்டேயர் பரப்பளவில் தேயிலை உற்பத்தி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திர வர்த்தக வலயம் 

இதேவேளை 1978 ம் ஆண்டின் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தில் மேற்கொள் ளப்பட்ட கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் தேயிலை வர்த்தகத்திலும் கணிசமான தாக்கத் தினை ஏற்படுத்தி இருந்தமையை அறிந்து கொள் ளக் கூடியதாக உள்ளது. அதுவரை காலமும் தேயிலை, தெங்கு, இறப்பர் பொருட்களின் ஏற்றுமதியே இலங்கையின் அந்நியச் செலா வணியை ஈட்டித்தரும் பிரதான ஏற்றுமதிப் பொருளாக இருந்து வந்துள்ளது . எனினும் 1978ம் ஆண்டின் பின்பு ஏற்படுத்தப்பட்ட சுதந்திர வர்த்தக வலயம், மாற்றுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஊக்குவிப்புக்கள் என்பனவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற் கான குடிப்பெயர்வுகள் போன்றனவும் வெளிநாட்டு வருமான கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி இருந்ததாக தகவல்கள் வலியுறுத்துகின்றன. இதன் காரணமாக இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தில், வெளிநாட்டு வேலை வாய்ப்பில் கிடைக்கின்ற வருமானம் முதன்மையானதாகவும், ஆடை ஏற்றுமதி இரண்டாவது நிலையிலும், தேயிலை ஏற்றுமதி மூன்றாவது நிலையிலும் காணப்பட்டதாக பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஷ் தனது கட்டுரையொன்றில் சுட்டிக் காட்டுகின்றார்.அத்துடன் 1972 ம் ஆண்டு முன்வைக் கப்பட்ட காணி உச்ச வரம்பு சட்டமும் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் தேயி லைக் காணிகளின் உடைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு உந்துசக்தியாக அமைந்தன. காணி உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களா

யின் 10 ஹெக்டேயருக்கு மேற்பட்ட தனியுடைமைகளும், பெருந்தோட்டப் பயிர்செய்கை மேற்கொள்ளப்படும் நிலங்களாயின் 20 ஹெக் டேயருக்கு மேற்பட்ட தனியார் உடைமைகளும் நிலச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் சுவீகரிக்கப்பட்டதும் தெரிந்ததாகும். 1972 ம் ஆண்டு சிறியளவிலான பெருந்தோட்டக் காணிகளே சுவீகரிக்கப்பட்ட நிலையில் 1975 ம் ஆண்டு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் இரண்டாவது நடவடிக்கையின்போதே பெரும்பாலான பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கதாம்.  பெருந்தோட்டதேயிலை விளைநிலங்கள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அபிவிருத்தி என்னும் போர்வையில் இத்தேயிலை விளைநிலங்கள் சுவீகரிக்கப்பட்டமையும் தெரிந்தததேயாகும். இது தொடர்பில் பல கண்டனங்களும் மேலெழுந்த நிலையில் இதன் பின்புலத்தில் இனவாத சிந்தனைகள் மறைந்திருப்பதாகவும் கருத்துக்கள் பலவும் முன் வைக்கப்பட்டு வந்தன.

பிரித்தானியர் சாமர்த்தியம்

இதேவேளை பெருந்தோட்டத் தொழிற்று றையில் தொழில் புரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் ஒரு வீழ்ச்சிப் போக்கி னையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கேற்ப 1980 இல் தேயிலைப் பெருந் தோட்டங்களில் பதிவு செய்யப்பட்ட தொழி லாளர்களின் எண்ணிக்கை 541,971 ஆகவிருந்தது. இவ்வெண்ணிக்கையானது 1990 இல் 408,784 ஆகவும், 2000 இல் 277,886 ஆகவும், 2005 இல் 246.478 ஆகவும், 2010 இல் 212,826 ஆகவும், 2015 இல் 158,322 ஆகவும் காணப்பட்டது. இதேவேளை தனியார் கம்பனிகள், பெருமளவு தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் பிரித்தானி யர்களின் சாமர்த்தியத்தை கொண்டவர்களாக இருக்கவில்லை. இதனால் மறைமுகமாக கணிசமான ஆண் தொழிலாளர்களை ஓய்வு பெறவேண்டிய வயதிற்கு முன்னதாகவே ஓய்வூ தியங்களை வழங்கி ஆட்குறைப்பு வேலை களை தனியார் கம்பனிகளின் முகா மைத்துவம் தீவிரப்படுத்தியதாகவும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.

1958, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் மலையக மாவட்டங்களில் ஏற்பட்ட இனக்கல வரங்களால் பாதிப்பிற்கு உள்ளானதாலும், 1972 ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் ஏற் பட்ட வேலையின்மை பிரச்சினை, உணவுப் பற்றாக்குறை என்பவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவும் கணிசமான பெருந்தோட்ட மக்கள் வடமாகாணத்திற்கு சென்று குடியேறினர். இத்தகையோர் இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் வவுனியா மற்றும் கிளி நொச்சி மாவட்டங்களில் குடியேறிய நிலை யில் காலப்போக்கில் இந்திய, மலையக அடை யாளங்களைக் கைவிட்டு உள்ளூர் மக்களுடன் கலந்துவிடும் தன்மையும் காணப்பட்டது. இவ்வாறான தொழிலாளர் இடம்பெயர்வும் பெருந்தோட்ட தொழிற்றுறையில் தொழிலா ளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி காண்பதற்கு வலுசேர்ப்பதாக அமைந்தது. 1981 ம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டு அறிக்கைக்கேற்ப 75,000 பேர் வரை வடமாகாணம் சென்று குடியேறி இருந்ததாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

இலங்கை வாழ் இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் 1971 முதல் 1984 ம் ஆண்டு வரை பெருமளவில் தாயகம் திரும்பி இருந்தனர். இதற்கேற்ப 1971 இல் 25,384 பேரும், 1973 இல் 41,153 பேரும், 1975 இல் 24,570 பேரும், 1977 இல் 39,818 பேரும், 1980 இல் 18,867 பேரும், 1983 இல் 32,526 பேரும் தாயகம் திரும்பி இருந்தனர். இதேவேளை 1971 – 1984 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 446,338 பேர் தாயகம் திரும்பி இருந்தமையும் தெரிந்ததாகும். இத்தகைய நிலைமைகளும் பெருந்தோட்டத் தொழிற்றுறையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன.

  மீறப்படும் சரத்துக்கள்

பெருந்தோட்ட தொழிற்றுறையில் கம்பனிகளின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்ற நிலையில் தொழிலாளர்கள் தொழில் ரீதியாக கசக்கிக் பிழியப்படுவதாகவும், கூட்டு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் பலவற்றையும் கம்பனிகள் மீறி வருவதாகவும் தொடர்ச்சியாகவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பெருந்தோட்டத் தொழிலாளர் களின் சம்பள விவகாரம் இழுபறி நிலையில் இருந்து வரும் நிலையில் வெளியார் உற்பத்தி முறைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் முன்வைப்புக்கள் இருந்து வருகின்றன. தொழிற்சங்கள் பாரம்பரிய ஊதிய முறையில் இருந்தும் விடுபட்டு வெளியார் உற்பத்தி முறைக்கு வலுசேர்க்க வேண்டும் என்பதும் பலரின் கருத்தாகவுள்ளது.

இந்நிலையில் பெருந்தோட்டங்கள் படிப்படியாக செல்வாக்கிழந்து வரும் நிலை குறித்து பலர் தமது விசனத்தையும் முன்வைத்து வருகின்றனர். கம்பனிகளும் நிர்வாகங்களும் பெருந்தோட்டங்களை முறையாக பராமரிக்காது இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவதனால் தேயிலைத் தோட்டங்களின் பெரும்பகுதி காடாகியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண் டுள்ளதாக செங்கொடி சங்கத்தின் தலைவர் செல்லையா சிவசுந்தரம் அண்மையில் தெரி வித்திருந்தார். மேலும் ஆரம்ப காலங்களில் ஆண் தொழிலாளர்கள் தோட்ட பராமரிப்பு  வேலைகளிலும் பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் வேலைகளிலும் ஈடு பட்டனர். ஆனால் தற்போது பல தோட்டங்கள் பராமரிக்கப்படாததால் அவை காடாகி வருகின்றன. இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள், உள்ளிட்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள் ,விஷ அட்டைகள், குளவிகள் என்பன அதிகரித்துள்ளன. நாளாந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கும் ஆளாகி வருகின்றனர். பலர் உயிர்ப்பலியாகியுமுள்ளனர். பாதிப்பிற்கு உள்ளாகும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் எவ்விதமான கொடுப்பனவுகளையோ நட்ட ஈடுகளையோ வழங்குவதில்லை என்றும் செல்லையா சிவசுந்தரம் சுட்டிக்காட்டி இருந்தார்.

முதலாளிமார் சம்மேளனம் 

இவ்வாறாக பெருந்தோட்ட தேயிலைத் தொழிற் றுறையும், தொழிலாளர்களும் நெருக்கீடுகள் பலவற்றுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இத்தொழிற்றுறையினதும், தொழி லாளர்களினதும் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகின்றது. எனவே பெருந்தோட்டங்களின்  இருப்பையும் தொழிலாளர்களின் அடையா ளத்தையும் பாதுகாக்க வேண்டிய ஒரு தேவை மேலெழுந்துள்ளது. இது தொடர்பில் முதலாளிமார் சம்மேளனமும் தனது ஆழமான பார்வையினை செலுத்தியுள்ளது. நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதற்கும் முக்கியமான கொள்கை வகுப்பில் பங்கு தாரர்களின் ஈடுபாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கான உருமாறும் சகாப்தத்தை ஆரம்பிக்குமாறு முதலாளிமார் சம்மேளனம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இந்த விடயத்தில் அனைத்து பங்குதாரர்களையும் ஈடுபடுத்துவதன் மூலம் தோட்டத்துறையின் நீண்ட கால நம்பகத்தன்மை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் ஒரு விரிவான கொள்கைக் கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்க முடியும். புதிய தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டங்கள் தற்போது இந்தத் துறையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்தத் தொழிற்றுறையின் இருப்புக்கான சாத்தியத்தையும் ஏற்படுத்தும். நாங்கள் நீண்ட கால நிலைத் ததன்மை மற்றும் செழிப்புக்கான முன்னோக்கிய கொள்கைகளை செயற்படுத்துவதில் அரசாங் கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம். தோட்டத்துறையை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றபோதும் அதனை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். எனினும் கடந்தகால அரசாங்கத்தின் கொள்கைத் தடைகள் இந்தத் துறைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து, வளர்ச்சிக்கான சாத்தியத்தை குறைத்துள்ளன. எனவே இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங் கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதலாளி மார் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள் ளமை குறிப்பிடத்தக்கதாகும்.