பூவினும் மென்மையான மனம் வாய்க்கப் பெற்றவர் எம் தலைவர் : அ.சுரேஷ்

பிரபாகரன் - விக்கிமேற்கோள்நாம் பேசி முடிக்கும் வரை,
ஊன்றி கவனிப்பார்,
அவரது தலையசைப்பு
மேலும் கீழுமாக,
மிக நிதானமாக
மிகமிக மெதுவான
தாள அசைவிருக்கும்,
ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கி நுண்ணதிர்வு காட்டுகின்ற சிரத்தை,…
பதில் இறுத்து பிரமிக்கவைக்கும்
மேன்மைமிகு மேதகுவை..
அந்தக் கணங்கள் ஒவ்வொன்றும்
உலகமே உற்றுப் பார்ப்பது போல
மனம், இலேசாகி மிதக்கும்.
ஆயிரம் சிறகுகள் சிலிர்க்காமல் விரிந்திடும்,
சம்மனசுகள் புடைசூழ்ந்ததுபோல,
எத்தனை புண்ணியம்
எத்தகைய வரம் அது.
எரிகாயங்களுடன் சந்தித்த தமிழ்த்தாயின் மீது கொண்ட பரிவன்பில்.
கேட்பாரின்றி
அப்பாவி தமிழனை உதைக்கலாம், என்ற
சிங்கள பொலிஸ் மீது
காட்டிய அறச்சீற்றத்தில்
திலீபன் பசித்திருந்த
விரிப்பில், வெளிப்படுத்திய சகிப்பில்..
விழுப்புண்பட்டு
சற்கர நாற்காலியில்
சந்திக்கும் போராளியுடனான நலன் விசாரிப்பில்,…
மடியில் அமர்ந்து கதைசொல்லி கதைகேட்கும்
செஞ்சோலை அறிவுச்சோலை மழலையின் உதட்டசைவில் கண்டுணரும் பேருவகையில்…
பெற்றோர்,பெரியோர் மதிப்பளிப்பின் மனவுருகலில்…
எதிரியினது
அப்பாவி உறவுகளின் பாதுகாப்பினை உறுதி செய்தலில்
இந்திய துணைக் கண்டத்தை சமாதான
சமுத்திரத்தில் மிதக்க விட
காட்டிய அரசியல் அக்கறையில்..
எத்தனை வாழ்வியல் அனுபவங்கள்,மனதை ஊடறுக்கிறது.
செவி மடுத்தல் என்னும்
அற்புத மரபை,
உற்று நோக்குதல் எனும் கூரிய
தனித்தன்மையை,
நேரிய விழிவெண் படலத்தை
இவ்வாறே
இடையூறு ஏதுமின்றி
உரையாடுவதற்கு தருகின்ற உன்னதமான
வாய்ப்பினை,
தனிமனித சுதந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையினை…
 நமக்கு தந்து மகிழ்கின்ற மென் உள்ளம் வாய்க்கப்பெற்ற
பிரபஞ்ச ஞானவானைப்
பற்றிப் பேசி
விளம்பரம் தேட
மனம் கூசுகிறது.
அவரை
பின்பற்றி வாழ்ந்துகாட்டும்
தீர்மானத்தை எடுப்பதே சிறப்பு.
பூவினும் மென்மை போன்றவரை
உலகின் முன் நிறுத்துவோம்.
அதுதான், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்தாக நம்புகிறேன்.