பூரண முடியாட்சி தருவதாக கூறினாலும் திருடர்களின் தயவில் பதவியேற்க மாட்டேன் – சஜித் பிரேமதாஸ

நெருங்கிய நண்பர்களை பாதுகாத்து வருவதே இன்றும் கூட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவராமைக்கான காரணமாகும். நான் திருடர்களின் தயவில் பதவி ஏற்காததால் அவர்களை பாதுகாப்பதற்கான எவ்வித தேவையும் எனக்கு கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 161ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், அம்பாந்தோட்டை, முல்கிரிகல, வீரகெட்டிய மீகஸ்ஆர மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு அரசியலில் தற்போது அதிகாரத்தை கைப்பற்ற சதிகள் இடம்பெற்று வருகின்றன. சதிகளை திட்டமிடுவதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கல்வியை கட்டியெழுப்புவதில் இல்லை. அதிகாரத்துக்காகவும் பதவிகளுக்காகவுமே இவ்வாறான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

திருடர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி பதவியில் நானும் அமர்ந்திருந்தால் திருடர்களை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். நான் அவ்வாறு திருடர்களின் தயவில் பதவிகளை ஏற்காததால், திருடர்களைப் பாதுகாக்க  வேண்டிய தேவை எனக்கு இல்லை. தமது நெருங்கிய நண்பர்களை பாதுகாத்து வருவதே இன்றும் கூட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவராமைக்கான காரணமாகும்.

இது குறித்து பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூட கருத்து வெளியிட்டுள்ளார். இவ்வாறான வன்முறை செயலையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களையும் மறந்தே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.  பூரண முடியாட்சியை என்னிடம் வழங்குவதாகக் கூறினாலும், அதற்கான இரகசிய ஒப்பந்தங்களுக்கு நான் உடன்பட மாட்டேன்.