புது வடிவத்துடன் காணி உரிமை போராட்டம் : மருதன் ராம்

இலங்கைத்தீவின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் மலையகத் தமிழ் சமூகம், இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும், தமக்கான அடிப்படை உரிமைகளுக்காக இன்றும் வீதியில் நின்று போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்கிறது.
அண்மையில் கொழும்பு கொள்ளுப் பிட்டி லிபர்டி சுற்றுவட்டத்தில் நடைபெற்ற “உரிமைக்கான பொங்கல்” நிகழ்வும், அதனைத் தொடர்ந்து தமிழ் முற் போக்கு கூட்டணி பிரான்ஸ் தூதுவரிடம் முன்வைத்த கோரிக்கைகளும், மலையக மக்களின் காணி உரிமைப் போராட்டத்தை புதியதொரு பரிமாணத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. அந்த வகையில் தைப்பொங்கல் என்பது தமிழர்களின் தை திருநாள் மட்டுமல்ல, அது நிலத்திற்கும் உழைப்பிற்கும் செலுத்தும் நன்றிக்கடனாகும்.
ஆனால், உழைப்பதற்கென்று ஒரு நிலம் இருந்தும், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வாழ்வதற்கென்று சொந்தமாக ஒரு துண்டு காணி இல்லாத நிலையில், மலையக சிவில் சமூகக் கூட்டிணைவு “உரிமைக்கான பொங்கல்” என்ற பெயரில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.
கொழும்பு லிபர்டி சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வு வெறும் சடங்கு ரீதியான பொங்கல் அல்ல. மாறாக, இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் விடுக்கப்பட்ட ஒரு செய்தியாகும். “எம்மை இன்னும் தோட்டத் தொழிலாளர்களாக மட்டும் பார்க்காதீர்கள், எம்மையும் இந்த நாட்டின் காணி உரிமையுள்ள, கௌரவமான பிரஜைகளாக அங்கீகரியுங்கள்” என்பதே அந்தச் செய்தியின் சாராம்சம்.
மலையகத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இன்னும் ‘லயன்’ முறைமை தொடர்வ தும், அவர்கள் ஒரு கூலித் தொழிலாளியாகவே அடை யாளப்படுத்தப்படுவதும் ஜனநாயக இலங்கைக்கு ஒரு பெரும் கறை என்பதை இந்த நிகழ்வு உரக்கச் சொன் னது. குறிப்பாக மாதாந்த சம்பள முறைமைக்குள் உள் வாங்கப்படாமல் இன்னமும் நாட்கூலிகளாகவே அந்த மக்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சிவில் சமூக அமைப்புகள் ஒருபுறம் வீதியில் இறங்கிப் போராடும் வேளையில், மறுபுறம் அரசியல் ரீதியாக சர்வதேசத்தின் கதவுகள் தட்டப்படு கின்றன. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்டை கொழும்பில் உள்ள அவரின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து மிகவும் முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதில் பிரதானமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகையை இலங்கையின் மலையக மக்களின் நில மற்றும் வீடமைப்பு உரிமைகளுடன் இணைக்க வேண் டும் என்பதாகும். இது ஒரு தந்திரோபாயமான நகர்வாக பார்க்கப்படுவதுடன் அதனை பல துறைசார் நிபுணர்களும் வரவேற்றுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியாகப் பொரு ளாதார நன்மைகளைப் பெறும்போது, நாட்டின் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக நிலவும் பாகுபாடுகளைக் களைவதற்கு இந்த வரிச்சலுகைகளை ஒரு அழுத்தமாகப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும் என்று மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் மலையக மக்களின் நில உரிமைப் போராட்டத்தின் தற்போதைய மையப்புள்ளியாக ‘டிட்வா’ பேரழிவு காணப்படுகிறது. அந்த அடிப்படையில் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடமைப்புத் திட்டங் களை அரசாங்கம் முன்னெடுக்கும்போது, மலையகத் தோட்டங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளமையை மனோ கணேசன் உள்ளிட்ட தரப்பினர் எடுத்துரைத்துள்ளனர்.
அத்துடன் வீட மைப்புக்காக அரசாங்கம் அறிவித்த 5 மில்லியன் ரூபாய் நிதியுதவி மற்றும் 7 பேர்ச் காணி போன்றன ஏனைய பகுதிகளில் வழங்கப்பட்டாலும், தோட்டப்புறங்களில் அவை நடைமுறைப்படுத்தப்படாமை பெரும் பாரபட்சமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனோ கணேசன் சுட்டிக்காட்டியது போல, இது வெறும் ‘தவறு’ அல்ல, மாறாக ‘கட்டமைப்பு ரீதியான பாகுபாடாகும்’.
அதாவது, ஒரு சமூகம் தனது முன்னேற்றத்தைத் தானே தீர்மானிக்க முடியாத வகையில், அவர்களைக் காணி உரிமையற்றவர்களாகவே வைத்திருக்க வேண்டும் என்ற ஒடுக்குமுறை எண்ணம் அதிகார வர்க்கத்தினரிடம் இன்னும் இருப்பதையே இது காட்டுகிறது. மலையக மக்களைப் பொறுத்தவரை காணி உரிமை என்பது வெறும் ஒரு நிலத்துண்டு மட்டுமல்ல.
அது அவர்களின் பொருளாதார சுதந்திரமாகும். சொந்த நிலம் இருந்தால் மட்டுமே அவர்கள் தோட்டத் தொழி லுக்கு அப்பால் விவசாயத்திலோ அல்லது சுயதொழி லிலோ ஈடுபட முடியும். ஒரு நிரந்தர முகவரி மற்றும் நில உரிமை இருக்கும்போதுதான் அவர்கள் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் இதர அரச கட்டமைப்புகளில் முழுமையான அங்கீ காரம் பெற முடியும். அப்படியாயின் அந்த மக்களின் சகல தனிமனித உரிமைகளும் மீறப்படுகின்றன. அதேநேரம் லயன் அறைகளில் பல தலைமுறைகளாக வாழ்வது அவர்களின் சுகாதாரத்தையும், தனிமனித கௌரவத்தையும் பாதிக்கிறது. தனித்தனி வீடுகள் மற்றும் அதற்கான காணி உரிமை என்பன அவர்களின் வாழ்வாதாரத் தரத்தை உயர்த்தும்.
புதிய அரசாங்கமும் மலையகத்தின் எதிர்பார்ப்பும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், ‘மாற்றம்’ மற்றும் ‘நீதி’ குறித்துப் பேசி வருகின்றது. ஆனால், மலையகத் தலைவர்களும் சிவில் சமூகமும் விடுத்த சந்திப்புக்கான கோரிக்கைகள் இன்னும் ஏற்கப்படவில்லை என்பது கவலைக்குரியது. மலையக மக்களின் பிரச்சினைகளை வெறும் தொழிலா ளர் பிரச்சினையாகப் பார்க்காமல், அது ஒரு தேசிய இனப்பிரச்சினையாகவும், மனித உரிமைப் பிரச்சினையா கவும் அணுகப்பட வேண்டும்.
“உரிமைக்கான பொங்கல்” என்பது அந்தச் சமூகம் தங்களின் பூர்வீக நிலத்திற்கான தாகத்தை வெளிப் படுத்திய ஒரு சமிக்ஞையாகும். சர்வதேச சமூகம், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளும், இலங்கைக்கான வர்த்தகச் சலுகைகளை வழங்கும்போது, இத்தகைய மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப் படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டின் இரண்டாம் தரப் பிரஜைகள் அல்ல.
அவர்களின் உழைப்பால் உருவான இந்த நாட்டின் செல்வத்தில் அவர்களுக்கும் பங்குண்டு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அந்தப் பங்கு வெறும் சம்பள உயர்வில் மட்டும் அடங்கிவிடாது. அது மலையகப் பெருந்தோட்ட மக்கள் கால் ஊன்றி நிற்பதற்கான சொந்த நிலத்திலும், அவர்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான காணி உரிமையிலுமே தங்கியுள்ளது. அரசாங்கம் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கத் தவறினால், இது போன்ற போராட்டங்கள் கொழும்பின் வீதிகளில் இருந்து சர்வதேச மேடைகள் வரை இன்னும் தீவிரமடையும் என்பதில் ஐயமில்லை.
அதேநேரம் இந்த விடயத்தில் மலையக இளை ஞர் யுவதிகளுக்கும் பல முக்கிய பொறுப்புகள் காணப் படுகின்றன.  குறிப்பாக பழைய காலத்துப் போராட்ட முறை களிலிருந்து விலகி, இன்றைய இளைஞர்கள் ‘அறிவுசார் போராட்டத்தை’ முன்னெடுக்க வேண்டும். காணிச் சட்டங்கள், அரச காணிகளைப் பகிர்ந்தளிக்கும் நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள் குறித்து ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, தங்களுக்குச் சேர வேண்டிய நிலங்கள் மற்றும் வீட்டுத்திட்டங்கள் ஏன் தாமதிக்கப்படுகின்றன என்பதைக் கேள்வி கேட்கும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் இன்றைய டிஜிட்டல் உலகில், சமூக ஊடகங்கள் ஒரு வலிமையான ஆயுதமாகும். தோட்டப்புறங்களில் மக்கள் வாழும் அவல நிலை, இடநெருக்கடி மற்றும் அடிப்படை வசதியற்ற லயன் அறைகளை காணொளிகளாகவும் புகைப் படங்களாகவும் இளைஞர்கள் ஆவணப்படுத்த வேண்டும். இந்தப் பதிவுகளை சர்வதேச மனித உரிமை அமைப்புக ளின் கவனத்திற்குக் கொண்டு செல்வதன் மூலம், அரசாங் கத்திற்கு உலகளாவிய ரீதியில் அழுத்தங்களை உருவாக்க முடியும். இவ்வாறு அனைவரது கூட்டு முயற்சியின் ஊடாகவே மலையக மக்களின் அடிப்படை உரிமையான காணி உரிமையை உறுதிப்படுத்த முடியும்.