யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய சட்ட வரைபை முற்றாக நிராகரிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இந்ஊ கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் அரசியல் பிரமுகர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளையோர் அமைப்பினர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்திருந்தாலும், அதற்குப் பதிலாக மற்றொரு கடுமையான சட்டத்தைக் கொண்டு வர முயற்சிப்பதாக சட்டத்தரணி க. குருபரன் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்குச் சரியான வரைவிலக்கணம் இல்லாத சூழலில், இப்புதிய சட்ட வரைபானது எதனையும் பயங்கரவாதமாகச் சித்திரிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் உள்ள தற்காலிகக் கட்டளைகளை நிரந்தரச் சட்டமாக மாற்ற அரசாங்கம் முயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதேவேளை இது தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களை நசுக்கப் பயன்படுத்தப்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் கவலை தெரிவித்தனர்.
தமிழர்களைப் பொறுத்தவரை பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டுமே தவிர, அதற்குப் பதிலீடாக வேறெந்தப் புதிய சட்டமும் தேவையில்லை என ஒருமனதாகத் தெரிவிக்கப்பட்டது.



