பிள்ளையான் தேசியத் தலைவராம் – பிதற்றும் கம்மன்பில

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பில் உள்ள பிள்ளையான், ஒரு தேசியத் தலைவர் என்று, பிவித்துரு ஹெல உறுமயவியன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கூறியுள்ளார்.

தடுப்புக்காவலில் உள்ள பிள்ளையானை, கம்மன்பில நேற்று சந்தித்திருந்தார்.

இதுதொடர்பாக இன்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கம்மன்பில, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தை நிறைவடைய செய்வதற்கு உதவிய பிள்ளையான், சிறிலங்காவில் தேசியத் தலைவராக கொண்டாடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால் அரசாங்கம் இதனை புரியாமல் செயற்படுகிறது.ஈஸ்ட்டர் தாக்குதல் நடைபெற்ற காலப்பகுதியில் பிள்ளையான் சிறையில் இருந்தார்.அவர் இந்தத் தாக்குதலின் சூத்திரதாரி என்று கூறுவது அபத்தமானது.எவ்வாறாயினும் பிள்ளையானை இதில் சிக்கவைத்துவிட வேண்டும் என்ற அரசாங்கத்தின் முயற்சி தற்போது தோல்வி கண்டுள்ளது என்றும் கம்மன்பில கூறினார்.

மேலும், தாம் பிள்ளையானை சந்தித்தித்து உரையாடிய போது, நான்கு காவல் அதிகாரிகள் எங்களை கண்காணித்தபடியே இருந்தார்கள்.நான் அங்கிருந்து வெளியேறும் போது, பிள்ளையானுடன் கதைத்த விடயங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள்.

ஆனால் நான் வெளியேறுவதற்கு முன்னதாகவே அங்கு கதைத்துக் கொண்டசில விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகி இருந்தன. இது எவ்வாறு இடம்பெற்றது?

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரை கடத்திய குற்றச்சாட்டிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆனால் அந்த கடத்தலுக்கும் தமக்கும் சமந்தமில்லை என்று பிள்ளையான் உறுதியாக கூறுகிறார்.

அத்துடன் ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பாக தாம் எந்தபுதிய விடயங்களையும் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்றும் பிள்ளையான் கூறியதாக கம்மன்பில தெரிவித்தார்.