பிலிப்பைன்ஸிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பத் திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்தி வருகின்றார்.
பாடத்திட்டங்களை நவீனப்படுத்துதல் மற்றும் கற்றலில் தொழில்நுட்பத்தை உள்வாங்குதல் போன்ற இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்புகள் குறித்தும் பிரதமர் பிலிப்பைன்ஸ் தரப்பிற்கு விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் உயர்கல்வி அதிகாரசபையின் (CHED) தலைவர் கலாநிதி Shirley C. Agrupis தலைமையிலான தூதுக்குழுவினரைப் பிரதமர் சந்தித்துப் பேசினார்.
ஆராய்ச்சி ஒத்துழைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கல்விசார் கூட்டுறவு, மாணவர் மற்றும் விரிவுரையாளர் பரிமாற்றம் மற்றும் தர உறுதிப்பாட்டுக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துதல் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தி, இரு நாடுகளினதும் உயர்கல்வி மேம்பாடு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மற்றொரு சந்திப்பில், தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அதிகாரசபையின் (TESDA) செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான Jose Francisco B. Benitezவுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையின் ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு, நிறுவன ரீதியான கூட்டுறவு மற்றும் தொழிலாளர் செயற்பாட்டினை மேம்படுத்தும் வகையில் தகைமைக் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பேண்தகு அபிவிருத்தி மற்றும் மனிதவள அபிவிருத்திக்கு ஆதரவாகக் கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளினதும், சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களினதும் அர்ப்பணிப்பை இச்சந்திப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தின.
இலங்கைத் தூதுக்குழுவில் பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சாணக்க தல்பாஹேவா, பிரதமரின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பி.எச். பியுமி பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.



