பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மகாராணிக்காக காணிகளை கையகப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை தற்போது தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இது தொடர்பில் கருத்துரைத்த அவர், குறித்த சட்டம் தற்போது தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக பயன்படுத்துவதை முழுமையாக கண்டிப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட காணிகளை அபிவிருத்திகளுக்காக பயன்படுத்த வேண்டிய தேவையிருப்பின் அங்கே அரச காணிகள் இருக்கின்றன.
ஆனால் அந்த அரச காணிகளில் வேறு எவராவது இருப்பார்களாக இருந்தால் அரச காணி கையகப்படுத்தல் நடவடிக்கை சட்டம் இருக்கிறது. அதன்படி அவர்களை 3 மாதங்களில் அகற்ற முடியும். அதற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க வேண்டுமாயின் அது தொடர்பான சட்டத்தின்படி அதனை கையகப்படுத்தி அவர்களுக்கு நஷ்டஈட்டை வழங்கலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவற்றை கைவிட்டு, காலனித்துவ ஆட்சியாளர்களின் சட்டத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிப்பதானது, இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் செய்தவற்றையே தற்போதைய அரசாங்கமும் செய்கிறது என்பது தெளிவாகிறது.
‘தயவு செய்து இதனை செய்யவேண்டாம். இது சாதாரண விடயமல்ல’. காணி தீர்வு சட்டம் கிழித்து எறியப்பட வேண்டிய சட்டமாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.



