இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, (David Lammy) அவர்களை மூன்று தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை சேர்ந்த ஐந்து முகங்கள் சந்தித்திருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், இரா சாணக்கியன் மற்றும் பதில் தமிழரசுக்கட்சி செயலாளர் எம் ஏ சுமந்திரன் ஆகிய ஐவரும் கடந்த 2026 பெப்ரவரி 17ல் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பிரித்தா னிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்றூ பற்றிக் ( Andrew Patrick} உடனிருந்தார்.கலந்துரையாடலின் போது வழமையான வாய் பாடுகளான நல்லிணக்கம், சர்வதேச நீதியியல் மற்றும் தமிழர் சமூகங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்தும் இலங்கையில் நிலையான நல்லிணக்கமும், சமூக நீதி நடைமுறைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து இருதரப்பினரும் கருத்து பரிமாறிக் கொண்டதாக தமிழர் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு துணை பிரதமர் தமிழர் பிரதிநிதிக ளின் குரல்கள் தொடர்ந்து கேட்கப்படுவதை உறுதிப் படுத்துவதிலும், நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்து வதிலும், அர்த்தமுள்ள முன்னேற்றத்துக்கு ஆதரவு வழங்குவதிலும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக பிரிட்டன் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் மூன்று தமிழ்தேசிய கட்சிகளை சேர்ந்த ஐவர் கலந்துகொண்டனர். தமிழரசுக்கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாணக்கியன், பதில் செயலாளர் சுமந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், ரெலோ கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் நான்கு பேர் கோட், ரை கட்டிய சீருடையிலும், ஒருவர் வேட்டி சேட்டுடனும் கலந்துகொண்டதை ஊடகப் பரப்பில் வந்த படங்களில் காணமுடிந்தது.
அவர்களுடைய சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கட்சிகளின் வரலாற்றையும் நன்கு தெரிந்து ள்ள பிரித்தானிய துணைப் பிரதமர் ஏன் நீங்கள் சிறுபான் மையினர் மூன்று கட்சிகளாக வந்துள்ளீர்கள் ஒரு கட்சி யாக வரமுடியாதா? என்ற வினாவை கேட்டதாகவும் அதற்கு அவரை சமாளிக்கும் பாணியில் தமிழரசுக்கட்சி தற்காலிக செயலாளர் “நாங்கள் மூன்று கட்சிகளாக வந்திருந்தாலும் எங்கள் கருத்து நிலைப்பாட்டில் நாங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கும் விடயங்களில் எங்களுக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை, வெவ்வேறு கட்சிகளாக தமிழ்மக்களின் பிரச்சனையில் ஒன்றுபட்டு நிற்கிறோம். அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் உச்ச விழுமியம்” என தமிழரசுக்கட்சி பதில் பொதுச்செயலாளர் பதில் அளித்தார் என ஒரு சமூக வலைத்தளப் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்ததை அறிய முடிந்தது.
நல்லவேளை பிரித்தானிய துணைப்பிரதமர் மாறி இப்படிக்கேட்கவில்லை “உங்கள் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சிக்குள் இரண்டு அணி உள்ளதே அதுவும் ஜன நாயகத்தின் உச்சமா” இப்படி கேட்டிருந்தால் சங்கடமாக இருக்கும் என்பதை அவர் தவிர்த்திருக்கலாம்.
இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போதைய அநுர அரசு புதிய அரசியல் யாப்பை அறவே கொண்டு வர மாட்டார்கள் என துணைப்பிரதமரிடம் கூறியதாக அந்த சந்திப்பில் கலந்து கொண்ட தமிழரசு கட்சி பிரமுகர்கள் சிலர் தவறான செய்தியை பரப்புவதாகவும் தாம் அப்படி கூறவில்லை அநுரா அரசு புதிய அரசியல் யாப்பு திருத்தத்திற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது அதில் நல்லாட்சி காலத்தில் திணிக்கப்பட்ட “ஏக்கியராச்சிய” அரசியலைப்பை மீளவும் அமுல்படுத்த முயல்கிறார்கள் அதனை தடுக்கவே நாம் போராடுகிறோம். இதனை பலதடவை கூறியுள்ளதாகவும் வேண்டுமென தான் கூறாதவற்றை கூறிவருகிறார்கள் இது அப்பட்டமான பொய் என கஜேந்திரகுமார் ஊடகங்களில் தெரிவித்திருந்தார் என்பதை காணமுடிந்தது.
தமிழ்தேசியகட்சிகளை பொறுத்தவரை வெளி நாட்டு இராஜதந்திரிகள் உடனான சந்திப்பில் நல்ல பிள்ளைக்கும், தாம் ஒற்றுமையானவர்கள் என நடித்தாலும் இராஜதந்திரிகள் பெரும்பாலானவர்களுக்கு தமிழ்தேசிய கட்சிகள் ஒற்றுமை இல்லை என்ற உண்மையை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான் பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்தேசிய கட்சி தலைவர் களிடம் நீங்கள் ஏன் ஒரு கட்சியாக செயல்பட முடியாது என்ற கேள்வியை முகத்தில் அறைந்தது போல் கேட்டார் என்பதை புரிய முடிகிறது.
இதைவிட பிரித்தானிய தூதரகம் தமது துணை பிரதமர் சந்திப்பு தொடர்பாக மிக முக்கியமான கட்டுப் பாட்டை நிபந்தனையை தமிழ்தேசிய கட்சி தலைவர்களி டம் முன்கூட்டியே தெரிவித்திருந்தது துணை பிரதமரு டன் சந்தித்து பேசிய விடயங்களை நீங்கள் எவரும் ஊடகங்களில் வெளியிடக்கூடாது அந்த சந்திப்பு பற்றி நாமே உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு கூறுவோம். இவ்வாறு சந்திக்கச் சென்ற தமிழ்தேசிய கட்சி பிரமுகர்களுக்கு முன்கூட்டியே இந்த நிபந்தனையை மூன்று கட்சிகளும் தெரிவித்திருந்த தாகவும் அதனால் கலந்து கொண்ட தமிழ்தேசிய கட்சிகளின் பிரமுகர்கள் எவரும் சந்திப்பு பற்றி ஊடகங்களில் பெரிதாக அலட்டவில்லை. தமிழ் தேசிய கட்சிகளின் போக்குகளை பிரித்தானிய தூதரகம் நல்ல முறையில் கணக்குப் போட்டுள்ளது என்பதை இலகுவாக புரியலாம்.
தமிழ் தேசிய பிரமுகர்களிடம் துணை பிரதமர் கூறிய பதில் “ தமிழர் பிரதிநிதிகளின் குரல்கள் தொடர்ந்து கேட்கப்படுவதை உறுதிப்படுத்துவதிலும், நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்துவதிலும், அர்த்தமுள்ள முன் னேற்றத்துக்கு ஆதரவு வழங்குவதிலும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்”.
அப்படியானால் 1948 பெப்ரவரி 04 ல் இதே பிரித் தானியா தான் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கி ஈழத் தமிழர்களுக்கு கை விலங்கை இட்டுச்சென்றது. துணை பிரதமர் கூறியபடி 78 வருடங்களாக நீதி, சமத்துவம், சுதந்தி ரம், மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி எதனை சாதித்தீர்கள்? மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய இலங்கை ஆட்சியாளர்களுக்கே சாதகமாக செயற்பட்டார் கள். என்பதுதான் உண்மை. இதனை சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்தேசிய கட்சிகளின் பிரமுகர்கள் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும் அவர்கள் இராஜதந்திர சந்திப்புக்களில் இதனை கூறுவது தவறாக இருந்தாலும் உண்மைகளையும் வரலாறுகளையும் பிரித்தானிய நாடும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த சந்திப்பும் இலங்கை அரசுக்கு அபிவிருத்தி தொடர்பாக உதவ வரும் நாடுகள் இவ்வாறு தமிழ் தரப்பையும் சுகம் விசாரித்துப்போவதைப் போன்ற ஒரு கலந்துரையாடல் மட்டுமே. இந்த சந்திப்பால் எந்த உத்தரவாதமும், எந்த நன்மையும் தமிழ் மக்களுக்கு இல்லை வழமைபோன்று செய்தியும் படமும் மட்டுமே.



