செயற்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலை மைத்துவத்தின் முடிவும் டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின் கொழும்புத் தமிழ்த் தலைமைத்துவத்தின் அரசியலுக்குப் பதிலாக யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் அரசியல் 1920களின் இறுதியில் எழுச்சிபெறத் தொடங்கி யது. ஆயினும், இது தமிழ்த் தேசிய அரசியல் இயக்கமல்ல. அது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தால் கவரப்பட்ட காந்திய இயக்க சிந்தனையுடன் இலங்கையையும் தழுவிய கால னிய ஆதிக்க எதிர்ப்பு இலங்கையர் தேசியவாத அமைப்பாகக் காணப்பட்டது. யாழ்ப்பாண வாலி பர் காங்கிரசை ஒருபோதும் தமிழ்த் தேசியத் தோடு இணைத்து அடையாளங்காண முடியாது.
ஒற்றை ஆட்சிமுறையை வலியுறுத்திய டொனமூர் அரசியல் யாப்புஹன்டி பேரின்பநாயகம், எஸ்.ஆர்.கனகநாயகம் போன்றோர் தலைமையிலான யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அலையுடன் தென்னிலங்கை தழுவிய முழு இலங்கையையும் இழுத்துவிடக் கூடிய ஏதுநிலை இருப்பதாக உணர்ந்த பிரித்தானிய ஆட்சியாளர்கள் அதிலிருந்து சிங்கள மக்களை முற்றிலும் பிரித்தெடுக்கும் நோக்கத்துடன் ஈழத் தமிழருக்குப் பாதகமாகச் சிங்களப் பெரும்பான்மை இனவாதத்திற்குத் தளமமைக்கும் வகையில் ஒற்றை ஆட்சி முறை யின் கீழ் தலையெண்ணும் பெரும்பான்மை இனநாயக (Head counting Majoritarianism) அரசியல் யாப்பாக டொனமூர் அரசியல் யாப்பை உருவாக்கினர். இத்தகைய தலையெண்ணும் பெரும்பான்மை ஜனநாயகத்தில் சிறுபான்மை யினருக்கு அதிகாரம் வழங்குவதற்கு சிறப்பு வழிமுறைகள் ஏற்படுத்தப்படாததால் சிங்களமே பெரும்பான்மை என்கிற அதிகாரத்தின் மூலம், ஜனநாயகத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட இன ஒடுக்குமுறைக்கான ஏற்பாடாகும்.
1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பின் கீழ் முழு இலங்கை தழுவிய ரீதியில் நிகழ்ந்த முதலாவது பொதுத் தேர்தலை யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் பகிஷ்கரித்தது. அவர்கள் தம்மை முழு இலங்கைக்குமான தேசிய விடுதலை வீரர்களாகக் கற்பனை செய்து இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிச்சுவட்டில் காந்தியவாதத்தைப் பின்பற்றிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
இந்தப் பகிஷ்கரிப்பை முதலில் கொள்கை யளவில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆதரித் தனராயினும் யாரும் தேர்தல் பகிஷ்கரிப்பில் ஈடு படவில்லை. இவர்கள் முதலில் பகிஷ்கரிப்பை ஊக்குவித்தனர். இலங்கை இடதுசாரி இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்பட்ட பிலிப் குணவர்தன (Philip Gunawardena, 2022 யூலை பிரதமராய்ப் பதவி ஏற்றுக்கொண்ட தினேஷ் குணவர்தனவின் தந்தை அன்று பகிஷ்கரிப்பு நிகழ்ந்துகொண்டிருந்தபோது யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் பகிஷ்கரிப்பை வரவேற்றுப் பின்வருமாறு கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.‘Jaffna has given the lead’ என்று மெச்சி இருந்தார்.
அதாவது ‘பிறர் பின்பற்றக்கூடிய ஒரு புதிய, சிறந்த முன்மாதிரியை யாழ்ப்பாணம் முன் னெடுத்துள்ளது’ என்பதே இதன் பொருள்.ஆனால், பின்பு நடைமுறையில் தென் னிலங்கை அரசியல்வாதிகளால் தேர்தல் பகிஷ் கரிப்பானது இனவாதத்தன்மை கொண்டது என்றும் பகிஷ்கரிப்பாளர்கள் வகுப்புவாதிகள் என்றும் தூற்றி முத்திரை குத்தப்பட்டனர். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தோடு இணைத் துப் பார்த்து இவ்வாறு இனவாத முத்திரை குத்து வது இலகு வாய்ந்தது. கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையானது இத்தகைய வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்பதே இங்கு பிரதானமாகக் கவனிக்கப்படக்கூடியது. இந்திய தேசிய விடுதலைப் போராட்டப் பின்னணியுடன் இணைத்து இப்பகிஷ்கரிப்பை சிங்களத் தரப் புப் பார்த்த அதேவேளை, நடைமுறையில் அன்று ஜவகர்லால் நேரு மேற்படி யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் பகிஷ்கரிப்பை ஆதரிக்காது எதிரான கருத்துக்களைத் தெரிவித்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் சிறிதும் இனவாதத் தன்மை கொண்டதல்ல. அன்று தேர்தல் பகிஷ்கரிப்புக்குத் தலைமை தாங்கிய முன்னணித் தலைவரான ஹன்டி பேரின்பநாயகம் இறக்கும்வரை இலங்கைத் தேசியவாதியாகவே இருந்தார். 1960களில் அவரைத் தமிழரசுக் கட்சியில் இணையுமாறு கூறப்பட்டபோது அவர் தன்னை ஒரு இலங்கைத் தேசியவாதி என்றும் தான் ஒரு இனம் சார்ந்த கட்சியில் சேர மாட்டேன் என்றும் மறுத்திருந்தார். இவரைத்தான் சிங்களத் தலைவர்கள் வகுப்புவாதி என்று வர்ணித்தார் கள். இது நடைமுறையில் இந்திய எதிர்ப்பு வாதம், தமிழின அழிப்பு வாதம் ஆகிய இரண்டையும் இணைத்துக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைவாதச் சிந்தனையின் வெளிப் பாடாகும் என்பது இங்கு அடிக்கோடிட்டுக் குறிப்பிடப்படத்தக்கது.
இங்கு பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸும் ஒற்றை ஆட்சி முறையின் கீழான ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கையையே கொண்டிருந்தது. தேர்தல் பகிஷ்கரிப்புக்கான யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸின் கோரிக்கையானது மிகவும் இலகுவானதும் வெளிப்படை யானதுமாகும். அது இத்தகைய தமிழ் இனம் சார்ந்த அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை. மாறாக இலங்கை முழுவதுக்குமான சுயாட்சியை வழங்க டொனமூர் அரசியல் யாப்புத் தவறிவிட்டது என்பதனால் அது சுயாட்சிக் கோரிக்கையை வற் புறுத்தியே பகிஷ்கரிப்பை மேற்கொண்டது.
மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற இந்திய தேசிய விடுதலைப் போராட்டத் தலை வர்களை இலங்கைக்கு வரவழைத்துப் பெரும் கூட்டங்களை ஒழுங்கு செய்தமை, காந்திய கதர் ஆடை அணிந்து இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தை யாழ்ப்பாணத்துக்கூடாக இலங்கை
யில் முதன்மைப்படுத்தியமை போன்ற விடயங்களால் ஆத்திரமடைந்த பிரித்தானியர் சிங்களக் கனவான்களுடன் கூட்டுச் சேர்ந்து தமிழின அழிப்பிற்கான ஒரு காத்திரமான புதிய பரிமா ணத்தைக் கட்டமைத்தனர்.
யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் ஒரு தெளிவான கற்பனாவாத அமைப்பு. அவர்கள் இலட்சியத்தால் தம்மை மேன்மையானவர்களாக நினைத்தாலும், அவர்களது தூய இலட்சியவாதம் சாத்தானுக்குச் சேவை செய்வது. யாழ்ப்பாண வாலிபர் காங்கிரசின் சுட்டிக்காட்டத் தகுந்த ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில், இலங்கைத் தீவில் தீண்டாமைக்கு எதிராக முதன்முறையாக (1926) சமபந்தி போசனத்தை நடத்திய அமைப் பாகும்.
அதாவது, 1926 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – கீரிமலையில் பெரும் பந்தலமைத்து சமபந்தி போச
னத்தை நடத்தினர். இது ஒரு வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். சமபந்தி போசனத்தில் முன்னணித் தலைவர்கள் பலர் உணவு உட்கொண்ட பின்பு பந்தலின் பின்புறம் சென்று வாந்தி எடுத்தனர் என்பது வேறு கதை. அதாவது, கொள்கை ரீதியாகத் தீண்டாமையை இவர்கள் எதிர்த்தாலும் உளவியல் – பண்பாட்டு அடிப்படையில் தம்மளவிலேனும் இவர்களால் தீண்டாமையைக் கடந்து செல்ல முடியவில்லை என்ற பக்கமும் கவனத்திற்குரியது.
யாழ். குடாநாட்டின் நான்கு தொகுதிகளி லும் யாழ்ப்பாண காங்கிரஸ் விடுத்திருந்த தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றி பெற்றது. அப்போது பகிஷ்கரிப்புக்கு எதிரான நிலைப்பாட்டை திரு. ஜி.ஜி. பொன்னம்பலம் முன்னெடுத்தார். யாழ். குடாநாட்டில் பகிஷ்கரிப்புக்கு ஆதரவிருந்த பின்னணியில் யாழ். குடாநாட்டுக்கு வெளியே மன்னார் – முல்லைத்தீவு தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். ஆனால், தேர்தல் பகிஷ்கரிப்பு மூன்று ஆண்டு களுக்குள் தோல்வியில் முடிந்து 1934 ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நிகழ்ந்தது. அப்போது பருத்தித்துறைத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அத்துடன் பொன் னம்பலத்தின் அரசியல் எழுச்சி ஆரம்பமாகியது.
ஒற்றை ஆட்சி முறைமையின் கீழ் ஒன்றுபட்ட இலங்கை என்ற அடிப்படைக் கொள்கையு டன் பொன்னம்பலத்தின் தமிழினம் சார்ந்த அரசியல் பிரவேசம் அமைந்தது. நவீன இலங்கையின் அரசியல் வரலாற்றில் டொனமூர் அரசியல் யாப்புக் காலத்திற்தான் சிங்கள -தமிழ் இனப்பகைமையானது பிரித்தானிய – சிங்கள கூட்டு உழைப்பினால் முன்னெப்போதையும்விட பெரிதும் கட்டமைக்கப்பட்டது.
அக்காலகட்டத் தமிழ்த் தலைவர்களிடம் கடல்சார் அரசியல் ஆதிக்க அறிவு, காலனிய ஆதிக்கம், பன்னாட்டு அரசியல் உறவுகள் பற்றிய அறிவு, உலக அரசியற் கண்ணோட்டம் என்பன போதியளவு இருக்கவில்லை. இவ்வகையில், தமிழ்த் தலைவர்களிடம் காணப்பட்ட அரசியல் அறிவின்மைகளும் கற்பனாவாதங்களும் கட்ட மைக்கப்பட்ட இனப்படுகொலை வளர்ச்சியடைய ஏதுக்களாய் அமைந்தன.
டொனமூர் யாப்பின் கீழ் 1936 ஆம் ஆண்டு தனிச் சிங்கள மந்திரசபையைச் சிங்களத் தலைவர்கள் வெற்றிகரமாய் உருவாக்கினர். அப்போது தமிழ் மக்களுக்கு திரு. ஜி. ஜி. பொன்னம்பலமும் சிங்கள மக்களுக்கு பரன் ஜெயதிலகவும் தலைவர்களாய் இருந்தனர். பொன்னம்பலத்தை அமைச்சரவையில் உள்வாங்கி விடக்கூடாது என்பது ஜெயதிலகவின் முடிவாகும். பொன்னம்பலம் தன்னை முன்னிறுத்துவதையும் அவர் தன்னைப் பெரிதுபடுத்துவதன் மீதும் எரிச்சல் கொண்டிருந்த ஒரு தமிழ்க் கணித மூளையை ஜெயதிலக அடையாளம் கண்டிருந் தார். அந்தக் கணித மூளையை அவர் அணுகி பொன்னம்பலத்தை மந்திரிசபையில் நுழையவி டாது தடுப்பதற்கான ஓர் உபாயம் சொல்லுமாறு புத்திமதி கேட்டார்.
பின்வரும் அடிப்படையில் கணித மூளை இலகுவாகப் புத்திமதி சொல்லியது. 50 உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்க சபையா னது (State Council) தலா 7 உறுப்பினர்களாக – ஆனால் ஒரு சபைக்கு எட்டு உறுப்பினர்களாக மொத்தம் ஏழு நிர்வாக சபைகள் பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும் ஒவ்வொரு சபையும் தமக்குத் தமக்கெனத் தனித்தனியே ஒவ்வொரு தலைவர்களைத் தேர்வு செய்யும். தலைவரே அமைச்சராவார். இதன்படி பொன்னம்பலம் அங்கம்வகிக்கக்கூடிய நிர்வாக சபையில் பொன்னம் பலத்துக்கு மாறான உறுப்பினர்கள் பெரும்பான் மையினராக இடம்பெற்றால், (4 அல்லது 5 உறுப்பினர்) பொன்னம்பலம் தலைவராக முடி யாது. அதன்படி பொன்னம்பலம் மந்திரி சபையில் (Board of Ministers) அங்கம் பெற முடியாது.
உண்மையில் இவ்வாறு அந்தக் கணித மூளை புத்தி சொல்லியது பொன்னம்பலத்தை நினைத்து பொன்னம்பலத்துக்கு எதிராக மட்டுந்தான். ஆனால், அரசாங்க சபையை ஏழு சபைகளாகப் பிரிக்கும் போது ஜெயதிலக ஏழு நிர்வாக சபைகளிலும் தமிழ் அங்கத்தவர்கள் பெரும்பான்மையாக வரமுடியாதவாறு திட்டமிட்டு நிர்வாக சபைகளை வடிவமைத்தார். இவ்வாறு நிர்வாக சபைகள் பிரிக்கப்பட்ட பின்பு பொன்னம் பலம் அங்கம்பெற்ற நிர்வாக சபையில் சிங்கள அங்கத்தவர்கள் பெரும்பான்மையாக இருந்தனர். பொன்னம்பலம் தேர்வு செய்யப்படாமல் அதற்கு சிங்களவரே தலைவர் ஆனார். பொன்னம்பலம் ஏமாற்றமடைந்து திகைப்புற்றார். அவர் வெளியே வந்து பார்த்தபோது ஏழு நிர்வாக சபைகளுக்கும் ஏழு சிங்களவர்கள் தெரிவாகியிருந்தனர். இதுவே தனிச் சிங்கள மந்திரி சபையாய் (Pan Sinhala Board of Ministers) அமைந்தது.
தமிழனைப் பயன்படுத்தித் தமிழனை வீழ்த்த சிங்களவர்களுக்குத் தெரிந்திருந்தது. சிங்களத் தலைவர்களுக்கப் புத்தி உயர, கொடி உயர்ந்தது. தமிழ்த் தலைவர்களுக்குப் புத்தி போனது, கோபம் வந்தது.
கோபம் கொண்ட பொன்னம்பலத்தின் கண்களில் டியூக் ஒப் டிவென்சியாரின் ( Duke of Devonshire ) 50 : 50 சூத்திரம் (Balanced Representation) தென்பட்டது. இவரது சூத்திரத்தின்படி பல்லி னங்கள் வாழும் ஒரு நாட்டில் பெரும்பான்மை இனத்திற்கு 50 % ஆசனங்களும் ஏனைய சிறு பான்மையினங்கள் அனைத்துக்கும் மிகுதி 50% ஆசனங்களும் என அமையும்போது பெரும் பான்மை இனத்தால் சிறுபான்மையினத்தை அடக்கி ஆள முடியாது என்பதே இவரது இந்தச் சூத்திரமாகும். இதன்படி இலங்கையில் 50 : 50 என அமையுமிடத்து சிங்கள பௌத்தர்களுக்கு 50 வீதமும் மிகுதி 50 வீதமும் முறையே இலங்கைத் தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், மலே இனத்தவர்கள், பறங்கியர், சிங்கள – தமிழ் கிறிஸ் தவர்கள் எனப் பங்கிடப்படும் என்பதாகும்.
மேற்படி சிறுபான்மை இனத்தவர்களின் மத்தியில் இருந்து ஒரு சில உறுப்பினர்கள் சிங்களப் பக்கம் மாறினால் சிங்களப் பக்கம் எப்போதும் பெரும்பான்மை கிடைப்பது சாத்தியம். ஆத லால், இந்த 50 க்கு 50 என்ற சூத்திரம் இனப் பிரச்சினைக்குத் தீர்வில்லையே ஆனாலும் பொன்னம்பலம் ஒற்றை ஆட்சியின் கீழ் 50 க்கு 50 என்ற சூத்திரக் கொள்கையைக் கையில் எடுத்து அடுத்த அரசியல் யாப்புக் குழுவான சோல்பரி அரசியல் யாப்புக் குழுவரை முன்னெடுத்தார்.
தொடரும்…