பிரித்தானியாவுக்கு வரும் மாணவர்கள் மீது அதிக கட்டுப்பாடுகள்

பிரித்தானியாவுக்கு கல்வி கற்பதற்கு வரும் ஐரோப்பியர்கள் அல்லாத மாணவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை அழைத்துவருவதை பிரித்தானியா அரசு கடந்த செவ்வாய்க்கிழமை (23) முதல் தடை செய்துள்ளது.

கடந்த வருடம் பிரித்தானியாவுக்குள் மேலதிகமாக குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாள 700,000 ஆக உயர்ந்துள்ளதை தொடர்ந்து பிரித்தானியா இந்த முடிவை அறிவித்துள்ளது.

எனினும் மேற்படிப்புக்காக அல்லது ஆய்வுக் கற்கை நெறிக்காக வரும் மாணவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் நுளைவு அனுமதியை வேலைக்கான நுளைவு அனுமதியாக மாற்றும் நடைமுறையும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்குள் ஐரோப்பியர்கள் அல்லாத 486,000 மாணவர்கள் வந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு அதன் எண்ணிக்கை 269,000 ஆகும். கடந்த ஆண்டு மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 136,000 பேர் வந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு 16,000 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

இந்த சடுதியான அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நேரம் வந்துள்ளதாகவும், பிரித்தானியாக்குள் குடிபெயரும் மக்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சூயலா பிரவேர்மன் தெரிவித்துள்ளார்.