இலங்கையுடனான நீண்டகால கூட்டாண்மைக்கான உறுதிப்பாட்டை ரஷ்யா வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) தமது நாட்டின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
‘தெற்காசியாவில் நம்பகமான நண்பர்’ என்று அவர் இலங்கையை விபரித்துள்ளார். அத்துடன் இரு தரப்பு உறவுகள், ஆழமானதும், நேர்மறையானதுமான வரலாற்றை கொண்டுள்ளதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மலேஷியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற ஆசியான் மாநாட்டிற்கு இடையே இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போது ரஷ்ய – இலங்கை உறவு மற்றும் சர்வதேச தளங்களில் ஒத்துழைத்து செயற்படுதல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பிரிக்ஸ் (BRICS) அமைப்பு மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை அனுப்பிய செய்தியை வரவேற்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் ஒருமித்த கருத்துக்களுடன் இணைவதற்கு தங்களது தரப்பு தயாராகவுள்ளதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த சந்திப்பு தொடர்பில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், பல தளங்களில் ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரத் துறைகளில் இரு தரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.