கனடாவின் பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கனேடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
கனேடிய தமிழர் தேசிய அவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் ஜூன் 15 அன்று இடம்பெற்றமை குறித்து கனேடிய தமிழர் தேசிய அவை தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது’.
‘தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் முக்கியமான அம்சங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன’ என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ‘மே 27ம் திகதி இரவும் இவ்வாறான வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன’.
வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் கண்டிக்கப்பட வேண்டிய இந்த இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் தமிழ் இனப்படுகொலையின் போது பலியானவர்களின் நினைவுகளை அவமதிப்பதுடன், பன்முகத்தன்மையை கொண்ட கனேடிய சமூகத்திற்கு அடித்தளமாக உள்ள உண்மையின் மதிப்புகள், நல்லிணக்கம் போன்றவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.