பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) அமைப்பின் 6 ஆவது உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (4) பாங்கொக்கில் ஆரம்பமாகியுள்ளது.
பாங்கொக்கில் உள்ள நட்சத்திர விடுதியில் ஆரம்பமான பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், உறுப்பு நாடுகளின் அரச தலைவர்கள் குழுவாக படம் எடுத்துக்கொண்டதுடன், மாநாட்டின் செயல்திட்டங்களை விவாதித்ததன் மூலம் மாநாடு ஆரம்பமானது.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், தாய்லாந்து, மியன்மார் மற்றும் பூட்டான் ஆகிய 7 நாடுகள் இணைந்து பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.ஆண்டுதோறும் இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து மாநாடு நடத்தி ஆலோசனை நடத்தப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாநாடு தாய்லாந்தின் பாங்கொக்கில் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றது. இந்த மாநாட்டில் கடல்சார் பாதுகாப்பு, சுற்றுலா, விண்வெளி ஆய்வு, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய தாய்லாந்து சென்றுள்ளார்.
இம்முறை பிம்ஸ்டெக் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தும் நாடான தாய்லாந்தின் பிரதமர் பேத் தாங் தான் ஷினவத்திரா, அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு உபசரிப்பு வழங்கினார்.
உச்சி மாநாட்டில் ‘பிம்ஸ்டெக் கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்பு’ ஒப்பந்தம் கையெழுத்தாகிய பின்னர், உறுப்பு நாடுகளான இலங்கை, தாய்லாந்து, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் அல்லது பிரதிநிதித் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.



