பாலம் அமைக்கத் துடிக்கிறார் மோடி – படகு விடப் போகிறார் அனுர

மன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இருந்ததாக நம்பப்படுகின்ற ராமர் பாலத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும், இதற்காக சிறிலங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, மன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. சுமார் 5 – 6 வருடங்களுக்கு பின்னர், எம்மிடம் மிகப் பாரிய அளவிலான டொலர் கையிருப்பில் உள்ளது.

கடந்த 6 மாதங்களாக ரூபாவின் மதிப்பு சரியவில்லை. நாம் எரிபொருள் விலையை குறைத்தோம். மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் பாடுபடுகிறோம். அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது. அஸ்வெசும உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், அடுத்த ஜூன் மாதம் முதல் 400,000 புதிய குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்கப்படும்.

இது மக்களை கவனித்துக் கொள்ளும் அரசாங்கமாகும் என அவர் குறிப்பிட்டார். அத்துடன் வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது.சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தன.

தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து அவற்றை விடுவித்துள்ளது. மக்கள் தங்கள் பணிகளை சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.