பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தொடர்ந்து சந்தர்ப்பம் கோரும் இராமநாதன் அர்ச்சுனா!

‘தமது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகமுறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பில் விசாரிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தினார்.

‘தமக்கு உரையாற்றுவதற்கு அரசாங்க தரப்பு நேரம் ஒதுக்கவில்லை’ என்றும் ‘தமது முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி வருகின்றார்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘உடனடியாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரியுள்ளார்.

இதற்கு பதில் வழங்கிய, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, ‘இந்த விடயம் பாராளுமன்றத்தின் சிறப்புரிமை பற்றிய குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்’ என்று குறிப்பிட்டார். இதேவேளை, ‘பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிறப்புரிமை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு சபாநாயகருக்கே உள்ளது’ என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ‘அவருக்கு நேரம் ஒதுக்கப்படாமை  ஜனநாயக விரோத செயல்’ என்றும் ‘ஆளும் தரப்பு அதற்குப் பொறுப்பல்ல’ என்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ‘பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவரே நேரம் ஒதுக்க வேண்டும்’. எனவே, ‘அவருக்கு நேரம் ஒதுக்கப்படாதமையினால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது’ என்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.