பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பு அதிகரிப்பு

பல்வேறு சமூக காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பின் இந்த வியடம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி,

  • 22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையை உணர்ந்துள்ளனர்.
  • 11.9 சதவீதமான 13–17 வயதுடைய  மாணவர்கள் கவலையின் காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர்.
  • 18 சதவீதமான மாணவர்களுக்கு உளச்சோர்வு (Depression) அறிகுறிகள் காணப்படுகின்றன.
  • 7.5 சதவீதமான மாணவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை.
  • 75 சதவீதமான மாணவர்கள் உளநலப் பிரச்சனைகளைப் பகிர்வதற்காக நெருங்கிய நபர்கள் இல்லையென தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவிக்கையில்,

இலங்கையில் ஏன் இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என  எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர்.

அதேவேளை, பெரியோரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு சமூக காரணிகள் மற்றும் அழுத்தங்கள் இந்த நிலைமைக்கு பங்களிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் உளவியலாளர் வைத்திய நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவிக்கையில்,

நாட்டில்  நாளொன்றுக்கு சுமார் 08 உயிர் மாய்க்கும் சம்பவங்கள் பதிவாகின்றன. 1996 ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய ரீதயிலான தற்கொலை பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த காலப்பகுதியில், 100,000 பேருக்கு 47 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அடுத்து அந்த விகிதம்  கணிசமாகக் குறைந்தது.

தற்போது, 100,000 பேரில் 15 பேர்  உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். வருடத்திற்கு சுமார் 3,500 பேர்  உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நிலையானதாக உள்ளது.”

அத்துடன், நாளொன்றுக்கு சுமார் எட்டு உயிர்மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றாலும், ஊடகங்களில் உயிர்மாய்ப்பு சம்பவம் ஒன்று மட்டுமே பதிவாகக்கூடும் எனவும், பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த உயிர்மாய்ப்பு சம்பவங்களின் விகிதம் கணிசமான அளவு குறையவில்லை என்றாலும், அண்மையில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

“இருப்பினும், கடந்த காலங்களைப் போலல்லாமல், ஊடகங்கள்  இதுபோன்ற அனைத்து சம்பவங்களையும் வெளியிடுவதில்லை. இது ஒரு பாரிய முன்னேற்றம் எனத்  தெரிவித்துள்ளார்.

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ நெருக்கடியில் சிக்கி உதவி தேவைப்பட்டால், உடனடியாக உதவிகளை பெற வழிமுறைகள் உள்ளன:

– அவசரமான சூழ்நிலைகளில், தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 1926

– சுமித்ரயோ: +94 11 2 682535/+94 11 2 682570

– லங்கா லைஃப் லைன்: 1375

– CCCline : 1333 (இலவச சேவை)