பவளவிழா காணும் தமிழரசுக்கட்சியும்! பரிதாபமான தமிழ்த்தேசிய அரசியலும்! – பா.அரியநேத்திரன்

இந்தவாரம் எதிர்வரும் 2024, டிசம்பர்,18,ல் தந்தை செல்வா உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பவள விழா காண்கிறது. 1944, ஆகஷ்ட் 29ல் ஜீ ஜீ பொன்னம்பலத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக விலகிய முக்கிய தலைவர்களான தந்தை செல்வா, வன்னிய சிங்கம், நாகநாதன் ஆகியோர் 1949 டிசம்பர் 18 ம் திகதி கொழும்பு மருதாணையில் கூடி பேசி “இலங்கத்தமிழ் அரசுக் கட்சியை” ஆரம்பித்தனர் அதன் ஸ்தாபக தலைவராக தந்தை செல்வா நியமிக் கப்பட்டார்.

அன்று உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 75வது பவளவிழாவில் கால் பதிக்கிறது. அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் 1944ல் ஆரம் பித்தாலும் அந்த கட்சி தாய்க்கட்சி என்ற அந்தஷ்தை பெறவில்லை. இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை ஏன் தாய்க்கட்சி என அழைப்பது என்றால் தந்தை செல்வா தமிழரசுக்கட்சியை வெறும் தேர்தல் கட்சியாக மட்டும் ஆரம்பிக்கவில்லை.

இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும். அதற்கு ஒரு வழி சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதுதான் என்ற நோக்கில் தமிழ் மக்களை அணிதிரட்டி பல்வேறுபட்ட அகிம்சை ரீதியிலான போராட்டங்களை வட கிழக்கு முழுவதும் மாவட்ட ரீதியாக பிரதேச வேறுபாடுகள் இன்றி முன்னெடுத்தார்.

அது தமிழ்பேசும் மக்கள் மத்தியில் தமிழ்தேசிய உணர்வுகளை தூண்டியது.தாயகத்தின் விடுதலைக் காக போராடும் இயக்கமாக தமிழரசுகட்சி தொடர்ந்து செயல்பட்டதால் தாய்க்கட்சி என்ற உயர் நிலை இதற்கு கிடைத்தது. இலங்கை தமிழரசுக்கட்சி தேர்தல் அரசியலில் முதலாவதாக 1952,மே,24ல் யாழ்ப்பாணத்திலும், திருகோண மலையிலும் ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு 2, தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த இரண்டு ஆசனங்களில் ஒன்று காங்கேசன்துறை (தந்தை செல்வா)அடுத்தது திருகோணமலை (இராஜவரோதயம்) மட்டும் வெற்றி பெற்ற தமிழரசுகட்சியின் தலைவர் தந்தை செல்வா சோர வில்லை அதன்பின்னர்தான் உத்வேகத்துடன் தமிழரசுகட்சியை மக்கள் மயப்படுத்தினார்.

1956, ஏப்ரல்,05ல் இடம்பெற்ற மூன்றாவது பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் 14, தொகுதிகளில் தமிழரசுக்கட்சி வேட்பாளரை நிறுத்தி 10, தொகுதிகளில் வெற்றி பெற்று வர லாற்று சாதனை படைத்ததார். 1956ல், தந்தை செல்வா மட்டக்களப்பு தொகுதியில் செல்லையா இராசதுரையையும், பட்டிருப்பு தொகுதியில் சீ மூ இராசமாணிக்கத்தையும் கல்முனை தொகுதி யில் எம்.எஷ். காரியப்பரையும் உள்வாங்கி இணைந்த வடகிழக்கில் தமிழ்த்தேசிய அரசி யலுக்கு அத்திவாரம் இட்டார். அதில் இருந்து தமிழ்பேசும்மக்களின் அகிம்சை ரீதியிலான சகல போராட்ட அரசியலும் மேலும் கூர்மை பெற்றது.தமிழரும் முஷ்லிம்களும் இணைந்து தமிழரசு கட்சியின் கொள்கையில் செயல்பட்டனர்.

1956ல் இருந்து எழுச்சி பெற்ற தமிழரசுக்கட்சியானது பல மகாநாடுகளை நடத்தி ஒற்றுமையாக தலைவர் உட்பட சகல நிர்வாகத் தெரிவுகளும் இடம்பெற்றன. இதுவரை நடந்த மகாநாடுகளும் ஒற்றுமையாக தெரிவு செய்யப் பட்ட தலைவர்களும்…

  1. 1951,ஏப்ரல்,13,14,15ல் திருகோணமலையில், தலைவராக தந்தைசெல்வா,

  1. 1953,ஜனவரி,01ல் யாழ்ப்பாணத்தில் தலைவராக தந்தைசெல்வா,

  1. 1955 ஏப்ரல்,16,17ல் திருகோணமலையில் தலை வராக கு.வன்னியசிங்கம்,

  1. 1956,ஆகஷ்ட்,,17,18,19ல் திருகோணமலையில் தலைவராக கு.வன்னியசிங்கம்,

  1. 1957,யூலை,27,28ல் மட்டக்களப்பில் தலைவராக கு.வன்னியசிங்கம்,

  1. 1958,மே,23,24,25ல் வவுனியாவில் தலைவராக இராஜவோதயம்,

  1. 1961,ஜனவரி,21ல் யாழ்ப்பாணத்தில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம்,

  1. 1962,ஆகஷ்ட்,31ல் மன்னாரில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம்

  1. 1964,ஆகஷ்ட்,21,22,23ல் திருகோணமலையில் தலைவராக தந்தை செல்வா,

  1. 1966,யூன்,23,24,25ல் கல்முனையில் தலைவராக டாக்டர் நாகநாதன்,

  1. 1969,ஏப்ரல்,07,08,09ல் யாழ்ப்பாணம் உடுவிலில் தலைவராக சீ.மூ.இராசமாணிக்கம்,

  1. 1973,செப்டம்பர்,07,08,09ல் யாழ்ப்பாணம் மல்லா

கத்தில் தலைவராக அ.அமிர்தலில்கம்,

  1. 2010, ஜனவரி,13ல் யாழ்ப்பாணம் நல்லூரில் தலைவராக இரா.சம்பந்தன்,

  1. 2012,மே,26,27ல் மட்டக்களப்பில் தலைவராக இரா.சம்பந்தன்,

  1. 2014,செப்டம்பர்,06,07ல் வவுனியா தலைவராக மாவை சேனாதிராசா,

  1. 2019,யூன்,29,30ல் யாழ்ப்பாணத்தில் தலைவராக மாவை.சேனாதிராசா. ஆனால் 17, வது தேசிய மகாநாடு நடத்துவதற்காக 2023, ஜனவரி,21ல் தலைவர் தெரிவு பொதுச் சபையால் வாக்கெடுப்பு மூலம் தெரிவானது. வழமைக்கு மாறாக தேர்தலில் தலைவர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது. இதுவே முதல்தடவை. அதில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 184 வாக்குகளை பெற்று தலைவராக ஜனநாயக ரீதியில் தெரிவானார். அவரை நேரடியாக எதிர்த்து போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மதியாபரணம் ஆபிராகம் சுமந்திரன் 137 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் பதவிக்காக வேட்பு மனுவை வழங்கிய நிலையில் அவரும் சிறிதரனின் வெற்றிக்காக உழைத்தார். இதன் எதிரொலியால் 2023.ஜனவரி, 27ல் இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தில் தமக்கு பொதுச்செயலாளர் பதவி தரப் படவேண்டும். அப்போதுதான் இரண்டு அணி களாக பொதுச்சபை உள்ளதை ஒரு அணியாக செயல்படலாம் என பகிரங்கமாகவே சுமந்திரன் கூறினார், அவர் கிழக்கு மாகாணத்தை கணக்கில் எடுக்காமல் புறக்கணிப்பு நோக்கில் இந்த கருத்து அமைந்தது. அவரே இரண்டு அணிகள் என்ற சொல்லை உறுதிப்படுத்தினார்.

இந் நிலையில் மட்டக்களப்பில் தற் போதய பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் முன்மொழிந்தார், இவ் வாறான நிலையில் மத்தியகுழுவில் ஏட்டிக்கு போட்டியான கருத்துகள் இடம்பெற்று பின்னர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை பொதுச்செயலாளராக மத்தியகுழுவில் இணக்கம் காணப்பட்ட நிலையில் பொதுச்சபை உறுப்பினர்கள் அதனை ஏற்க மறுத்து ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக மகாநாடு நடத்தப்படவில்லை. அதனால் சுமந்திரன் அணியை சேர்ந்தவர்களான திருகோணமல் சந்திரசேகரம் திருகோணமலையிலும், முல்லைத்தீவை சேர்ந்த பீற்றர் இளம்செழியன் யாழ்ப்பாண நீதிமன்றிலும் மகாநாடு தொடர்பாக இரண்டு வழக்குகள் கடந்த 2023, பெப்ரவரி, 15ல் தாக்கல் செய்யப்பட்டதால் மகாநாடு நடத்தப்படவில்லை ஒரு வருடமாக வழக்கு நிறைவுக்கு வரவில்லை.

இதேவேளை இன்னுமொரு வழக்கை மட்டக்களப்பு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசாவாலும் யாழ் நீதிமன்றில் கடந்த 2024,அக்டோபர்,10ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மூன்று வழக்குகள் முற்றுப்பெறாத நிலையில் தமிழரசுக்கட்சியின் 17,வது மாகாநாடு நடத்தப்படாமை ஒரு புறமும் 2024, டிசம்பர், 18ல் பவள விழாவை நடத்த முடியாத இக்கட்டான நிலைமையும் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கு காரணமாக புதிய தலைவராக தெரிவான சிறிதரன் பதவி ஏற்கவில்லை, பழைய தலைவரான மாவை சேனாதிராசா தொடர்ந்தும் தலைவராக பெயர் அளவில் உள்ளார்.

தமிழரசுக்கட்சியானது தனித்து 1949 தொடக்கம் 1972, வரை. 23 வருடங்கள் மட்டும் ஆரம்பத்தில்  செயல்பட்டது. பின்னர் 1972 ல் தமிழர் கூட்டணி என ஆரம்பித்து அது 1976, மே,14ல் வட்டுக்கோட்டை தமிழீழ தனியரசு தீர்மானம் தந்தை செல்வாவால் எடுக்கப்பட்டபோது தமிழரசுக்கட்சி மேலும் ஒரு கட்சியாக தமிழர் விடுதலைக்கூட்டணி உருவானது.

இந்த காலத்தில் நடந்த தேர்தல்கள் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் 2001,வரை சுமார் 29, வருடங்கள் போட்டியிட்ட வரலாறே உண்டு. இந்த காலக்கட்டத்தில் ஈழவிடுதலைப்போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியது அதில் போராடிய 36, விடுதலை ஆயுத இயக்கங்கள் 1987,யூலை,29ல், இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் போராட்டத்தை விட்டு ஒதுங்கினர், சிலர் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து தேர்தல் அரசியலில் முகம்கொடுத்தனர்.

2001,அக்டோபர்,20 தொடக்கம் 2023, ஜனவரி,21 உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை தமிழ்தேசிய கூட்டமைப் பாக தமிழரசுகட்சி வீட்டுச்சின்னத்தில் களம் இறங்கிய கட்சிகள் கடந்த 2023, ஜனவரியில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சி சபை தேர்தல் கலப்பு முறை தேர்தல் காரணமாக ஏற் பட்ட முரண்பாட்டால் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் இருந்து ரெலோ, புளோட், விலகி ஈபிஆர்எல்எவ், மற்றும் ஜன நாயக  போராளிகள், என சில சில்லறை கட்சிகளை சேர்த்து புளட் இயக்கத் தின் பங்காளி கட்சியான ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி என்ற கட்சியின் “குத்து விளக்கு” சின்னத்தில் தனியாக வேட்பு தாக்கல் செய்தனர்.

தமிழரசுக்கட்சியும் தனியாக “வீடு” சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர் ஆனால் அந்த தேர்தல் இதுவரை இடம்பெற வில்லை என்பது ஒருபுறம் இருக்க… கடந்த 2024, செப்டம்பர், 21ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொதுவேட்பாளராக 83, சிவில் அமைப்புகள், 07 தமிழ்தேசிய கட்சிகள், பல புலம்பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்

பினரும் தமிழ்த் தேசியவாதியுமான பா.அரிய நேத்திரனை பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் நிறுத்தியபோது தமிழரசுக்கட்சி மத்தியகுழுவில் ஒருசாரார் அதனை எதிர்த்து சஜீத் பிரமதாசாவின் வரப்பிரசாரங்களைப்பெற்று அவரை ஆதரித்தனர். ஆனால் தமிழரசுகட்சி மத்தியகுழுவில் உள்ள தலைவரான மாவை சேனாதிராசா, புதிதாக தலைவராக தெரிவான சிறிதரன், ஶ்ரீநேசன், யோகேஷ்வரன், திருமலை மாவட்ட தலைவர் குகதாசன், அம்பாறை கோடீஷ்வரன், மன்னார் சாள்ஷ்நிர்மலநாதன், கொழும்புக்கிளை தலைவர் தவராசா, உட்பட பல பிரதேச மாவட்ட தொகுதி கிளை உறுப்பினர்கள் அரியநேத்திரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர்.

ஏழு தமிழ்த்தேசிய கட்சிகள், 83, பொது அமைப்புகள், முன்னாள் போராளிகள், புலம்பெயர் தமிழ் உறவுகள், அமைப்புகள் எல்லோரின் பிரசாரத்தால் 226322, வாக்குகளை அரியநேத்திரன் பெற்று இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசிய கொள்கை உறுதியினை நிருபித்தார்.

குறிப்பாக வடமகாணத்தில் மட்டும் கிழக்கு மாகாணத்தை விட 119000 வாக்குகள் கிடைத்தது. இலங்கை வரலாற்றில் ஒரு தமிழன் ஐந்தாவது இடத்தை ஜனாதிபதி தேர்தலில் பெற்றார் என்பது இதுவே முதல்தடவை. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு பூரண ஆதரவை கொடுத்த யாழ்ப்பாண மாவட்ட தமிழ்மக்கள் ஏன் ஜனாதிபதி அநுராவின் “தேசிய மக்கள் சக்திக்கு” மூன்று ஆசனங்களை பெற வாக்களித்தனர் என்ற வினா பலரின் மத்தியில் இருந்தது. இதற்கான காரணமும் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சிமீது மக்கள் கொண்ட அதிருப்தியும், தமிழ்த் தேசியக் கட்சிகள் மீது கொண்ட வெறுப்பும் என்பதே உண்மை. அதேவேளை 2024,நவம்பர்,14ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரின் “சங்கு” சின்னத்தை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தமது “குத்து விளக்கு” சின்னத்தை மாற்றிவிட்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போது வன்னியில் மட்டும் ஒரு ஆசனம் கிடைத்தது ஏனைய சகல மாவட்டங்களிலும் படு தோல்வியடைந்தனர் மக்கள் சின்னங்களை விட எண்ணங்களிலேயே குறியாக இருந்தனர். அதனால் பல போராட்ட அமைப்புகளின் கிழக்கு மாகாணத்தை விட எல்லோருடனும் ஏனைய அரச கைக்கூலிகளான டக்லஷ், அங்கயன், கருணா, பிள்ளையான், போன்றவர்களை முழுமையாக தோற்கடித்தனர்.

இது தமிழ்தேசிய அரசியலுக்கு எழுச்சியை கொடுத்தது, தமிழரசுக்கட்சியில் யாழ்மாவட் டத்தில் சிறிதரன் மட்டுமே கிளிநொச்சி மாவட்டத்து உணர்வுள்ள தமிழ்மக்களால் தமிழரசுக்கட்சியில் ஒரு ஆசனத்தை பெற முடிந்தது. வன்னி மாவட்டத்தில் ஒரு ஆசனமும், கிழக்கில் வழமை போன்று ஐந்து ஆசனங்கள் பெறப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே தேசிய மக்கள் சக்தி தோல்விகண்டது.

மட்டக்களப்பு மாவட்டம் இம்முறை மட்டுமல்ல தொடர்ந்தும் 1989, தொடக்கம்2024, வரை ஒன்பது பொதுத்தேர்தல்களிலும் எந்த ஒரு பேரினவாதக்கட்சிகளும் முதன் நிலை பெறவில்லை. அந்த வரலாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்களிடம் தமிழ்தேசிய உணர்வு தொடர்கிறது. யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் தமிழ்தேசிய கொள்கைக்காக வாக்களிக்கும் பாரம்பரியம் தமிழ்த்தேசிய உணர்வு 1977, தொடக்கம் 2024, வரை 46, வருடங்களாக மட்டக்களப்பு தமிழ்மக்களிடம் உள்ளது. 75, வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த தமிழரசுக்கட்சி இந்த பவள விழா ஆண்டில் (2024) எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று இலங்கை நாடாளுமன்றில் மூன்றாவது பெரும்பான்மை கட்சியாக இருப்பது மகிழ்ச்சியான விடயமாக காணப்பட்டாலும் பவள விழாவை கொண்டாட முடியாத முட்டுக்கட்டையாக வழக்கு ஒருபுறம் யார் தலைவர் என்ற கேள்வி மறுபுறம், என்ற நிலைமையுடன் மௌனமாகவே பவள விழாவில் தமிழரசுக்கட்சி கடந்து செல்லும், ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அதாவது தேசிய தலைவரின் சிந்தனையில் உருவான தமிழ்தேசிய கூட்டமைப்பு அவரால் ஆணையிடப்பட்ட இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற செய்தி ஏனைய தமிழ் கட்சிகளுக்கு இந்த தேர்தல் முடிவுகள் சொல்லப்பட்டுள்ளது. ஒரு குரலால் தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்த எதிர்வரும் 2025, ம் ஆண்டில் தமிழ்தேசிய அரசியலில் அனைவரும் ஒன்றாக பயணிப்பதே காலத்தின் தேவை.இல்லை எனில் தமிழ்தேசிய அரசியல் பரிதாபமாகவே கடக்கும்.