சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் பிணைப்பு அதிகரித்துவரும் பின்னணியில், பல சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கமைய, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பல தொடர்புகளை மேம்படுத்துவதில், பல நட்பு நாடுகள் இலங்கையுடன் அண்மைய காலமாக, முனைப்புடன் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில், கடந்த மாத இறுதியில் போலந்தின் வெளிவிவகார அமைச்சர், மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்ததுடன், அவுஸ்திரேலியாவின் துணை பிரதமரும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதனிடையே, கடந்த 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் (15) காலை நாடு திரும்பினர்.
கடந்த 11 ஆம் திகதி ஜேர்மனிக்கான தமது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை தொடங்கிய ஜனாதிபதி, இருதரப்பு அரசியல் சந்திப்புகள், வணிக வட்டமேசை மாநாடு மற்றும் ஜேர்மன் சுற்றுலாத் துறையுடனான சந்திப்புடன் வெற்றிகரமாக தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு திரும்பிய இன்றைய தினத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சும், இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து நடத்தும் ‘இலங்கையின் மீட்புக்கான பாதை – கடன் மற்றும் நிர்வாகம்’ என்ற தலைப்பில் நாளை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் விசேட அதிதியாக கலந்துக்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தும் சர்வதேசம் பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமை மீறல் விடயத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.
அதனடிப்படையில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில், அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளுக்கு முன்னர் அவரது இந்த விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.