பலிக்கடாவாக்குதல் – துரைசாமி நடராஜா

a2 பலிக்கடாவாக்குதல் - துரைசாமி நடராஜாமலையக மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்னும் அதிகமுள்ளன. இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றபோதும் பூரண சாதக விளைவுகளைப் பெற்றுக் கொள்வதென்பது இயலாத காரியமாகியுள்ளது. இந்நிலையில் இவ்வருடம் தேர்தல் காலமாக உள்ள நிலையில் மலையகக் கட்சிகள் இங்குவாழ் மக்களின் நலன்கருதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளதோடு, இவற்றை நிறைவேற்ற முன்வருபவர்களுக்கே தாம் ஆதரவு வழங்கப்போவதாகவும் தெரிவித்து வருகின்றன.

தமிழக வரலாற்றில் முன்னைய காலகட்டங்களில் காணப்படாத அளவிற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலட்சக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் உலகின் பல நாடுகளுக்கும், தீவுகளுக்கும் கொண்டு சென்று குடியமர்த்தப்பட்ட வரலாறு சோகம் நிறைந்ததாகும். இவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்கள் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டனர்.

அத்தோடு பிரான்சிய, பிரித்தானிய ஆட்சியாளர்களாலும், பின்பு சுதேச ஆட்சியாளர்களாலும், அந்தந்த நாடுகளையும், தீவுகளையும் சேர்ந்த சுதேச இனத்தவர்களாலும், தொழிலாளர்கள் அல்லாத ஏனைய தமிழர்களாலும், ஏனைய இந்தியர்களாலும், வணிகர்கள், அதிகாரிகள்,தோட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பிற அலுவலர்கள் ஆகியோராலும் கொடூரமாகச் சுரண்டப்பட்டனர். உலகின் பல நாடுகளிலும், தீவுகளிலும் குடியேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களில் இன்று தமிழ் பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ தெரியாத நிலையில் சுதேச இனத்தவர்களுடன் பலர் கலப்புற்று விட்டதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள் தமது பயணத்தின் போது சவால்கள் பலவற்றையும் சந்திக்க நேர்ந்ததோடு சிலர் உயிரிழக்கவும் நேர்ந்தமை கொடுமையிலும் கொடுமையாகும். இலங்கைக்கு குடிவந்தவர்கள் ஒழுங்கான முறையில் கவனிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக 1847 ம் ஆண்டு தொடக்கம் 1867 ம் ஆண்டு வரை 24 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தியத் தொழிலாளர்களுக்கு இந்நாட்டில் சகலவிதமான பாதுகாப்புக்களும் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்படாத நிலையில் இந்திய அரசாங்கம் மக்கள் குடியகன்று செல்வதை மறுத்து வந்தது.

a1 பலிக்கடாவாக்குதல் - துரைசாமி நடராஜாஇந்திய அரசாங்கம் வழங்கிய சலுகைகளை இலங்கை தோட்ட உரிமையாளர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்திய கிராமங்களில் வாழ்ந்த தொழிலாளர்கள் தமது குடும்பங்களுடன் இலங்கைக்கு வந்து நிரந்தரமாக குடியேறச் செய்வதற்கு சகல முயற்சிகளையும் மேற்கொண்டதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் சுட்டிக்காட்டுகின்றார். இதேவேளை தொழிலாளர்களின் நலன்கருதி பல சட்டங்கள் இயற்றப்பட்டபோதும் அச்சட்டங்களினால் ஏற்பட்ட சாதக விளைவுகள் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. பல சட்டங்கள் ஏட்டுச் சுரைக்காயாகி இருந்தன.

உரிமை மீறல்கள்

இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேறிய அல்லது குடியேற்றப்பட்ட இந்திய தொழிலாளர்கள் மிக அண்மைக் காலம் வரை சூழ்நிலை நிர்ப்பந்தங்களால் இலங்கையில் காலம் காலமாக வாழ்ந்து வந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களது அலட்சியத்திற்கு உள்ளானவர்களாக விளங்கினர். அத்தோடு கூலிகள், கள்ளத்தோணிகள், வடக்கத்தையார், தோட்டக்காட்டான் என்றெல்லாம் அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாக புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இம்மக்கள் உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளான நிலையில் கல்வியுரிமை உள்ளிட்ட பலவும் மீறப்பட்டு வந்தமையும் புதிய விடயமல்ல. இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்து விட்டன. இந்த 200 வருடகால வரலாற்றுக்கும் அவர்களின் வாழ்க்கை அபிவிருத்திக்கும் இடையே பாரிய விரிசல் நிலை காணப்படுகின்றமை யாவரும் அறிந்ததேயாகும்.இதேவேளை இக்காலப்பகுதியில் இம்மக்கள் சில அடைவுகளையும் பெற்றுக் கொண்டுள்ளமையையும் மறுப்பதற்கில்லை. இது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.

மலையக மக்களிடையே இன்னும் அபிவிருத்தியடைய வேண்டிய பல விடயங்கள் காணப்படுகின்றன. அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, தொழில்வாய்ப்பு, வீடமைப்பு, சுகாதாரம், மருத்துவம், உட்கட்டமைப்பு எனப்பலவும் இதில் உள்ளடங்கும்.இத்துறைகளின் அபிவிருத்தி கருதி மலையக அரசியல்வாதிகள் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திடம் அவ்வப்போது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.எனினும் இக்கோரிக்கைகளில் ஒரு சில கோரிக்கைகள் ஓரளவு சாத்தியமாகியுள்ள நிலையில் இன்னும் பல கேள்விக்குறியாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே இவ்வருடம் தேர்தல் காலம் என்பதால் மலையக அரசியல் கட்சிகள், பிரதான கட்சிகளிடத்தில் கோரிக்கைகள் பலவற்றையும் முன்வைத்துள்ளதோடு இவற்றை நிறைவேற்றித் தருபவர்களுக்கு தாம் ஆதரவு வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளன.

இதனடிப்படையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகளை ரணில் நிறைவேற்றிக் கொடுப்பாராயின் அவருக்கு தேர்தலில் ஆதரவு வழங்குவோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் பின்வருமாறு:-

மலையகத்தில் வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று அவசியம்.காணி உரிமை மலையக மக்களுக்கு அவசியமாகும்.இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி நான்காயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.காணி உரித்து விரைவில் வழங்கப்பட வேண்டும் என்பது இ.தொ.கா.வின் கோரிக்கைகளாக உள்ளது.இந்நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் இம்மாதத்தில் சாத்தியமாகும் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தமையும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

தேசிய நீரோட்டத்தில் பங்கு

இதேவேளை மலையக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பு அவசியமென்றும் அதற்கான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனிடம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.அத்துடன் மலையக மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

a3 பலிக்கடாவாக்குதல் - துரைசாமி நடராஜாஇதனிடையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி அண்மையில் பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி இருந்தார்.மலையக மக்களை தொடர்ந்தும் மலையகத் தமிழர்களாகவோ அல்லது தோட்டப்புற மக்களாகவோ வாழ வைப்பதற்கு பதிலாக இலங்கை சமூகத்தில் ஏனைய மக்களுடன் ஒன்றிணைப்பதே தமது எதிர்பார்ப்பாகும். நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதற்காக இரண்டு நூற்றாண்டுகளாக உழைத்து வரும் மலையக தமிழ் மக்களை தொடர்ந்தும் தனியான இனக்குழுவாக அன்றி தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான பணி மிகவும் சவால் நிறைந்தது.ஆனாலும் இதற்கான துரித வேலைத்திட்டமொன்று அவசியமாகும். மலையக மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படுதல் வேண்டும்.

இதற்காக பிரதமர். தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி மலையக மக்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய பத்து பேர்ச் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மலையக மக்கள் தமது காணிகளில் தேயிலையை பயிரிட்டு அவற்றை அவர்கள் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கக்கூடிய வகையில் பெருந்தோட்டத்துறையில் புரட்சிக்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.இதன்போது பல்வேறு கோரிக்கைகளையும் சஜித் பிரேமதாசாவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்துள்ளது.பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் எதிர்பார்ப்பு என்பன தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு எடுத்துரைக்கப்பட்டு இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கைச்சாத்திட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவர்கள் காணியுரிமை கனவு சாத்தியமாக வேண்டும். அவர்களுக்கு உரிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட வேண்டும். சிறுதோட்ட உரிமையாளர்களாக மலையக மக்கள் மாற்றம் பெறவேண்டும் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சஜித்தின் வாக்குறுதி

இதேவேளை ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்படும் விசேட ஜனாதிபதி செயலணியின் ஊடாக பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும்.பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமை மாத்திரமின்றி பயிர்ச்செய்கை, வீட்டு உறுதி, சிறுதோட்ட உரிமை என்பவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இதுவரை காலமும் இரண்டாம், மூன்றாம் வகுப்பு மக்களாக பார்க்கப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு புதுயுகமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இது வசனங்களால் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வாக்குறுதியாக இருக்காது.இதுவரை காலமும் வாக்குகளுக்காக அரசியல் ரீதியில் ஏமாற்றப்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கு பொருளாதார, சமூக சுதந்திரத்தை வழங்குவதற்கான பயணத்தை ஐக்கிய மக்கள் கூட்டணியாக நாம் ஆரம்பித்துள்ளோம் என்று சஜித் பிரேமதாசா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில்  வாக்குறுதி வழங்கி இருந்தார்.

இவ்வாறாக தேர்தலுக்கு முன்னாள் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதும், வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் இது முதலாவது முறையன்று. உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் போன்ற பல சந்தர்ப்பங்களிலும் இத்தகைய பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வாக்குறுதிகளும்  வழங்கப்படுகின்றன. இது மட்டுமன்றி வரவு செலவு திட்ட முன்மொழிவுகளிலும் பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு, பொருளாதார அபிவிருத்தி போன்ற மேலும் பல விடயங்கள் தொடர்பில் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன.எனினும் இவ்வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் சாத்தியமாகியுள்ளன என்று சிந்திக்கையில் திருப்திகொள்ள முடியவில்லை.

இதேவேளை கடந்த முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட மேதினத்தின்போதும் மலையக மக்கள் சார்ந்த பல வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் அள்ளி வழங்கினர்.எனினும் இவ்வாக்குறுதிகள் செயல்வடிவம் பெறுவதிலேயே வெற்றி தங்கியுள்ளது.அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேதின மேடையில் அறிவித்தார்.இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.எனினும் கம்பெனிகள் இத்தொகையை வழங்குவதற்கு ஏற்கனவே மறுப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று முன்னாள் பிரதியமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி தெரிவித்திருக்கின்றார்.

மலையக மக்களின் அபிவிருத்தி கருதி  பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, வாக்குறுதி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இது வெறும் புஷ்வாணமாகிவிடக் கூடாது என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும். மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகள் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் அம்மக்களை பலிக்கடாவாக்கி யாரும் ஏமாற்றிப் பிழைக்க முற்படுதல் கூடாது.அத்தோடு நாடுயர தோள்கொடுக்கும் இம்மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்கி தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் முன்வருதல் வேண்டும். மேலும் இந்திய வம்சாவளி மக்கள் தனித்தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கான கௌரவத்தினை பெற்றுக் கொடுக்கவும் ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.