பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 3 தசாப்தங்களின் பின் பொதுமக்கள் வழிபாடு

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று (15) முதல் பொதுமக்கள் வழிபாடு செய்ய உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இராணுவ அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழல் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேறியதைத் தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 34 வருடங்களின் பின்னர் ஆலயத்திற்கு செல்லும் மக்கள், கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வேலிகள் பின் நகர்த்தி உரிய முறையில் அமைக்கவில்லை எனவும் , அவற்றை உரிய முறையில் அமைத்த பின்னர் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்படும் என முன்னதாக இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே இன்று முதல் மக்கள் சுதந்திரமாக செல்வதற்கு இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளனர்.