பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாதிப்புகளை இனி சிங்கள மக்களும் உணர்வார்கள் -சாள்ஸ் நிர்மலநாதன்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாதிப்புகளை இனி சிங்கள மக்களும் உணர்ந்து கொள்வார்கள் என  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சாள்ஸ் நிர்மலநாதன்,

“கடந்த 24 ஆம் திகதி பூரணை தினத்தை முன்னிட்டு  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, அரசியல் கைதிகள் 16 பேரை விடுதலை செய்து இருந்தார்.

அந்தப் பதினாறு பேரும் ஏற்கனவே நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு இன்னும் குறுகிய காலத்தில் தங்களுடைய தண்டனை காலத்தை நிறைவு செய்து வெளியில் வர இருந்தவர்கள். குறிப்பாக அதில் இரண்டு பேர் மாத்திரமே 4 வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள். ஏனைய 14 பேரும்  ஒரு வருடத்திற்குள் சிறையிலிருந்து வெளிவர இருந்த வேளையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

என்றாலும் இன்னமும்  நீதிமன்ற விசாரணையில் உள்ள கைதிகள் நீதிமன்ற தீர்ப்பின்  பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள  கைதிகள் இன்னும் வழக்குத் தாக்கல் செய்யாத கைதிகள் என்று அனைவரைனயும் மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நான் அரசாங்கத்திற்கு முன்வைக்கின்றேன்.

மேலும் குறித்த அரசியல் கைதிகளோடு  சேர்த்து தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் ஒருவரையும் ஜனாதிபதி அவர்கள் விடுதலை செய்துள்ளார்.இந்த  விடுதலைக்கு  ஐ.நா அமெரிக்க செயலகங்கள் எதிர்ப்பைை வெளியிடப்பட்டுள்ளது

சட்டத்தரணிகள் கூட குறித்த அரசியல் பிரமுகரின் விடுதலைக்கு ஜனாதிபதியிடம் விளக்கம் கேட்டு இருக்கின்றார்கள். அத்துடன் ஜனாதிபதி ஏற்கனவே தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிருசுவில் பகுதியில்  பொதுமக்களை படுகொலை செய்தவரை நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்தார்.

எனவே ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் சிறையில்  பயங்கரவாத தடைச் சட்டத்தில்1994 ஆம் ஆண்டு முதல்  2009 ஆம் ஆண்டு யுத்தம்  முடிவுற்றதின் பிற்பாடு 2012 ,2013 ,2014 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட  58 பேர் சிறையில் இருக்கின்றார்கள். அவர்களையும் விரைவில் விடுதலை செய்வதோடு இந்த புதிய அரசாங்கம் வந்ததின் பிற்பாடு அண்மையில் சமூக வலைத்தளங்களில் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாக செய்திகள் பிரசுரித்தார்கள் என்னும் குற்றச்சாட்டில்  பலர் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறர்கள்.  அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

இதேவேளை தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தில்  கைதுகள் மேற்கொண்டு வருவது கண்டித்த கண்டிக்கத்தக்க விடயம் என்பதை நான் இங்கு பதிவு செய்கின்றேன்.

குறிப்பாக  பயங்கரவாத தடைச் சட்டத்தின்  பாதிப்புக்களை சிங்கள மக்கள் இப்பொழுதுதான் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.