அரசாங்கம் புதிய பதிலீட்டு சட்டம் தயாரிக்கப்படும் வரை பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்காது எனின், குறைந்தபட்சம் அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதையாவது இடைநிறுத்தவேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் அதேவேளை, அதனைப் பதிலீடு செய்யும் வகையில் உருவாக்கப்படும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நீதியமைச்சினால் பொதுமக்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான புதிய சட்ட உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் பரிந்துரைகளைக் கோரியிருப்பது நேர்மறையானதொரு விடயமாகும் என்று அவர் தமது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இருப்பினும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை’ ‘புதிய சட்டத்தை உருவாக்குவது என்பது பல கட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் நிகழவேண்டிய நீண்ட செயன்முறை என்பதனால், அதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும்’ என்றும் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று புதிய சட்டம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் போதுமானதன்று. மாறாக குறைந்தபட்சம் ஒருமாத கால அவகாசத்தையேனும் வழங்கவேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.