அண்மையில் மன்னார் மருத்துவமனையில் வைத்தியர்களின் ஆணவத்தினாலும், கவன யீனத்தினாலும் இளம் தாய் மரணமடைந்திருந்தார்.
தம்மை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிர் தான் இந்த வைத்தியர்களின் அசமந்தப் போக்கிற்கான காரணம். அதுவும் உண்மை தான் ஏன் என்றால் இதுவரை இடம்பெற்ற வைத்தியசாலை மரணங்களுக்கு என எந்த வைத்தியரும் தண்டிக்கப்படவில்லை.
இலங்கை அரசு மேற்கொண்ட படுகொலை களுக்கு நீதி வேண்டும் என போராடும் தமிழ் அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், பொது கட்டமைப்புக்கள், அரசியல்வாதிகள், தேசியவாதிகள், புரட்சியாளர்கள் கூட தமது கண்முன் நடக்கும் மரணங்களுக்கு நீதி வேண்டும் என போராடுவதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதை தடுக்க முன்வரவில்லை என்பது தான் வேதனையானது.
இது தொடர்பில் திருநாவுக்கரசு தயந்தன் எழுப்பிய கேள்விகளை நாம் இங்கு தருகின்றோம்.
வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக் கூறலும்!
தெய்வத்துக்கு நிகராக கருதப்படுகின்ற மருத்துவத்துறையில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து குறைந்து வருவதா கவே தோன்றுகிறது.
“வைத்தியரிடமும் வக்கீலிடமும் உண் மையை மறைக்க கூடாது” என்று சொல்வார்கள். அதற்காக வைத்தியர்களும் வக்கீல்களும் உண் மைகளை மறைப்பது நியாயமாகுமா?
மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பில் மருத்துவமனையோ அல்லது மாகாண மருத்து வத்துறையோ அல்லது GMOA போன்ற மருத்துவ சங்கங்கள் ஏதாவது விளக்கமளிக்கும் அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளனரா? அவ்வாறு எதுவும் இல்லை எனின் அதற்கான காரணம் என்ன?
எமது நாட்டின் மருத்துவத்துறை உலகின் பல நாடுகளின் மருத்துவத்துறையை விட மேம்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த மருத்துவத்துறையினுள் இருக்கும் ஊழல்வாதிகள், சுயநலவாதிகளின் செயற்பாடுகளை தட்டிக்கேட்க வக்கில்லாமல் மொத்த துறையும் இயங்குவது என்பது வெட்கக்கேடானது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறானவர்களின் செயற்பாடுக ளால் தான் உண்மையில் மருத்துவத்துறையின் மாண்பை பாதுகாக்கும் பல வைத்தியர்களும் அவப்பெயர் வாங்கும் நிலை உருவாகிறது.
டாக்டர். அருச்சுனாவின் பல அணுகுமுறை களில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், மேற்படி மன்னார் வைத்தியசாலை விடயத்தில் நீதிகேட்டு பொதுமகனாக வந்த அரிச்சுணாவை கைதுசெய்வதிலும், ஜாமீனை நிராகரிப்பதிலும் காட்டிய அக்கறையை ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கான நீதியில் குறிப்பாக தாயை இழந்த அந்த பச்சிளங் குழந்தைக்கான நீதியில் காட்ட முடியவில்லை?
குறைந்தபட்சம் இந்த இழப்பினை புரிந்து கொள்ளும் பண்பையாவது மருத்துவத்துறை சார்ந்தவர்கள் கொண்டிருப்பது அத்திய அவசியம் அல்லவா? ஆனால் அந்த வைத்தியசாலையில் எடுக்கப்பட்டிருந்த காணொளிகளில் வார்த்தை களை உமிழ்ந்த வைத்தியர்கள் அல்லது காற்ச ட்டையுடன் நின்று பேசிக்கொண்டிருந்த (ஆள் என்ன பதவி என்று தெரியவில்லை) நபர் உள்ளிட்டவர்களின் நடத்தையை பார்க்கும் போது உண்மையில் அந்த அப்பாவிப் பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் வாய்ப்பு இருப்பதையே ஒரு சாதாரண பார்வையாளனாக உணர முடிகிறது.
இவ்வாறான நடத்தைகள் தானே பல வைத்திய சாலைகளில் மக்களின் நம்பிக்கை குறைவதற்கு காரணமாகின்றன. அரிச்சுணா விடையத்தில் அவரது அணுகுமுறைகள் தவறு என்று குரல் கொடுத்த GOMA உள்ளிட்ட சங்கங்களும் வைத்தியர்களும் ஏன் இவ்வாறான விடயங்களில் வாய் திறக்க வில்லை? அரிச்சுணாவுக்காக பகீஸ்கரித்த எந்த வைத்தியரும் மன்னார் விடயத்தில் அமைதி காப்பது ஏன்?
அரிச்சுணா போன்றவர்களுக்கே கேள்வி கேட்க அனுமதி இல்லாத போது சாதாரண மக்களுக்கான நீதி எட்டாக்கனியாக அல்லவா இருக்கப்போகிறது.
யாழ் வைத்தியசாலையில் சில காலங்களுக்கு முன்னர் கையை இழந்த சிறுமிக்கான விசாரணை அறிக்கை எங்கே? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பிரச்சினைகள் நடக்கும் போது விசார ணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை எடுக் கப்பட்டால் வைத்தியத்துறையின் மாண்பும் மேம் படும். மக்களும் சந்தேகப்படமாட்டார்கள். மன்னார் மாவட்டம் மட்டுமல்ல வடக்கின் அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்? அரிச்சுணாவுக்கு ஆதரவு பெருகிய போது அதை வளைத்துப்போட வரிசையாக சென்றவர்கள் மன்னார் விடயத்தில் மௌனம் காப்பது ஏன் ? இதுவரை துறைசார்ந்தவர்களிடம் இருந்து ஒரு பேட்டியை கூட காணமுடியவில்லை.
விசாரணை என்ன அமெரிக்காவிலா நடக்கிறது? வடக்கை பொறுத்தவரை வெளியில் இருந்து அழிப்பதை விட உள்ளே இருப்பவர் களின் சுயலாபங்களுக்காகவும் உண்மைகளை மூடி மறைத்து மறைத்தே எம்மையும் எமது மாண்பையும், உண்மையான வைத்தியர்களின் சேவைகளையும் களங்கப்படுத்தி அழித்துக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.
அரிச்சுணாவால் ஒட்டுமொத்த மருத்துவத் துறையின் முறைகேடுகளை பேசமுடிந்திருக்கிறது. அந்த தற்துணிவு பலருக்கும் இருந்ததில்லை. இதனால் மருத்துவத்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் இன்று பல விழிப்புணர்வுகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
நிறைய அவதானிக்க ஆரம்பித்திருக்கிறார் கள்! ஒரு நாள் இல்லை ஒருநாள் இது பல பெரும்புள்ளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும். பலரை வாழ்நாளில் மீளமுடியாத நிலைகளில் தள்ளவும் கூடும்.
மருத்துவத்துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் வெளிப்படைத்தன்மையும் பொறுப் புக்கூறலும் என்று உருவாகிறதோ அன்றுதான் உண்மையான மாபியா அழியும்.
இதனிடையே, வைத்தியக் கலாநிதி வினோதன் தர்மராஜன் மன்னர் படுகொலை தொடர்பில் கூறியதாவது:
ஒரு சில மேலதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களினால் குளிர் விட்டுப்போன உணர்வுகள் எவையுமற்ற ஜடங்கள் போன்ற விரல் விட்டு எண்ணகூடிய ஒரு சில மருத்துவப்பணியாளர்களின் அலட்சியத்தினால் சிந்துஜா என்ற இளந்தாயின் அவல மரணம் நிகழ்துள்ளது சம்பவம்.
கிடைத்த தகவல்கள் ஆரோக்கியமானதாக இல்லை. அவரை வைத்தியசாலையில் அனுமதிக் கும் வரை எந்தவொரு இடத்திலும் தாமதம் ஏற் படவில்லை.
ஆனால் வைத்தியசாலையில் அனுமதித்த முதல் நிமிடம் முதல் குருதிப்பெருக்குடன் வரும் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்த தாய்க்கு பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் எந்தளவு தூரம் பின்பற்றப்பட்டது என்பது தொடர்பில் பெரும் கரிசனையுள்ளது. (இந்த நடைமுறை தொடர்பான சுற்றறிக்கையை தரமுடியுமா என்று எவரும் கேட்டு காமெடி பண்ணவேண்டாம்; அந்த நடைமுறை தான் எமக்கு மருத்துவ, தாதிய கல்லூரிகளில் கற்பிக்கப்படுகின்றது) குருதிப்பெருக்குடன் வந்த தாய் முதலில் அவசர சிகிச்சை பிரிவிலேயே அனுமதிக் கப்பட்டிருக்கவேண்டும் அங்கு இடமில்லை என் zறால் அனுமதிக்கப்பட்டவுடன் விடுதி on call மருத்துவருக்கு OPDயில் இருந்து அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு அது பின்பற்றப்பட்டதா என்பது முதல் கேள்வி.விடுதியில் இவ்வாறான தீவிர நிலைமை யுடைய தாய்மார் தீவிர கண்காணிப்பு பிரிவில் (High Dependency Unit) வைக்கப்பட்டு தாதிய, குடும்பநல உத்தியோகதர்களால் 15 நிமிடத்திற்கு ஒருதடவை கண்காணிக்கப்பட வேண்டும். (இதற்காக தான் 26 மில்லியன் ரூபா செலவில் இந்த மகப்பேற்று விடுதி கடந்த வருடம் புனரமைக்கப்பட்டு , அனைத்து நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் என்பன மன்னார் – ஐக்கிய இராச்சிய நலன்புரி அமைப்பின் நிதிப்பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டது.)
இதுவும் ஒழுங்காக நடைபெற்றதா என்பது அடுத்த கேள்வி. விடுதி on call வைத்தியர் அழைத்தும் வரவில்லை என்றால் “பரவாயில்லை நாங்கள் நித்திரைக்கு செல்வோம். பொழுது விடிய பார்த்துக்கொள்ளலாம்” என்று தாதிய, குடும்பநல உத்தியோகத்தர்கள் வாளாவிருக்க முடியாது.
உடனையாக இதுபற்றி இரவு on call தாதிய சகோதரிக்கு அவர்கள் அறிவிக்கவேண்டும். அந்த தாதிய சகோதரி இதனை உடனடியாக OPD மருத்துவருக்கு அறிவிக்கவேண்டும். இரவு OPD மருத்துவர் தான் அந்த நேரத்தில் வைத்தியசாலை பணிப்பாளருமாவார்.
அவருடைய பரிந்துரையுடன் அந்த தாய்க்கு இரண்டு கரங்களிலும் குருதியையும், குருதிநாள திரவங்களையும் வழங்கக்கூடிய Wide Bore Cannula களை நிலைநிறுத்தி, உடனடியாக இரத்தமேற்றுவதற்கு முன்னர் செய்யவேண்டிய Blood grouping and DT பரிசோதனைக்குரிய குருதி மாதிரியை எடுத்து குருதி வங்கிக்கு அனுப்பிவிட்டு குருதிநாள திரவங்களிலொன்றை OPD மருத்துவ ரின் பரிந்துரையுடன் தாய்க்கு செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.
இந்த இடைவெளியில் OPD மருத்துவர் நிலைமையின் விபரீதத்தை மகப்பேற்று வைத்திய நிபுணருக்கு அறிவிக்கவேண்டும். Cannula செலுத்துவதில் தாதிக்கு ஏதாவது சிக்கல் நிலைமை இருந்தால் அந்த நேரத்தில் on call மருத்துவர் இல்லாதவிடத்து உணர்வழியியல் மருத்துவ அணியினரை OPD மருத்துவர் மூலம் அழைக்க வேண்டும்.
எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப் படையில் உணர்வழியியல் மருத்துவ அணியின் விசேட வைத்திய நிபுணர் உள்ளடங்கலாக, அந்த தாய் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் முழு ஆயத்த நிலையில் இருந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு தகவல் செல்லவில்லை. அவர்கள் மறுநாள் காலை ஏழு மணியின் பின்னரே அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் அந்த தாய் மீள் ஈடு செய்யமுடியாதளவு குருதியை இழந்து மயக்க மடைந்து Peripheral Shutdown நிலைக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு அவர்களுக்கு அங்கே செய்துகொள்ள பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை.
எனவே Emergency escalation protocol activation இலும் பிரச்சனைகள் உள்ளன.
- குருதிப்பெருக்குடன் வந்த தாய் பல தடவைகள் குளியலறைக்கு கழுவிவிட்டு வரு மாறு நடத்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் பிழையான ஒரு நடைமுறை. அவரை Wheel chair இல் கொண்டு செல்ல அங்கு சுகாதாரப்பணி உதவியாளர்கள் எவரும் கடமையில் இருக்கவில்லையா என்பது இங்கு மிகப்பெரும் கேள்வி.
ஆக மொத்தத்தில் மன்னார் மாவட்ட மருத்துவ நிர்வாகி கூறுவது போல “ஒரு மருத்தவ ரின் அலட்சியதினால் தான் மரணம் நிகழ்ந்தது, மாவட்டப் பொது வைத்தியசாலையில் மருத்து வர்கள் இருவாரம் வேலைசெய்துவிட்டு இருவாரம் வீட்டில் நிற்கின்றார்கள்” (அவர் மாதத்தில் எத்தனை நாட்கள் வேலை செய்கிறார் என்று எவரும் கேட்டு தயவுசெய்து எவரும் அவரைச் சங்கடப்படுத்த வேண்டாம் ) என்பதை நம்பி அந்த மருத்துவருடன் இந்த விடயத்தை கடந்து சென்றால் இது போன்ற மரணங்கள் தொடர்ந்து இடம்பெறுவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது.
திணைக்கள விசாரணை பயன்தருமா?
ஒருவேளை நியாயமாக திணைக்கள விசாரணை இடம்பெற்றால் தவறு நிகழ்ந்த இடத்தில் கடமையில் இருந்த ஒருசிலர் தண்டிக்கப்படலாம். ஆனால் தவறுக்கு பொறுப்பு கூறவேண்டிய மருத்துவ நிர்வாகிகள் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள். இதனால் இவ் வாறான தவறுகள், அலட்சியங்கள் தொடர்ந்து இடம்பெறும்.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, குறிப்பாக அந்த பச்சிளம் குழந்தைக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது. அதற்குரிய ஏற்பாடுகள் திணைக்கள விசாரணை நடைமுறைகளில் இல்லை. எனவே அநியாயமாக இறந்த சிந்துஜாவிற்கு நீதி கிடைக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்கவும் சட்ட நடவடிக்கையே உகந்தது.
என்னால் எவ்வாறு உதவ முடியும்?
22 பேர் அணியோ அல்லது மன்னாரையோ வேறு வடபுல மாவட்டங்களைச் சேர்ந்த சேர்ந்த சட்டத்தரணிகள் அணியோ தன்னார்வத்துடன் வழக்கொன்றை தாக்கல் செய்யும் பட்சத்தில் அதற்குரிய மருத்துவத் துறைசார் தொழிநுட்ப ஆலோசனைகளை எந்தவிதமான கட்டணமுமின்றி வழங்க நான் தயார். அதற்காக 0718474361 என்ற Wharsapp இலக்கம் மூலம் என்னைத் தொடர்பு கொள்ள முடியும்.அலட்சியதினால் ஏற்படும் மருத்துவத் தவறுகள் தண்டனைக்குரியவை என தெரிவித் துள்ளார்.
தற்போது எழும் கேள்வி என்னவெனில், இதுவரைகாலமும் விழலுக்கு இறைத்த நீராக தமது பணத்தை 98 விகித காடுகளை கொண்ட முல்லைத்தீவில் பனங்கொட்டை நட்டு சாதனை படைத்தும், மாதம் 2 இலட்சம் ரூபாய்கள் செலவில் பராமரிக்க வேண்டிய பாடசாலை விளையாட்டு மைதானத்தை பல இலட்சம் ரூபாய்கள் செலவில் அமைத்துக் கொடுத்தும் தம்பட்டம் அடிக்கும் புலம்பெயர் அமைப்புக்கள் இந்த படுகொலைக்கு நீதி வேண்டி போடப்படும் வழக்குகளை முன்னின்று நடத்த தமது உதவிகளை வழங்கவார்களா என்பது தான்?