அரசாங்கத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தமிழ் அரசியல்வாதிகள் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள், ஒட்டுமொத்த நாட்டினர். அத்துடன் இலங்கையில் உள்ள இராஜதந்திர சமூகம் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் என அனைவரையும் ஏமாற்றியுள்ளனர்.
பண்டாரவளையில் இடம்பெற்ற நிகழ்வு முற்றுமுழுதாக ஒரு ஏமாற்று வேலையாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவில் அவர் இவ்வாறு அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
பண்டாரவளையில் பெருந்தோட்டப் பயனாளிகளுக்கு காணி மற்றும் வீட்டு உறுதிகளை வழங்குவதாகத் தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்தின் அண்மைய நிகழ்ச்சித்திட்டம், வெறும் தெரிவினை அறிவிக்கும் கடிதத்தை விநியோகிக்கும் செயல் மாத்திரமே.
இந்திய வீடமைப்பு நிதியுதவித் திட்டத்தின் கீழ் 2,000க்கும் மேற்பட்ட தோட்டப் பயனாளிகளுக்கு வீடு மற்றும் காணி உறுதிகளை வழங்கியதாகக் கூறி, ஜே.வி.பி. அரசாங்கம் பண்டாரவளையில் பெரும் ஆரவாரத்துடன் ஒரு பிரமாண்டமான நிகழ்வை நடத்தியது. ஆனால் உண்மையில், புதிய வீடுகளோ, அடையாளம் காணப்பட்ட காணிகளோ இல்லை. அஸ்திவாரங்கள் கூடு இடப்படவில்லை. வெறும் தெரிவினை அறிவிக்கும் கடிதம் மாத்திரமே வழங்கப்பட்டன.
மேலும், இது ஒரு ஏமாற்று வேலையாகும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையகத் தமிழ் அரசியல்வாதிகள், கடந்த அரசாங்கத்தின் போது கட்டப்பட்ட 234 வீட்டுக்கான உரிமைப் பத்திரங்களை அந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வழங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் 2,288 சட்டபூர்வமான உறுதிகளை வழங்கியதாகப் பெருமையுடன் ஒரு வெற்றுப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தில் உள்ள ஜே.வி.பி தமிழ் அரசியல்வாதிகள் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களை, ஒட்டுமொத்த நாட்டையும், அத்துடன் இலங்கையில் உள்ள இராஜதந்திர சமூகம் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் என அனைவரையும் ஏமாற்றியுள்ளனர். அவர்கள் தமது சொந்தத் தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவையும் கேலிக்குள்ளாக்கியுள்ளனர்.