படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனுக்கு நீதி வேண்டும் என சர்வதேசத்திடம் கோரிக்கை!

இலங்கை பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் தமிழ் ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் கொல்லப்பட்டு 24 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரியுள்ள முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கம், அவருக்கு நீதி வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல என வலியுறுத்தியுள்ளது.

நிமலராஜன் மயில்வாகனம்  கொலை செய்யப்பட்டு  24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் கையொப்பமிட்ட ஊடக அறிக்கையில் சர்வதேச நீதித்துறை அதிகாரம் கொண்ட விசாரணையின் ஊடாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“நிமலராஜனுக்கான நீதி என்பது ஒரு வழக்கைத் தீர்ப்பது மட்டுமல்ல வன்முறை மற்றும் பயம் தடையின்றி நீடிக்க உதவும் கட்டமைப்பை அகற்றுவது பற்றியது. எனவே, இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறவும் மற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான உடனடி நடவடிக்கையாக, சர்வதேச ஊடக கண்காணிப்பாளர்கள், விசாரணையாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் நீதித்துறை அதிகாரம் பெற்ற விசாரணையை நாங்கள் கோருகிறோம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனம் படுகொலை செய்யப்பட்டு 24 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கு இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம், அவரது படுகொலை உள்ளிட்ட பலரது படுகொலைகளுக்கு  நீதி வழங்கப்படாமை இலங்கையில் தொடரும் தண்டனையின்மை கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதோடு, இது குற்றவாளிகள் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் செயல்பட அனுமதிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.