சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை தொடர்பான முறைப்பாடு குறித்த விசாரணைகளில் மேலும் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஏப்ரல் 29 அன்று சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
விசாரணைகளைத் தொடர்ந்து, தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இருவர் இன்று (06) காலை கைது செய்யப்பட்டனர்.
மாணவர்கள் இன்று பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இந்த முறைப்பாடு தொடர்பாக இதுவரை 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிஐடியினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர், பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த மரணம் பகிடிவதையுடன் தொடர்புடையது என்று கூறி, சக மாணவர் ஒருவர் சமனலவேவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.