நெருக்கடியில் ‘சிலோன் டீ’: போரால் முடங்கும் தேயிலை ஏற்றுமதி : மருதன் ராம்

பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை யின் அந்நியச் செலாவணி ஈட்டலில் முது கெலும்பாகத் திகழும் தேயிலைத் துறை, தற்போது ஒரு பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் இராணுவ மோதல்கள், இலங்கையின் தேயிலை ஏற்றுமதியை நிலைகுலையச் செய்துள்ளன. உலகின் மிகச்சிறந்த தேயிலையாகக் கருதப்படும் ‘சிலோன் டீ’ (Ceylon Tea) சர்வதேசச் சந்தைக்குச் செல்வதில் ஏற்பட்டுள்ள இந்த முட்டுக்கட்டை, நாட்டின் பொருளாதார மீட்சியில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தேயிலையை விநி யோகிக்க முடியாத சூழல் நிலவுவதால், ஏற்றுமதியாளர்கள் வாரத்திற்கு சுமார் 10 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் வரை வருவாய் இழப்பைச் சந்திப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையின்படி, ஏற்றுமதியாளர்களின் கைகளில் போதுமான கொள்முதல் ஆர்டர்கள் (Orders) இருந்தபோதிலும், தளவாடச் சிக்கல்கள்  மற்றும் போர்க்கால அபாயங்கள் காரணமாக அவற்றை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை யின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் சுமார் 52% மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளது.
குறிப்பாக, நாட்டின் கீழ்நாட்டு நிலப்பரப்பு பகுதிக ளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கே அங்கு பெரும் வரவேற்பு உள்ளது. இத்துறை பெரும்பாலும் சிறு தேயிலை தோட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 125 மில்லியன் கிலோகிராம் தேயிலை மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இதன் மதிப்பு 750 மில்லியன் அமெரிக்க டொலர் களாகும். ஈராக், ஈரான், லிபியா, துருக்கி, சவுதி அரேபியா, சிரியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் இலங்கையின் பிரதான சந்தைகளாக திகழ்கின்றன. எனினும் ஆப்பிரிக்கா வழியாக லிபியா மற்றும் துருக்கியை அடைய மாற்று வழிகள் இருந்தாலும், மிக அதிகப்படி யான சரக்குக் கட்டணங்கள் காரணமாக வர்த்தகம் சாத்திய மற்றதாகியுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி ஸ்தம்பித்ததற்கான பிரதான காரணங்கள்
மத்திய கிழக்கிற்கான கடல்வழிப் போக்குவரத்து ஹார் முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் சூயஸ் கால்வாய் ஊடாகவே நடைபெறுகிறது. தற்போதைய போர்ச் சூழல் இந்த வழித்தடங்களை முற்றாகப் பாதித்துள்ளது. மோதல் வெடித்தவுடன் முன்னணி கப்பல் நிறுவனங்கள் அனைத் தும் இப்பிராந்தியத்திற்கான தமது சேவைகளைத் தற்காலி கமாக நிறுத்தின.
ஆரம்பக் கட்டத்தில் மத்திய கிழக்கின் பல முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டமை விநியோகச் சங்கிலியைத் துண்டித்தது. அதேநேரம் மார்ச் 4 முதல் சில நிறுவனங்கள் சேவையைத் தொடங்கினாலும், கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. ஒரு 20 அடி கொள்கலனுக்கு1,800 டொலர்களும், 40 அடி கொள்கலனுக்கு 3,000 டொலர்களும் அறவிடப்படுகின்றன.
இதேவேளை போர் அபாயம் காரணமாக, ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே பெற்றிருந்த காப்பீட்டுத் தொகைகள் தற்போது செல்லு படியற்றதாக மாறியுள்ளன. கொழும்பிலிருந்து இப்பிராந்தி யத்திற்குச் செல்லும் வழக்கமான கப்பல்களின் எண் ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதேநேரம் மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதலால் ஏற்றுமதியில் ஏற் பட்டுள்ள முட்டுக்கட்டை கொழும்பு தேயிலை ஏலத்திலும் எதிரொலிக்கத் தொடங் கியுள்ளது.
போதிய கொள்முதல் திறன் இல்லாததால், இந்த வார ஏலத்தில் தேயிலையின் சராசரி விலை கிலோ ஒன்றிற்கு சுமார் 50 ரூபாய் குறைந்துள்ளது. குறிப்பாக, குறைந்த விளைச்சல் கொண்ட தேயிலை விலைகள் கிலோ ஒன்றிற்கு 75 ரூபாய் வரை சரிவைக் கண்டுள்ளதாக தரகர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அனுப்பப்பட்ட ஏற்றுமதிகளுக்கான கொடுப் பனவுகள் தாமதமாவதால், ஏற்றுமதியாளர்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளனர். இது அவர்கள் ஏலத்தில் புதிய தேயிலையை வாங்கும் திறனைக் குறைத்துள்ளது.இந்த நிலை நீடித்தால், தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்களின் வருமானம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.
ஈரான் உடனான ‘பண்டமாற்று’ சிக்கல்
இலங்கை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையி லான ‘எண்ணெய்க்கான தேயிலை’ ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை தனது பழைய கடனில் சுமார் 95 சதவீதத்தை அடைத்துவிட்டது. இருப்பினும், தற்போதைய மோதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகள் காரணமாக புதிய சிக்கல்கள் எழுந்துள்ளன.
பண்டமாற்று ஒப்பந்தத்தின் கீழ் ஏற்கனவே அனுப்பப்பட்ட தேயிலைக்காக கிடைக்க வேண்டிய சுமார் 50 மில்லியன் டொலர்களை இன்னும் பெற முடி யாத சூழல் உள்ளது. புதிய பொறிமுறை ஒன்று உரு வாக்கப்படாவிட்டால், ஆண்டுதோறும் 11 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளது. இந்தநிலையில் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர்  பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்ட மைப்பு அமைச்சரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழில்துறையை பாதுகாப்பதற்கு இதன்போது சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஏற்றுமதியாளர்களின் பணப்புழக்கப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. கூடுதல் சரக்கு மற்றும் காப்பீட்டுக் கட்டணங்களில் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்குமாறு கோரப்பட்டுள்ளது. ஈரானிடமிருந்து வர வேண்டிய 50 மில்லியன் டொலர்களைப் பெற்றுத் தருவதற்கு அரசு உடனடியாக ராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியான அழுத்தங்களும் அமைச்சரின் உறுதிமொழியும்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்கள் இலங்கை தேயிலைத்துறையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து, கடந்த சில நாட்களில் அரசியல் மட்டத்தில் பல விவாதங்களும் கருத்துக்களும் வெளியாகியுள்ளன. குறிப் பாக, பொருளாதார மீட்சிக்கும் விவசாயிகளின் வாழ் வாதாரத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
தேயிலை ஏற்றுமதியில் 50% க்கும் அதிகமானவை சிறு தோட்ட உரிமையாளர்களிடமிருந்தே பெறப்படுகிறது. தேயிலை ஏலத்தில் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், தென் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள இலட்சக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளன. “அரசாங்கம் சுற்றுலாத்துறையில் காட்டும் அக்கறையை, நாட்டின் பாரம்பரிய அந்நியச் செலாவணி ஈட்டும் தேயிலைத்துறையில் காட்டவில்லை” என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை தனது கச்சா எண்ணெய் கடனை அடைத்து வந்தது ஒரு ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நிலுவையில் உள்ள 50 மில்லியன் டொலர் தொகையைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை மீதான விமர்சனமாக மாறியுள்ளது. ஈரான் மீதான சர்வதேசத் தடைகளுக்கு மத்தியிலும் இந்த வர்த்தகத்தை எவ்வாறு பாதுகாப்பாகத் தொடர்வது என்பதில் அரசாங்கத்திடம் தெளிவான மாற்றுத்திட்டங்கள் இல்லை என்று சில அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் மத்திய கிழக்கு மோதல்கள் குறித்து நடுநிலையான போக்கைக் கடைபிடிக்க முயல் கிறது. இருப்பினும், வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்க சர்வதேசக் கூட்டணியுடன் இணைவது அவசியமா அல்லது அது அரபு நாடுகளுடனான உறவைப் பாதிக்குமா என்ற அரசியல் விவாதம் தற்போதைய தேயிலை நெருக்கடியால் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் அண்மையில் தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் உள்ளிட்ட ஏனைய துறைசார் தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்கவும், காப்பீட்டுத் தொகையில் சலுகைகளை வழங்கவும் அமைச்சரவை அனுமதி பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். எனினும், திறைசேரியின் தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்த மானியங்கள் வழங்கப்படுமா? என்பதில் பொருளாதார வல்லுநர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். 2026 ஜனவரியில் தேயிலை ஏற்றுமதி வருவாய் 5% உயர்ந்து 121.8 மில்லியன் டொலராக பதிவாகி நிதி சந்தையில் நம்பிக்கையளித்த நிலையில், மார்ச் மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறு பாரிய பின்னடைவைத் தந்துள்ளது. தேயிலைத் துறை என்பது வெறும் வர்த்தகம் மட்டுமல்ல, அது லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகும். மத்திய கிழக்கில் அமைதி திரும்புவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இலங்கை அரசாங்கம் இக்கட்டான சூழலில் இருக்கும் தேயிலைத் தொழில்துறைக்கு  உதவுவதாகும். இல்லையெனில், சர்வதேசச் சந்தையில் ‘சிலோன் டீ’ தனது செல்வாக்கை இழக்கும் அபாயம் ஏற்படும்.