செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பிரித்தானிய பாராளுமன்றில் தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மனிதப்புதைகுழி மற்றும் அதற்கு சமாந்தரமான குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்குரிய முயற்சிகளுக்குத் தலைமைத்துவம் வழங்க முன்வரவேண்டும் என்றும் பிரித்தானியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அந்த நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் (Keir starmer) கடிதமொன்றை கையளித்து இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். குறித்த கடிதத்தில் செம்மணி விவகாரம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் பிரித்தானியாவின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.
அரச அனுசரணையுடனான ஒடுக்குமுறைகளால் தமிழ் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமை, தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியின் ஊடாக மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணிப்படுகொலை என்பது தனியொரு குற்றச்செயல் அல்ல என்றும், மாறாக அது நீண்டகாலமாகத் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்புத் திட்டத்தின் ஓர் அங்கம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவித் தமிழ் மக்களின் எலும்புக்கூடுகளால் நிறைந்திருக்கும் செம்மணி மனிதப்புதைகுழி, தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் போக்கு தொடர்கிறது என்பதற்கான சான்று என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் நீதி நிலைநாட்டப்படுவதை ஆதரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதுடன் செம்மணி விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், செம்மணி உள்ளடங்கலாகத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறும் பிரித்தானியாவிடம் வலியுறுத்த வேண்டும். அத்துடன் செம்மணிப்படுகொலை தொடர்பான பொறுப்புக்கூறலைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர் தாயகப்பகுதிகளில் இராணுவ ஒடுக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்துவதுடன் தமிழர்களை இலக்குவைத்துத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான ஒடுக்குமுறைகள் மற்றும் நில அபகரிப்புக்களை கண்டிக்க பிரித்தானியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்கள் கோரியுள்ளனர்.