நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மாற்றியமைப்பதற்கும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கான மசோதா அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மசோதாவின்படி, அரசியலமைப்பின் 107(5) ஆவது பிரிவில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 67 வயதை எட்டியதும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதை எட்டியதும் ஓய்வு பெற வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, தலைமை நீதிபதி 67 வயதை எட்டும்போதோ அல்லது ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்யும்போதோ, இவ்விரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அந்தச் சந்தர்ப்பத்தில் ஓய்வு பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது பிரிவிலும் திருத்தம் செய்ய இந்த மசோதா முன்மொழிகிறது.
மேலும், இந்தச் சட்டத்தின் சிங்கள மற்றும் தமிழ் மொழி உரைகளுக்கு இடையே ஏதேனும் முரண்பாடு ஏற்படும் பட்சத்தில், சிங்கள மொழி உரையே மேலோங்கும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



