நாம் தமிழர் கட்சியினரை அச்சுறுத்தவே என்ஐஏ சோதனை – சீமான் கடும் சீற்றம்

seeman நாம் தமிழர் கட்சியினரை அச்சுறுத்தவே என்ஐஏ சோதனை - சீமான் கடும் சீற்றம்“சட்டத்துக்கு எதிராகவோ, சட்டம் – ஒழுங்கு சீர்கேடும் வகையிலான செயல்பாடுகள் எதுவும் நாம் தமிழர் கட்சியில் இல்லை. உளவுத் துறை, காவல்துறை, அதற்கு மேல் றோ அமைப்பு இருக்கிறது. இதெல்லாம் வைத்து கண்காணித்துவிட்டு, இப்போது திடீரென்று என்ஐஏ அதிகாரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று கண்காணிப்பதாக கூறுவது, தேர்தல் நேரத்தில் அச்சுறுத்திப் பார்ப்பது போன்றதுதான்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இல்லத்தில் என்ஐஏ சோதனை நடத்தியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, மக்கள் பாதையில், ஜனநாயக வழியில் மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட ஓர் அரசியல் பேரியக்கம்.

தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து, அவர்களிடமே சின்னம் ஒதுக்கக் கோரி போராடி வருகிறோம். மக்களுடன் நின்று தேர்தலை எதிர்கொண்டு வருகிறோம். இரண்டாவதாக, கட்சி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துமே, அரசு மற்றும் காவல் துறையின் ஒப்புதல் பெற்றுத்தான் நடத்தப்படுகிறது. சட்டத்துக்கு எதிராகவோ, சட்டம் – ஒழுங்கு சீர்கேடும் வகையிலான செயல்பாடுகள் இல்லை. இது அனைவருக்கும் தெரியும்.

உளவுத்துறை, காவல் துறை, அதற்கு மேல் றோ அமைப்பு இருக்கிறது. இதெல்லாம் வைத்து கண்காணித்துவிட்டு, இப்போது திடீரென்று என்ஐஏ அதிகாரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று கண்காணிப்பதாக கூறுவது, தேர்தல் நேரத்தில் அச்சுறுத்திப் பார்ப்பது போன்றதுதான். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் அனுப்புவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வெகு நாட்களாக அனைவரும் , விடுதலைப் புலிகள் அமைப்பிடம் இருந்து எனக்கு பணம் வருவதாக கூறிவந்தனர். ஆனால், இப்போது இவ்வாறு நாங்கள் பணம் கொடுக்கிறோமா என்று கேட்கின்றனர்.

விடுதலைப் புலிகள் எங்கே இருக்கிறது? விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்துவிட்டதாக நீங்கள்தான் ஊர் ஊராகச் சென்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். யூடியூப் வைத்து நிதி திரட்டி ஒரு இயக்கத்துக்கு காசு கொடுத்துவிட முடியுமா என்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. நியாயமாக அழைப்பாணை கொடுத்து என்னிடம்தான் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். எனக்கு தெரியாமல் என்னுடைய கட்சியில் என்ன நடக்கும்? கட்சியை வழிநடத்தி செல்வதும், கட்சிக்கு முழு பொறுப்பும் நான்தான்.

துரைமுருகனாவது ஒரு யூடியூப் சேனல் வைத்துள்ளார். இரண்டு, மூன்று முறை சிறைக்கு சென்றுவிட்டார். சிறியவர்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் கிராமங்களுக்குச் சென்று அச்சுறுத்திப் பார்த்துள்ளனர். எனவே, நானே விசாரணைக்கு செல்ல இருக்கிறேன். காரணம் இவர்கள் அனைவருக்கும் பொறுப்பு நான்தான். எனவே, என்ஐஏ சோதனை அவசியமற்றது. சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், நடவடிக்கை எடுக்கட்டும்.

வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒன்றுதான். அவர்கள் என்னை விசாரிப்பார்கள் என்று நினைத்தேன். சிஏஏ குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசும்போது, இது இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரானது என்று அவர் பேசிய காணொளி இருக்கிறது. எனவே, அவர்கள் இப்படி ஒவ்வொருவராக சோதனை செய்துவிட்டு, தேர்தல் நேரத்தில் என்னை வந்து தூக்குவார்கள். அவர்களது நகர்வுக்கு எவ்வளவு தூரம் தடையாக இருப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால், என்னை தூக்குவார்கள்” என்று சீமான் கூறினார்.