நாமல் களமிறங்கினால் பொது ஜன பெரமுனவுக்குள் பிளவு வரும் – எச்சரிக்கிறாா் பிரசன்ன

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கும் வேட்பாளரே வெற்றி பெறுவார். சவாலுக்கு மத்தியில் இந்த நாட்டை முன்கொண்டு செல்லக்கூடிய ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கு பொருத்தமானவரும் அவரே.

நாமல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு அவருக்கு மேலும் காலஅவகாசம் காணப்படுவதாக அவரது தந்தை மஹிந்த ஒருசந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். எனவே பல வருட கால அரசியல் அனுபவம் கொண்ட ஒருவரால் முன்வைக்கப்படும் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தாம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னிலையாக போவதாக அவர் இதுவரை கூறவில்லை. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாமல் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிற்ஙகினால் கட்சிக்குள் பிளவு ஏற்படும். எனவே கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாமல் ஒருபோதும் எடுக்கமாட்டார். பொதுஜன பெரமுனவுக்குள் விரிசல் ஏற்படாத வகையிலேயே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளனர்” என்றார்.