நான்கரை வருடங்களில் அரசியல் கைதிகள் யாரையாவது கூட்டமைப்பு விடுவித்ததா? சுரேஷ் கேள்வி

தமிழ் அரசியல் கைதிகள் எவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளினூடாக விடுவிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நான்கரை வருடங்களாக எதிர்க் கட்சியாக இருந்து, த.தே.கூ எதைச்சாதித்தது என்று வினவினார்.

யாழ். ஊடக அமையத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டில் ஓர் இராணுவ ஆட்சி வரவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ள நிலையில், தாங்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் சென்றால், மீண்டும் தாங்கள் எதிர்க்கட்சியாக வந்து, பல விடயங்களைச் சாதிக்கலாம் என்றும் கூட்டமைப்பினர் தெரிவித்து வருகிறார்கள் என்றும் சாடினார்.

ஆனால், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், புதிய அரசியல் சாசனம் ஆகிய எதையும், கூட்டமைப்பினர் வெற்றிகொள்ளவில்லை என்பதே உண்மை என்றும் கூறிய அவர், 91 அரசியல் கைதிகளுக்கு மேலான வழக்குகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தாங்கள் சிலஅரசியல் கைதிகளை விடுவித்துள்ளோம் என்று த.தே.கூ கூறுவது, அப்பட்டமான பொய் என்றும் கூறினார்.