நாட்டை கட்டியெழுப்பும் கூட்டு முயற்சியில் நாம் அனைவரும் கைகோர்ப்போம்: ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கருத்து

ஒரு நாடாக நம் முன்னால் உள்ள சவால்களை முறியடித்து நாம் விரும்பும் முன்னேற்றகரமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரின் கூட்டு முயற்சி முக்கியமானது. ஹஜ் கொண்டாட்டம் அந்த பொதுவான நோக்கத்திற்காக கைகோர்க்க ஒரு சிறந்த தளத்தை உருவாக்குகிறது. உலக மக்கள் அனைவரின் இதயங்களிலும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் தியாக உணர்வுகளை உருவாக்கும் ஹஜ் கொண்டாட்டம் உலக அமைதிக்கான ஒரு சிறந்த செய்தியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்த ஜனாதிபதி, அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

“உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் இன்று சனிக்கிழமை (7) ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள் இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா யாத்திரையின் காரணமாக தனித்துவமானதாக அமைகிறது.

மதம் மானிட சமூகத்தை மனித நேயத்துடன் பூரணப்படுத்தவும் நல்ல சமுதாயத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து வருகை தருகின்ற அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் இறைவனை வணங்குவதற்காக மக்காவிற்கு வரும் இந்த ஹஜ் யாத்திரை ஏனைய அனைத்து மதங்களுடனும் சமத்துவமாக வாழும் போதனையை உள்ளடக்கியது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும் இந்த ஹஜ் யாத்திரை அர்ப்பணிப்பு மற்றும் தியாக வாழ்க்கை தொடர்பான உதாரணங்களை சித்தரிப்பதுடன்  ஹஜ் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கமாகவும் இது இருக்கின்றது.உண்டு – இல்லை என்ற இடைவெளி மற்றும் வேறுபாடுகளைக் கடந்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவது ஹஜ்ஜின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

ஒரு நாடாக நம் முன்னால் உள்ள சவால்களை முறியடித்து நாம் விரும்பும் முன்னேற்றகரமான மற்றும் நாகரிகமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை மேற்கொள்வதில் அனைவரின் கூட்டு முயற்சி தலையீடு மற்றும் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.ஹஜ் கொண்டாட்டம் அந்த பொதுவான நோக்கத்திற்காக கைகோர்க்க ஒரு சிறந்த  தளத்தை உருவாக்குகிறது என்பதையும் நான் இங்கு நினைவுகூர்கிறேன்.

உலக மக்கள் அனைவரின் இதயங்களிலும் சமத்துவம் சகோதரத்துவம் மற்றும் தியாக உணர்வுகளை உருவாக்கும் ஹஜ் கொண்டாட்டம் உலக அமைதிக்கான ஒரு சிறந்த செய்தியாகும்.

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் வெறுப்புடனும் பார்க்கும் சமூகத்திற்குப் பதிலாக அனைவரும் சகோதரத்துவத்துடனும் அன்புடனும் வாழும் முன்னேற்றகரமான மற்றும் நாகரிகமான நாட்டைக் கட்டியெழுப்ப நமது அரசாங்கம் எடுக்கும் முயற்சியில் தமது புனிதமான நம்பிக்கையுடன் அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்றாகக் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாள் நமது பயணத்திற்குப் பெரும்  ஆசிர்வாதம் ஆகும்.

இந்நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!”